Saturday 7 January 2017



புலத்தில்  ஒரு ஆன்மா
**************************

உணர்வுகள் உறையும் உறைபனிக்காலம்!
உதடுகள், செவிமடல்கள், விரல்நுனிகளின்
இருப்பறியாத ஊசிக்குத்தல்கள்!
உதிரம் உறைதல் தடுக்க உடைபாரம் தரித்து
நிலவில் நடக்கும் நீல் ஆம்ஸ்றோங் தோற்றத்தில்
நீயும் நானும் அவர்களும்
உழைப்புக்காக அலைந்தபடியே...
ஊண் இல்லை உறக்கமில்லை
ஒருவேளை சுடுசாதம், மூன்று மணிநேரத்தூக்கம்!

அங்கே.........
தங்கச்சிக்கு நீர்வார்ப்பு
ஒரு மூன்று இலட்சம் அனுப்பு போதும்!
அரசாங்க ஆஸ்பத்திரி சரிவராது...அப்பா அப்பல்லோவில்
ஒரு பதின்மூன்று இலட்சம் அனுப்பு போதும்!
அம்மா ஆஞ்சநேயருக்கு பதக்கம் போடுவதாய் நேர்த்தி
ஒரு இரண்டு இலட்சம் அனுப்பு போதும்!
அக்காவுக்கு கல்யாணம் முற்று
சீதனமாய் ஐம்பது இலட்சம் அனுப்பு போதும்!
அக்கா புருசனுக்கு கல்லடைசல்...நவலோகாவில் நான்கு நாள்
ஒரு நான்கு இலட்சம் அனுப்பு போதும்!

பக்கத்துக் காணி விலைக்கு வருதாம்
அப்பிடியே வளைச்சுப் போடுவோம்
ஒரு பத்து இலட்சம் அனுப்பு போதும்!
வாசலில் ஒரு வான் வாங்கி விட்டால்
வடிவாயும் இருக்கும் வாடகைக்கும் ஓட்டலாம்
ஒரு எழுபது இலட்சம் அனுப்பு போதும்!
அது பிறகு சத்தியமா உனக்குத்தான்!
சுற்று மதில் கட்டினால் தான் வெளிநாட்டில் பிள்ளையள்  
நல்லா இருக்கினம் எண்டு  சொல்லுவினம்
ஒரு மூன்று இலட்சம் அனுப்பு போதும்!
தேர்த்திருவிழா முழுதும் எங்கட செலவு தான்
அப்ப தான் ஊருக்குள் மதிப்பினம்
ஒரு நான்கு இலட்சம் அனுப்பு போதும்!
என்ரை கடைசி ஆசை பிள்ளை
எத்தனை இலட்சம் குடுத்தென்டாலும்
தம்பியை வெளிநாடு கூப்பிட்டுப்போடு அது போதும்!

அக்காக்கு ஸ்கூட்டி வேணுமாம்
தங்கச்சிக்கு ஐபோன் வேணுமாம்
தம்பிக்கு மோட்டார் சைக்கிள் வேணுமாம்
பேத்திக்கு லப்ரப் வேணுமாம் 
வேணுமாம் வேணுமாம் வேணுமாம்.....
என்ன பிள்ளை உங்க இருந்து வந்து
எவ்வளவத்தை அள்ளி வீசிறான்கள்
நீ மட்டும் தான் மூக்காலை அழுகிறாய்...

இங்கே........
பிள்ளைக்கு படிப்பு, ஐபோன், கேம்ஸ், கம்பியூட்டர், மார்க் உடுப்பு,
மார்க் சப்பாத்து, பதினெட்டில் லைசென்ஸ்!
எங்களுக்கு லோன் எடுத்து வீடு, கார்!
பிள்ளைக்கு கார், பிள்ளைக்கு வீடுவாங்க கொஞ்சம் முற்பணம்!

பிள்ளைக்கு பிறந்தநாள் விழா, சாமத்தியம், கல்யாணம், ரிசெப்ஷன்!
ஊரவர் விழாக்கள், ஊரோடு ஒத்த பகட்டு வாழ்க்கை
இல்லையென்றால் மதிப்பில்லை ஆட்கள் கதைப்பினம்!
போஸ்ட் பாக்ஸை திறந்தால் பில் பில்லாய்க் கொட்டும்!
போஸ்ட்மானைக்  கண்டால் நெஞ்சு கலங்கும்!
இன்னும் இன்னும் ஆயிரம் தேவைகள்!
இரவுபகலாய் ஓயாத உழைப்பு!

இலட்சங்களும் நிம்மதியும் இழந்தபின்
அறுபத்தேழில் பென்ஷன் வரும்
ஆறுதலாய் அப்போது வாழலாம் என நினைக்க
குளிரில் உக்கிப் போன உடம்பை விடுத்து
ஐம்பது ஐம்பத்தைந்தில் உயிரும் பிரிந்து செல்கிறது!
தூக்கிப்போடக் கூட இந்தாள் ஒருசதம் சேர்த்து வைக்கலை
பிள்ளைகளின் முணுமுணுப்பு கேட்காத தூரத்தில் ஆன்மா!


*கீர்த்தனா* ( கீதா ரவி )

No comments:

Post a Comment