Tuesday 24 July 2012

புதிய ஆத்திசூடி நான்…!

புதிய ஆத்திசூடி நான்…!
---------------------------------------------
விதைக்கப் பட்ட
மண்ணைப் பற்றியே….
வீரியமாய் நான் எழுவேன்…!
வீணர்கள் வெள்ளத்தில்
அடிபட்டுச் செல்லமாட்டேன்…!

கர்வம் கொள்வேன்…அநீதிக்கு
அடிபணிய மாட்டேனென…!
விண்ணைத் தொடமுயல்வேன்…
புத்துணர்வாய் எழுச்சியுடன்…!
பெருமை கொள்வேன்…ஏனெனில்
பாரதியின் புதிய ஆத்திசூடி நான்…!

----கீர்த்தனா----

உண்மைகள் உறங்காது...

அடுத்தவர் உள்ளம்...
கலைப்பதில் ஒரு சுகம்...!
அடுத்தவர் பற்றி...
புரளி பேசுவது ஒரு சுகம்...!
புரிந்து கொள்ள முடியா...
விலங்கு மனிதர்கள்...!

உண்மையை விழுங்கி...
நேர்மையை மிதித்து...
புத்தியை கோணல்வழி நடத்தி...
கண்ட பலன் தான் என்ன...!

தன்னை தானே
திருத்துங்கள்...முதலில்...
அடுத்தவர் வீட்டினை
எட்டி பாருங்கள்...அதன்பின்...
உண்மைகள் உறங்காது...
ஒரு நாள் கழுத்து
மேல் கத்தியாய்
உங்களுக்கே திரும்பும்...!

பொய் சொல்வதும்
புறம் சொல்வதும் தவிர்த்து...
மனிதராய் மனிதம் வாழ
இன்றே உங்களை
திருத்திக் கொள்ளுங்கள்...!

----கீர்த்தனா----


Saturday 21 July 2012

அன்பினூற்றில்.....

விலகிவிடு உரைக்கிறது
நெஞ்சம்….!
முடியாது மறுக்கிறது
இதயம்….!

கல் மேல் எழுத்தாய்…
உன் நினைவுகள்
என்னை ஆக்கிரமிக்க…
நீர் மேல் எழுத்தாய்…
என் நினைவுகள்
உன்னை விட்டுக்கரைவதை
உணர்கின்றேன்…வலியுடன்…!

ஆனாலும்…உன் நெஞ்சோரம்
உறுதியான என் அன்புக்கு
நிச்சயம் இடம் உண்டென
சிறு துளிர்ப்பாய் ஓர் நம்பிக்கை…!

நான் காணாமல் போகும்
தருணம் அவ்விடத்தில்
இருந்து எழும்….
அன்பினூற்றில் சுரக்கும்…
உன் விழியோரம் எனக்காய்
இரு சொட்டு உப்புக்கரிக்கும்
நீர்த்துளிகள்…!

----கீர்த்தனா----

Thursday 19 July 2012

வஞ்சக வலையில்…வீழாமல்…















எண்ணங்களின்
வண்ணங்களில்…
சிறகடித்துப் பறக்கும்
மனப்பறவைகளின்
சாம்ராஜ்ஜியத்தை…
ஆலோலம் பாடியே
கலைக்க வரும்
வல்லூறுக்கூட்டங்கள்
வஞ்சக வலையில்…
வீழாமல்… நாமிங்கு
எழுவோம் எழுவோம்
விண்ணைத் தொடுவோம்…!

----கீர்த்தனா----

Sunday 15 July 2012

ஏக்கம் மட்டுமே எச்சமாய்...!

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
எழுதாத கோலங்கள் பற்றி
எழுதி விட கோல் எடுத்தேன்…!
எதுவுமே தோன்றவில்லை
எல்லாமே வெற்றிடமாய்…!

எண்ணங்களின் சிறகொடிந்து…
எழுத வேண்டும் எனும் தாகத்தின்
ஏக்கம் மட்டுமே எச்சமாய்...!

----கீர்த்தனா----

அதிசய வனப்பு…!

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
குளிர் வண்ணங்களின்
ஒன்றிணைவாய்…
அழகு மயிலதன்
வண்ணக்குழைவு…!

படைத்தவனின் குதூகல
வெளிப்பாட்டினில்
எழுந்த...சிருஷ்டிப்பின்
உச்சக்கட்டப் படைப்பு…! 

