Monday, 8 December 2014

பூஜைக்கான பூக்கள்...


பட்டாய் ஐந்திதழ்கள்
சிட்டொன்று அந்தரத்தில்
சுற்றுமுற்றும் பார்க்கவில்லை
சுதந்திரமாய் தேனருந்தியது...

கிணற்றடி மூலையிலே
பனிவிழுந்த செம்பருத்தியையும்
தேனருந்தும் சிறுசிட்டையும்
மதிமயங்கி இரசித்திருக்க
கிருஷ்ணன் கோவில் ஐயா வந்தார்
கிறுகிறுவெனப் பூக்களைக் கொய்தார்...

பூவுக்கு வலிக்குமோ
ஒரு கணம் வலித்தது
பூஜைக்கான பூக்கள் அல்லவா
ஏதும் சொல்லவில்லை...
கொய்யாப்பழம் கொந்தும்
கொய்யாமரக் கிளியை இரசிப்பதற்கு
மௌனமாய் நகர்ந்து சென்றேன்...

---கீர்த்தனா---

Thursday, 13 November 2014

வசந்தப்பூ

எதற்கோ பெரும் பிரயத்தனப்பட்டுக்கொண்டே இருக்கின்றோம்!
காலம் நம் பாதைக்குள் சிறைப்பட மறுக்கிறது என்பது நிஜம்!
காலம் கோடு போட்ட பாதையில் பயணத்தின் நிர்ப்பந்தம்!
வசந்தப்பூ ஒன்று எங்கோ காத்திருக்கும் என்ற நம்பிக்கை
நடையைத் துரிதப் படுத்துகின்றது!

அது கிடைக்காமலே கூட வாழ்க்கை அஸ்தமிக்கலாம்!
எத்தனை துயர்வரினும் போகின்ற போக்கில்
நிலவை ரசிப்பவன் ரசித்தபடி கடக்கின்றான்!
ஏதோ ஒரு கோளம் வானில் என்று
உணர்சியற்றுப் பார்த்தபடி இன்னொருவனும்
கடந்து போகின்றான்!

ஆயுளில் நம் பங்கை பிறந்த சிலநாளிலோ,
நான்கில் ஒன்றாகவோ, இரண்டாகவோ, 
மூன்றாகவோ இல்லையெனில்
முழுமையாகவோ விதித்து வைத்திருக்கலாம்!
இன்றைய நாம் மற்றவர் கண்முன்னே
நாளையே காணாமற் போகலாம்!

இனி நிலவினை ரசிப்பதும்
இல்லையெனில் வெறித்தபடி கடப்பதும்
உற்றவர் உணர்வுகளை மதிப்பதும்
இல்லை மிதிப்பதும்
நம் தீர்மானங்களில் மட்டுமே....

---கீர்த்தனா---

Tuesday, 23 September 2014

கூட்டல், கழித்தல், பெருக்கல்...

கூட்டிக் கொள் கூட்டிக்கொள்...
பெற்றோரிடம் பாசம் நுகரும் நேரத்தினை!
வாசிப்புச்சுவாசிப்பின் அளவுகோலை!
மனிதம் கொழிக்கும் நல்மனதை!
மாண்புடன் நடக்கும் நன்மதிப்பை!
இயற்கையை காக்கும் விழிப்புணர்வை!
ஒளவை சொல்லிய நன்னெறியை!
ஐயன் சொல்லிய பாடங்களை!
இன்னும் இனியவை ஆயிரத்தை!

இனிக் கழிக்கின்ற பொருள் சொல்வேன்...
கனிவுடனே நீயும் கேள்!!
ஹார்மோன்கள் ஆட்டி வைக்கும்
இளவயது உடல்மாற்றம்!
விடம் போல குடியேறும்
மனதினிலே தடுமாற்றம்!
தடம் மாறும் எண்ணங்கள்
தடை தாண்ட இடம் தேடும்!
விடாது கருப்பு என
தொடத் துடித்து உனைத் துரத்தும்!
அடாத சகவாசம்
அடங்காமல் உனை அழிக்கும்!
விட்டுவிடாதே மொத்தமாய்
உனை உயிரோடு முழுங்கிவிட!
கழித்துவிடு கடைநிலை அசிங்கங்களை
இழிவுகள் என்றுமே உகந்தவை அல்ல!

