Saturday, 12 September 2015

இனிய உள்ளம்
அந்த ஏரிக்கரை அவ்வளவு அமைதியையும் மனசாந்தியையும் அள்ளித் தரும். உடம்பு மிகவும் முடியாத தருணங்கள் தவிர ஆதவன் அகலத் தொடங்கும் அந்த வேளையில் அங்கு சென்று விடுவேன்.. அகலும்போதும் அகன்ற பின்னும் எத்தனை வண்ணங்கள் வானில்...அதன் பிரதிபலிப்பு ஏரியில்...இரசிப்பதற்கு இரு கண்கள் போதாது. கரையோரப் படகுகளும், நாணற் புற்களும், நானும் மட்டும் அங்கிருப்போம். சில சமயம் புகைப்படங்களும் எடுப்பேன்.

அந்த ஏரிக்கரை தனியாருக்கு சொந்தமான பகுதியில் அமைந்திருந்தது. ஒருநாள் சென்ற போது பெரிய இரும்புக்கம்பியால் பாதை அடைக்கப் பட்டிருந்தது. ஒரு நோர்வேஜியப் பெண்மணி அருகில் இருந்தார். அவரிடம் அங்கு போக முடியாதா என்று கேட்டபோது, மன்னிக்க வேண்டும் இருபது வருடங்களின் பின் மூடியிருக்கிறோம். அங்கே இரவில் வருபவர்கள் குப்பைகளைக் கொட்டி சத்தமெழுப்பி எங்களை வெறுப்பேற்றுகிறார்கள். இனிமேல் எப்பவுமே பாதை திறக்க மாட்டோம் என்றார்.
அந்த சமயம் மனதில் தோன்றிய சொல்லொணா வேதனை வார்த்தையில் விவரிக்க முடியாது. அன்னையைப் பிரிந்தது போல் நெஞ்சை அடைத்தது. சிலருடைய வேண்டாத செயல்களால் சிலருடைய மகிழ்வு பறிபோகிறதே என்று அவர்கள் மீது மிகவும் வெறுப்பு தோன்றியது. என் தோழியிடம் அதைச் சொல்லி சொல்லி வருந்துவேன்.

இதில் ஆச்சரியம் என்னவென்றால் எனது மருத்துவரிடம் சென்று கொண்டு இருக்கும் போது மனதில் நினைத்துக் கொண்டு போகிறேன் சிலவேளை மனம் மாறி பாதை திறந்திருப்பார்கள், திரும்பி வரும் போது போய் ஒரு தடவை பார்த்து வர வேண்டுமென்று. மருத்துவர் கிட்ட போய் வந்தாலும் நம்ம கை சும்மா இருக்காதில்ல. மழை வந்ததால் இலைகளில் நீர்த்துளிகள் அப்பிடியே படம் பிடித்துக் கொண்டிருந்தேன்... யாரோ மன்னிக்கவும் என்றபடி தோளில் தொட்டார்கள். திரும்பிப் பார்த்தால் ஆச்சரியம். அந்தப் பெண்மணி. அவர் சொன்னார் எனது மருமகன் நீங்கள் இயற்கையை மிகவும் இரசிப்பீர்கள் என்றும் அடிக்கடி அங்கு வருவீர்கள் என்றும் சொன்னார். இயற்கையுடன் உறவாடுபவர்கள் மென்மையானவர்கள் அவர்கள் மனதை வருத்தக் கூடாது. அதனால் உங்களை மட்டும் அங்கு வர அனுமதிக்கலாம் என்று குடும்பத்தில் முடிவு செய்திருக்கிறோம். இனிமேல் வழமை போல அங்கு வாருங்கள் என்று.

சொல்ல வார்த்தையில்லை...அம்மாவிடம் போகப் போகும் உணர்வு. ஏரிக்கரைக்கும் எனக்குமான உறவு யாருக்கும் சொல்லில் புரிய வைக்க முடியாது. அவருக்கு இதயபூர்வமான நன்றி பலதடவை சொன்னேன். அதெல்லாம் ஒன்றுமில்லை எனப் புன்னகைத்தபடி விடை பெற்றுச் சென்றார். மனிதமும் இனியவர்களும் இன்னும் இங்கிருப்பதற்கு இன்னொரு சான்று இந்த நிகழ்வு.

Friday, 11 September 2015

மகாகவி

மகாகவியின் இன்றைய நினைவு நாளில் அவர் தம்  பாடல்கள் இசையுடன் கேட்போம்.

https://www.youtube.com/watch?v=bjsM64B6wAU&list=PLD1E4D6E3AAA7DBC6

Friday, 4 September 2015

ஒளிக்கதிரோனுக்காய் மட்டுமே...

தாமரைச் செண்டுகள்
சுற்றும் கரு வண்டுகள்
ஒற்றைக்காற் பிடிவாதம்
கற்றை ஒளிக்கதிரோனுக்காய் மட்டுமே...

ஒரு கணம் மலர்ந்து
மறு கணம் இறந்து
மறுபடி பிறந்து
திரும்பவும் மலர்ந்து
மாசற்ற தாமரை நெஞ்சம்
கற்றை ஒளிக்கதிரோனுக்காய் மட்டுமே...

---கீர்த்தனா--- 

Wednesday, 2 September 2015

மழை இதம்!தாழ்வாரம் சலசலத்து ஓடுகிறது
ஆழ் அமைதி மனதில்...
மழைக்கும் எனக்குமான உறவு
விளக்கிச் சொல்ல முடியா உணர்வு...
நாளை முளைக்கும் குழப்பங்களை
நாளை பிடுங்கி எறியலாம்...
இன்று மழை இதம்!
இந்த நிமிடம் நிஜம்!