ஆடல் திறனும்…அழகும்…
ஒன்றாய் இணைந்த
அற்புதப் பறவை…!
வேலவனையும் மயக்கிய
அதிசய வனப்பு…!

தோகைச் சிலிர்த்தலிலும்…
கொண்டை அசைத்தலிலும்…
உள்ளம் பறிக்கும்
அழகோவியம்…!
விழிகளின் தாகம் தீர்க்கும்…
திகட்டாப் பேரழகு…!

----கீர்த்தனா----

Thursday 12 July 2012

வாழ்வோம் இனியோராய்…

இரவும் பகலும்
இயற்கையின் நியதி…!
இன்பமும் துன்பமும்                                                        
வாழ்க்கையின் நியதி…!

இழுப்பதும் அலைப்பதும்
விதி விளையாட்டு…!
இகழ்தலும் புகழ்தலும்
மனிதனின் இயல்பு…!
இறப்பும் பிறப்பும்
ஆண்டவன் கட்டளை…!

இத்தனை அறிந்தும்
ஏன் போராட்டம்?
ஏன் மனக்கலக்கம்?
வாழும் வரையில்…
வாழ்வோம்
இனியோராய்…
கலக்கம் அனைத்தும்
தூர விலக்கி…!

---கீர்த்தனா---
Vis flere

Tuesday 10 July 2012

மனமெங்கும் பூக்கள்...















இளவேனிற்காலம்
இனிதான மாற்றம்…
மனமெங்கும் பூக்கள்
நிறைவாகப் பூக்கும்…

மரந்தோறும் கிளையில்
சுகந்தேடும் பறவைகள்
அழகாகப் பாடி இனிதாய்
மனம் நிறைக்க…

வண்ண வண்ணப் பூக்களும்
வண்ணத்துப்பூச்சிகளும்
ஓன்றாய்க் குலவிச் சிரிக்க…

அழகாய் அசைந்த
இனிய தென்றற்காற்று…
கூந்தல் கற்றை
அசைத்து…
இதமாய்த் தழுவி
வருடிச்செல்ல....

நெஞ்சுக்கூட்டுக்குள்
ஊற்றெடுக்கும்…
சொல்லொணா...
இனிய இனிய
உணர்வுகள்…

-----கீர்த்தனா-----

Monday 9 July 2012

புதிதாய் பிறந்திட வேண்டும்…

விடுதலை வேண்டும்
என்னிடமிருந்தே…
கொன்று தின்னும்
உணர்வுகள் புதைத்தே..
புதிதாய் பிறந்திட
வேண்டும்…

பிறந்தது விட்டால்…
அன்புவலைக்குள்
சிக்காதிருத்தல்
வேண்டும்…
சிக்கினால்
பிரியாதிருக்கும்
வரம் பெறவேண்டும்…

----கீர்த்தனா----

ஒற்றை வார்த்தை போதும்…

 
 
 
 
 
 
 
 
 
 
 

உறக்கம் தொலைத்து
தலையணை நனைத்த
இரவின் பிடியில்…

உன் பிரிவின்
ஒவ்வொரு நிமிடத்துளியும்…
நெளியும் சர்ப்பங்களாய்
மாறி மனதினுள் ஊர்ந்து
ஒன்றிணைந்து…
பின்னிப்பிணைந்து
மனமதை முறுக்கியே…

புரியாத தவிப்புகளும்
வலிகளுமாய்…
கொத்திக் கொன்றன..
என்னுயிரே…உன்னுயிரின்
மூச்சுத் திணறல் நிறுத்த
உன் ஒற்றை..
வார்த்தை போதும்…

----கீர்த்தனா----

Saturday 7 July 2012

யார் மீது என் கோபம்..?














யார் மீது என் கோபம்..?
சாதிகள் பேசும்
சமுதாயம் மீது…
ஏழையை சுரண்டும்
பணக்காரன் மீது…

குழந்தைத் தொழிலாளி
வைத்திருக்கும்
முதலாளி மீது…
நம்பிக்கைத் துரோகம்
செய்யும் நண்பர்கள் மீது…
அன்பை உணர மறுக்கும்
மனிதர்கள் மீது….