சுற்றம் பந்த பாசங்களை
சற்றுத் தள்ளிப் பூட்டி வைத்து
மின்திரைகளுக்குள் கூட்டி வைத்திருக்கும்
பொன்னான நேரத்தையும் கொஞ்சம்
இங்கே கழித்து அங்கே கூட்டிக்கொள்!

பெருக்கிக் கொள் இன்னும் பெருக்கிக் கொள்!
பொங்கிப் பெருகும் பாசத்தினை!
மங்காமல் ஒளிரும் பேரறிவை!
இலட்சியம் நோக்கிய பெருங்கனவை!
ஈகம் செய்திடும் இறைமனதை!
நாவினால் சுடா வார்த்தைகளை!
தவறுகள் பொடியாக்கும் எண்ணத்தினை!
தாய்த்தமிழ் வளர்ச்சிக்கு உன்பங்கினை!
பறந்து செல்லும் தூரத்தினை!
பந்தயக் குதிரையின் வேகத்தினை!

வேறென்ன இன்னும் சொல்ல
வான் பறவை நீ பறந்து பறந்து செல்லு...
பொன்னொளி தோன்றும்
வண்ணத் திசை தனை நோக்கி...

---கீர்த்தனா---

புன்னகையை பொன்னகையாக்கி...

சிரிப்புக்குப் பின்னே ஒளிந்திருக்கும்
சிந்திய விழித் துளிகள்
சொந்தமாய் சிலரிடம்...

புன்னகை இதழ்களுக்குள்
புதைத்து வைக்கப்படும்
புண்பட்ட உணர்வுகள் ஆயிரம்...

புன்னகையை பொன்னகையாக்கி
இன்னொரு நெஞ்சம் மலர வைக்க
இன்னுயிரை மண்ணுலகில் உயிர்ப்பித்தவன்
என்னுயிரையும் பிரிய உயிர்களையும்
உள்ளிருந்து இயக்கட்டும்...

---கீர்த்தனா---

மந்தையில் விலகிய ஆட்டுக்குட்டி...

மேய்ப்பனை விட்டு
மந்தையில் விலகிய
ஆட்டுக்குட்டியின்
பயந்த பார்வை, தேடல்

இடத்தை விட்டு
அகலாமல் விழிக்கும்
அலைக்கழிந்த பார்வை...
இயக்கமின்றிய இயக்கம்...

மேய்ப்பவன் மந்தையை
எண்ணிப் பார்த்த பின்
பதற்றத்துடன் ஓடிவரும் வரை...
வேதனை வேட்டை மிருகங்கள்
ஆட்டுக்குட்டியை
அடித்துச் சாப்பிடாமல்...
இருக்கட்டும்...

எல்லா வலி மிகுந்த
ஆட்டுக்குட்டிகளையும்
மேய்ப்பவன் பாதுகாக்கட்டும்...


---கீர்த்தனா---

Monday, 18 August 2014

நிறுத்தப் போவதில்லை!


கொஞ்சமாய் உதிரும் சிறகுகள்!
மெல்லமாய் குறையும் ஆயுள்!
மெதுவாய் மங்கும் வண்ணங்கள்!
மொத்தமாய் அழியட்டும் அழகு!
பறத்தலையும் ரசித்தலையும்
சுவைத்தலையும் தேடலையும்
உயிர்நீத்தல் வரை
நிறுத்தப் போவதில்லை!

* பட்டாம்பூச்சி*

---கீர்த்தனா---

வைரக் காத்திருப்புகள்...

வைரக் காத்திருப்புகள்...
*********************************
புலர்ந்த காலையில்
புலம் பெயர்ந்து சென்ற
நேசப்பறவைகள் எங்கே?

இறகுகளுக்குள் மூடிய பாசம்
வெம்மைக் கதகதப்புடன்
பாதுகாப்பாய்....

வைரக் காத்திருப்புகள்
என்றுமே வீண்போவதில்லை...

---கீர்த்தனா---

Friday, 25 July 2014

உயிர்ப்பலி ...