அனாதைகளை…
ஆதரவற்றோரை…
ஊனமுற்றோரை…
பசித்தவனை…
படைத்த

கடவுள் மீது…

கோபம் கோபம்…
கோபம் மட்டுமே
செந்தீயாய் உள்ளே
தகிக்கிறது…
மாற்றங்களின்
விடியலுக்காய்…
மனம் ஏங்கித்
தவிக்கிறது…

கோபம் கொண்ட
பாரதிகள் கை
கோர்த்தென்னுடன்
வாருங்கள்…
துன்பம் தீண்டா…
புதுவுலகம்
ஒன்றாயிணைந்து
படைத்திடுவோம்…



----கீர்த்தனா----

Friday 6 July 2012

பொற்கிரணங்கள்…


மலராய்ப்புலர்ந்த இனிய                                  
காலைப்பொழுதினில்…
தங்கநீரில் முங்கியே
ஒரு இன்பக்குளியல்… 

தங்கத்தைக் கொடையாக
அள்ளி வழங்கிய…
சூரியப்பெருவள்ளலின்
பொற்கிரணங்கள்…

நீரினைத் துளைத்து
ஐக்கியமாகி ஜொலிக்கும்…
நீரோட்ட அசைவின்
கொள்ளை அழகை…
அணு அணுவாய்
உள்வாங்கிக்கொண்டேன்...

----கீர்த்தனா----

Wednesday 4 July 2012

காற்றலையில்….


கணத்தில்
மனத்தில்
புயலாய் புகுந்து
கலைத்த
சுவடுகளின்றி…
அலட்சியமாய்
நீ செல்ல…

கலைந்த மனமோ…
தேடியலைகிறது
காற்றலையில்
உன் சுவாசத்தை…

கிட்டாமலே…
நினைவுக்
குமுறல்களின்
ஆக்கிரமிப்பில்
தன்னிலை
இழந்து............

----கீர்த்தனா----

Tuesday 3 July 2012

கண்களின் பனித்துளி...


கண்களில்
இறங்கும்
பனித்துளியே…
எனையேன்
சொட்டச் சொட்ட
நனைக்கின்றாய்…

குளிர்விக்க
முடியவில்லை…
துன்பத்தின்
வெப்பத்தை
உன்னாலென்பது
தான் உண்மை…

உன் தழுவலிலும்…
கருகித்தான்
போகின்றேன்
துளிர்க்க முடியாமலே…

தோல்வியின்
துவளலில் தான்
பனித்துளி
வெப்பத்துளியாய்
ஆனதோ…

---கீர்த்தனா---

Monday 2 July 2012

பட்டாம்பூச்சி

சிறகடிக்கும்
வண்ணக்
கலவை…!

இயற்கை
ஓவியனின்…
படைப்புக்
காவியம்…!

வண்ணக்
குழைவின்…
உயிரோவியம்…!

---கீர்த்தனா---

Sunday 1 July 2012

காட்டாற்று வெள்ளமாய்...அன்பு..

பற்றிக்கொள்ளத்
துணையின்றி…
அன்பிற்காய்த்
தவித்து
நிற்கையில்…

வெள்ளைச்
சிரிப்புடன்…
உயிர்த்தோழியே
என்றழைத்து
என்முன்னே
வந்து நின்றாய்…

பற்றிக்கொண்டேன்
கொழுகொம்பாய்…
இன்றென்னன்பின்
அழுத்தம்…உந்தன்
கழுத்தை நெரிக்கும்
பாம்புக்கயிறாய்...

புரிகிறது…வலிக்கிறது
விலகத்தான்
முடியவில்லை
உன்னைப் பிரியும்
ஒரு எண்ணம்
வருகின்ற
கணத்தினிலே…

அனல்மேல்
விழுந்த
பனித்துளியாய்
பொசுங்கித்தான்
போகின்றேன்...
மன்னிப்பாயா
எனை நீயே…

----கீர்த்தனா----

பாரதி பிறந்தால்…

தன் நிறைவேறாக்
கனவை நிஜமாக்க…                                                               
இனியொரு ஜென்மம்
பாரதி பிறந்தால்…
நானும் பிறப்பேன்
அவன் அன்புத்தோழியாய்…

தவறுகண்டால்
பொங்கியெழுவேன்
நானும் அவனுடன்
இணைந்தே…

சேர்ந்து புறப்படுவோம்
துன்பம் தொலைத்த
புதுவுலகம் படைக்க…

அஞ்சா நெஞ்சுடன்…
யாருக்கும் அடங்காமலே
முன்னேறும்...நம்பாதை...
ரௌத்திரத்தால்
அநீதியை அடித்து
வீழ்த்தியபடியே…

----கீர்த்தனா----