எங்கும் செங்குருதி வீச்சம்!
தனக்கு தனக்கு நடக்கையில்
கொதிக்கும் நெஞ்சங்கள்,
அயல் வீட்டில் அயல் நாட்டில்
நடக்கும் சம்பவங்களை
உச்சுக் கொட்டியபடி கடந்து செல்கின்றன!

மனிதத்தை கொன்று குவித்தபடி
மரிக்கும் போது,
கொண்டு செல்ல முடியாதவற்றுக்கான
போராட்டம்!
சிலருக்கு தான் ஆறடி மண் கூட சொந்தம்!
தணலில் வெந்து போவோருக்கு அதுவுமில்லை!

வாழும் காலத்துள் எளியோரை
ஏன் வருத்துகிறார்கள்!
எதற்காய் இன்னொருவர் உரிமைகளை
உயிர்ப்பலி வாங்கிப் பிடுங்குகிறார்கள்!

அப்பாவியாய் உயிர் துறக்கும்
எல்லா ஜீவன்களுக்குமாய்
எதுவுமே செய்ய முடியாமல்
உள்ளே கலங்குவோராய் மட்டுமாய்...
இல்லையெனில் குமுறல்களை
எழுதிக் கொட்டுவோராய் மட்டுமாய்...
வாழ்க்கை தொடர்கிறது!

---கீர்த்தனா---

Tuesday, 15 July 2014

தேவைகள்...

அடிப்படைத் தேவைகள் - பின்
அடுத்த தேவைகள் - அதன் பின்
ஆடம்பரத் தேவைகள்

ஆசைகள் அடங்குவதில்லை
தேவைகளின் பெருக்கம் குறைவதில்லை
பணத்திற்கான அலைச்சலில்
வாழ்வியலின் அழகு அடிபட்டுச் செல்ல
உறவுகளிலும் விரிசல்கள்...!

பணம் பணம்...
பணமே இன்றைய வாழ்வின்
அழகியல் நிர்ணயம் ஆனதன்றோ...

திரும்பிப் பார்க்காமல்
ஓடிக்கொண்டிருக்கும் மனிதர்கள்!
கொஞ்சம் நின்று சுற்றும் பாருங்கள்...
கொஞ்சும் இயற்கையின் இயல்புகள்
நெஞ்சை இனிதாய் நிறைக்குமல்லவா...!

---கீர்த்தனா---

Wednesday, 2 July 2014

உணர்கொம்பு


உணர்கொம்புகளில்
உயிர் ராகம்...
பாறை விளிம்பில்
பாசத் தேடல்...
உறைந்து போன தனிமைக்குள்
மறந்து போன பூக்களின் வண்ணங்கள்...
வண்ணத்துப் பூச்சிக்கும்
எண்ணங்கள் சிதறுமோ....

---கீர்த்தனா--- (கீதா ரவி)

My click
Camera: Sony SLT 58A

Tuesday, 1 July 2014

மழையின் ஸ்வரம்

குளிர்கூதல் உறவாடும்
அழகான மழைநேரம்!
அதிகாலைச் சிறுகுருவி
நனைந்து பாடும் சுகராகம்!

சடசடக்கும் மழைத்துளிகள்
சலசலத்து சுழித்தோட
தலைதூக்கும் பசும்புற்கள்
அலைச்சுழிப்பில் சுழன்றாட
குளித்துவிட்ட மரக்கூந்தல்
குளிர்ச்சியுடன் அசைந்தாட

காரிருளின் திரட்சியிலே
அச்சுதனின் முகம் தோன்ற
அழகனவன் செவ்வாய்ச் சிரிப்பு
சிந்தையிலே ஸ்வரம் பாட
குழலிசையின் நாதமெங்கொ
கற்பனையில் கரைந்து வர

தோகைமயில் ஆடலுடன்
செங்கார்த்திகைப் பூக்களும்
தேங்கிய குட்டைகளும்
அதில் மிதந்த கப்பல்களும்
புலம்பெயர்ந்து வந்திங்கே
சிலகணங்கள் நினைவிலாட
மழையின் ஸ்வரம்
மனதினிலே சுகம்...

---கீர்த்தனா--- (கீதா ரவி)

Friday, 6 June 2014

அநீதி...

கறந்த பாலை அருந்துகையில்
கருத்தினிலே ஒரு நெருடல் 
தட்டிப் பறித்துண்ணும் காக்கையினம் 
ஏனோ நினைவினிலே...

குட்டிக் கன்றின் பசியுணர்வும் 
ஒட்டிப் போன அரை வயிறும் 
சுட்டிக் காட்டின அநீதியென... 
உள்ளே இடித்தது மனச்சாட்சி 
பாலின் சுவையில் கசப்புணர்வு!

கல்சியம் குறைந்து விட்டதாம் 
மருத்துவரை சாக்கு சொல்லி 
அருந்துகிறேன் தொடர்ந்தும்...
சாதாரண மனிதகுணம் வழமை போலவே...
:(
---கீர்த்தனா--- 


Friday, 23 May 2014

சாத்தியமற்ற தூதுகள்...

மறுத்துவிட்டு
சடசடத்து
பறந்து செல்கிறது
புறா கூட இன்று!!


சமாதானத் தூதுகள்
சமகால வாழ்வியலில்
சாத்தியமற்றவை
எனும் முடிவுடன்...


 ---கீர்த்தனா--- (கீதா ரவி)

காக்கும் அன்னையாய்...

காலத்தின் கட்டாயத்தில்
காவல் தெய்வமாய்
காக்கும் அன்னையாய் - இன்னும்
கனியாத சிறு பூவின் தாய்மை!!

கருணைக் கரங்களின் வாஞ்சையில்
கருசுமந்த தாயின் வாசனை முகர்ந்து
கண் அயர்ந்து கனவினில் சிரிக்கும்
கவலை அறியாச் சிறு முகை!!
 
---கீர்த்தனா---

Wednesday, 16 April 2014

சுயாதீனக் கோடுகள்

சுயாதீனக் கோடுகளின்
கையாட்சியில்
சிந்தனைப் படங்களை
வரைகின்றேன் இலகுவாக!

கனவுகளின் பதிப்புகளாய்
கவிகளும் ஓவியங்களும்
உணர்வுகளை கச்சிதமாய்
உள்வாங்குகின்றன!

உணர்வுகளின்
மொழிபெயர்ப்பை மட்டும்
உள்ளங்களில்
சரியாகப் பதிக்க முடியாமலே
பல நேரங்களில்...

---கீர்த்தனா--- (கீதா ரவி)

Sunday, 6 April 2014

சிறப்பதிதிகள்...


பட்சிகள்
************
துன்பங்கள் மரிக்கின்றன...
அலகு துழாவி இன்பம் துய்க்கும்
அழகுப் பட்சிகள் காதல் காண்கையில்...

சிறப்பதிதிகள்
*******************
சின்னஞ்சிறு தொண்டைக்குள்
சங்கீத ஸ்வர ஒலிகள்...
சிணுங்கலும் குலவலுமாய்
சிலிர்க்க வைக்கும்
சொர்க்கத்தின் சிறப்பதிதிகள்...

---கீர்த்தனா---


01.04.2014

Monday, 17 March 2014

விட்டுவிடு...

துரத்தாதே பறக்கட்டும்...
தூரமாய் காற்றில்
மிதக்கட்டும்...

எட்டிப் பிடிக்காதே
பட்டிறகை உதிர்த்து விட்டு
மரித்தல்லவா போய்விடும்...

பட்டாம்பூச்சி அழகு
படைக்கப் பட்டது,
பார்ப்பதற்கு மட்டுமே...

---கீர்த்தனா---

Tuesday, 11 March 2014

ஆதவனும் வரம் தந்தான்!

கருங் குச்சிக் கிளைகளுக்கு
இளங் குருத்து உடை வழங்க...
மனங் கொண்ட ஆதவனும்
மாதங்கள் பல கடந்து வந்து
மெதுவாக இருள் பிரித்து
மஞ்சள் வெயில் வரம் தந்தான்!

சன்னலோர ஏக்கங்கள் விடுத்து
கன்னம் தாங்கிய கரம் பிரித்து
வண்ணங்கள் அணியப் போகும்
வசந்த காலத்தை கட்டியணைக்க...
விழி கொள்ளா ஆசை நிரப்பி
இயற்கையன்னை மகவு இவள்
இன்றே கிளம்புகிறாள்!  :)

<3 ---கீர்த்தனா--- <3

Friday, 7 March 2014

பெண்ணே!!!!

அக்கனிக் குண்டங்களின்
அடி வயிற்றுக்குள்
வெந்து போய்விட
பிறப்பு எடுக்கவில்லை..
பெண்ணே!!!!

செவ்வொளிச் சூரியனின்
செங்கதிர்களை நோக்கிய
குளிர்ச்சிப் பயணம் இது!!

தீயவை தண்மையின்
தீர்த்தலாய் ஆத்திரமின்றி
தீர்த்திடுவாய்!!

அட்சய பாத்திரம் தாங்கி
அன்பினை அள்ளி
வழங்கிடுவாய்!!!

மன சாஸ்திரம் அறிந்து வாழ்ந்திட
குண ஸ்தீரி இவளென போற்றிட
மாண்பு மிகு பெண்மையே புறப்படு!!
வெண் மனப் பொன்மகள் நீ என்று காட்டிடு !!!

--கீர்த்தனா (கீதா ரவி)---


எனை ஈன்ற அன்னைக்கும், சிற்றன்னைமாருக்கும், சகோதரிகளுக்கும்,  அன்புள்ளம்  கொண்ட அனைத்து அன்புத்  தோழிகளுக்கும் ... அன்புத் தோழர்களின் துணைவிகளுக்கும்..அனைவரது அன்னையருக்கும்...உறவினர்ப் பெண்களுக்கும் மனமார்ந்த மகளிர் தின வாழ்த்துக்கள்...  <3 :)

Thursday, 6 March 2014

நெஞ்சோரம் கொஞ்சம் ஈரம்...

பெற்றவர்கள் இரத்தச்சாறை
பருகி வளர்ந்ததன் நினைவை
பத்திரமாய் சுமக்கும்
பண்பானவர்கள் இருக்கும் வரை
அகல வாய் திறந்த
முதியோர் இல்ல வாசல்களுக்கு
இரை கிடைக்கப் போவதில்லை!!!

---கீர்த்தனா---

(நல்ல மனம் படைத்தோர் அநாதரவான பெற்றோர்களுக்கு தஞ்சம் கொடுக்கிறார்கள் அவர்களுக்கான பதிவல்ல இது.. பெற்றவர்களை காக்கும் கடமை மறந்த பிள்ளைகளுக்கானது. என்ன வாழ்நிலை ஆதாரம் கிடைத்தாலும், அங்கே பிள்ளைப் பாசத்துக்கான இதயம் நிரம்பிய ஏக்கத்துடிப்பின் வலி
அனைத்துப் பெரியவர்களின் கண்களில் நிரந்தரமாய்
உறைந்திருக்கின்றது... நாளை நமக்கும் அதேநிலை??? )

ஒலி நாதம்!

மனசஞ்சலம் கழுவித்
துடைக்கும்
மழையின் ராகம்!
காதைக் காதலுடன்
நனைக்கும்
சலசல ஒலி நாதம்!

இறுகப் போர்த்திய
போர்வைக்குள்,
துளிகள் தழுவும்,
உணர்வுடன் இமைமூடி...
மழையொலி ரசித்தபடி....

---கீர்த்தனா---

பேதம் பார்ப்பதில்லை!!!!

வாய்க்கால் வரப்போரம்
பாயும் தண்ணீர்
பேதம் பார்ப்பதில்லை!!!!
நெல்லொடு புல்லுக்கும்
வளருதற்கு உதவுதல் போல்
நான் பருக.. நீ பருக...
ஒரே ஆறு, ஒரே குளம், ஒரே தண்ணீர்...

வீசும் இனிய தென்றல்
பேதம் பார்க்கவில்லை!!!
உயர்வென்ன தாழ்வென்ன...
உன்னைத் தழுவி, என்னைத் தழுவி
பின் பலரைத் தழுவி....

உனக்குள் புகுந்து, எனக்குள் புகுந்து,
பின் பலருக்குள் புகுந்து
ஒரே காற்று, ஒரே மூச்சு...
தீண்டாமை எங்கே...
சாதி மதம் எங்கே... - அதை
நீ காற்றிடம் காட்டு
நின்று விடும் உன் பேச்சு!!!

---கீர்த்தனா---

ரோஜா...

நீ இறைவன் வடித்த கவிதை!!
நான் நிறைந்த மனம் கொண்ட ரசிகை!!
உன்னிதழ் மென்மையும்
உன்னழகு வண்ணங்களும்
ரசிக்கத் தெரியும்...
அவன் வடித்த கவிதைக்கு இணையாய்...
கவி வடிக்கத் தெரியவில்லை!!

---கீர்த்தனா---

தொடர் மழை

வானம் முழுவதும்
பொத்தல்கள்!!
காதுத் துளை அறுந்த
ஊசி முனைகள்...
மண்ணை விடாமல்
துளைத்தபடியே!!


 ---கீர்த்தனா---

உடற்கூட்டை விட்டு...

விழிநீருக்குள் அடங்காத
யாருக்கும்
உணர்த்த முடியா
உடல் வாதனைகள்!
மன வேதனைகள்!

உடற்கூட்டை விட்டுப்
பறக்கத் துடிக்கும்
கசங்கிச் சிறகுதிர்த்த
பட்டாம் பூச்சி உயிர்!


 ---கீர்த்தனா---

நினைவுப் பொதிகை

நினைவுப் பொதிகைக்குள்
நனைந்து நீராடி தினம்
புனைந்த சில வரிகள்
புன்னகைப் பூக்களாய்
இதழ்க்கடையோரம்...
இன்னும் ஒட்டிக்கொண்டு...


 ---கீர்த்தனா---

மௌன அம்புகள்...

சின்ன சின்ன
சந்தோசப் பூக்களையெல்லாம்
உன்னிடமே பிரசவிக்கிறேன்!
ஏனெனில் எனக்காகவெனினும்
இணைந்து சிரிப்பாயென!

துரத்தும் துன்பங்கள்
உன்னிடம் களைகிறேன்!
எனக்காய் கொஞ்சம்
தோள்களில் தாங்கிக் கொண்டு
பஞ்சுப் பொதிகளை
என்னுள் நிரப்புவாயென!

சடுதியில் சில பொழுதில்
மௌன அம்புகள்...
தோழமை நெஞ்சினில்
கூர்மையாய் பாய்ச்சினால்
சுருண்டு தான் போகிறேன்
சுத்தமாய் உயிரிழந்து...


 ---கீர்த்தனா---

நகர்வின் விளைவுகள்...


சதுரங்க விளையாட்டின்
விதிகள் எதுவும்
என்றுமே புரிந்ததில்லை!
கற்றுக் கொள்வதற்கு
முயன்றதும் இல்லை!

விரல்களால் நகர்த்தப்படும்
காய்களாய்,
நகர்த்தப்பட்டுக் கொண்டே
படைத்தவன் எண்ணப்படியே...

கற்றுக்கொள்ளாத குற்றமோ?
நகர்த்திச் செல்லும் அவன் தீர்ப்போ?
நகர்வின் விளைவுகள்...

---கீர்த்தனா---

சுடும் துளிகள்...


தேகம் நோக வைத்து
துளைக்கிறது
கனமழையின்
பார ஊசித்துளைகள்!

தடை செய்வதற்கு
குடையினைக் காணவில்லை
எங்கேயும்....

குளிர் மழையோடு
சுடும் துளிகள்
விழிகளில் பாரமாய்...

---கீர்த்தனா---

ஓசை


எங்கிருந்தோ பாடும்
ஒற்றைப் பூங்குயிலின்
சோகம் இழைந்த பாடல்
சன்னமாக என் காதினில்...

அடர் காடுகளையும்
ஊடறுத்து நீண்டு செல்லும்
நதிமகளின் ஒற்றைப் பயணத்தின்
சலசல ஓசை
சன்னமாக என் காதினில்...

ஆழ் மனதினில்
கரைபுரண்டோடும்
அன்பின் அலையோசை
மென்மையாக என் காதினில்...

எலும்புகள், நரம்புகளை
வலிந்து ஆட்கொள்ளும்
வலியின் காதல் தனை தாங்கா
பட்டாம்பூச்சி உயிரின்
படபடப்பு சிறகடிப்பொலி
வன்மையாக என் காதினில்...

---கீர்த்தனா---

நகர்கின்ற மேகங்கள்

நில்லாமல் மேகங்களும்
நம்பிக்கையுடனேயே நகர்கின்றன!

நிலைகுலைந்து நிற்கையில்
நெஞ்சினில் மலைப்பாறை
விழிகளில் மழைச்சாரல்!

எங்கிருந்தோ நிமிட நேரத்தில்
எழுகிறது யானை பலம்...
தும்பிக்கையை உயர்த்தி
நம்பிக்கையுடன்........

--- கீர்த்தனா---

Monday, 17 February 2014

குட்டிப்பெருமாட்டி!!

சாலைவிதி அறியும் வயது இல்லை!
சாத்வீகம் அறிந்த முல்லை!
சிவந்த பொற்பாதம் தரை அளக்க...
சிந்தனை தேக்கிய விழி வழி அளக்க...

சின்னஞ்சிறு மின்மினிப் பூச்சி
சிறுகைகள் தூக்கிக் கம்பெடுத்து,
தடுமாறும் திசையறியாக் கப்பலுக்கு
கலங்கரை விளக்கின் ஒளியானது!!

விலகிச் செல்லாது விளக்கேற்றுங்கள்!
விதி எழுதிய கோலம் மாற்றுங்கள் - போகும்
வீதி வெகுதூரம்... பயணமோ பெரும் துயரம்!!!
விளக்கேற்றிய குட்டிப்பெருமாட்டி இவள்!
ஒளிவீச்சு அவள் வாழ்வுக்கும் தேவை...

---கீர்த்தனா---

Friday, 14 February 2014

காதலில்லா உலகம் இல்லை!

கண்டுகொண்ட கொடையும்
காணா விடையுமாய்
பலவகைத் தழுவல்
காதல் மனங்களில்...

வென்றவர் வானில் மிதக்க...
தோற்றவர் மண்ணில் துடிக்க...
கவிதையாயும் கானலாயும்
காதலின் பயணமோ தொடர்கிறது!

விளைந்த காதலின் மழைச்சாரலிலும்
தொலைந்த காதலின் விழிச்சாரலிலும்
காதற்செடி மட்டும் நொடிப் பொழுதில்
பெருவிருட்சமாய் ஓங்கி உயர்கிறது!

காதலில்லா உலகம்
கனவினில் கூட இல்லை!
கனவாகிப் போனாலும், நனவாகிப் போனாலும்
நிஜமான காதலும் காதலர்களும் வாழ்க!
காதல் கொண்ட உயிரினங்கள் அத்தனையும் வாழ்க!

--- கீர்த்தனா---

கனவுக்கூடு


நம்பிக்கைப் பெருவெளி கடந்து -அங்கே
எங்கோ அமாவாசை இருள்வெளி!!
நட்சத்திரப் புள்ளி ஒன்று வெகுதூரமாய்
ஒளிமின்னலாயும் ஒளித்தும்
தெளிவற்றுப் பார்வையில்!!!

கனத்த இருள் சாகரத்தில்
மெதுவாய் கரைந்தபடி தேடலின் வீரியம்!!
சந்தியாகாலப் புஷ்பங்கள் முகிழ் விரிப்பதென்னவோ
சந்தோசத் தருணங்களின் எதிர்பார்ப்புடன்...

விந்தையோ இல்லை விதியோ
சிந்தையில் நிறைவு சில கணம் கூட
சிலருக்கு நிலைப்பதில்லை!

கலங்கிய சித்தம் காணாமற் புதைத்து
கலந்து விடு வானில்.. யாருக்கேனும்
கனவுக் கூடு நிஜமாய்க் கட்ட உந்தன்
கனிந்த நெஞ்சத்து நட்சத்திர ஒளிப்புள்ளி
கரம் கொடுக்கும் பேறு பெற்றிருக்கலாம்!

---கீர்த்தனா---