Thursday, 28 February 2013

அன்பென்னும் நூலிழை...

எங்கும்...எங்கெங்கும்,
இருள் சூழ் அடர் காடு!
உடல் நடுங்க மனம் பதைக்க,
தனித்து விடப்பட்ட
ஆட்டுக் குட்டியாய்....
ஓநாய்க் கூட்டத்தின்
மத்தியில் நிற்கும் உணர்வுடன்!

கடித்துக் குதறத் துரத்தியபடி
சோதனைகள், வேதனைகள்
வாழ்வில் சூழ்ந்து மொய்க்க
தன்னம்பிக்கை மெதுவாக
இறப்பிக்கப் பட்டபடி...

துணையாய் உற்ற உறவின்
தோளில் தட்டும் சிறு ஸ்பரிசம்...
உன்னுடன் நான் என
உணர்த்துகையில்...
மீண்டும் மெதுவாக மெதுவாக
துளிர்விடும் தன்னம்பிக்கை!
அன்பென்னும் நூலிழை...
நகர்த்திச் செல்லும் வாழ்வினை...

---கீர்த்தனா---

Wednesday, 27 February 2013

வாழ்வியலின் தொடர் தேடல்...

எதுவோ புரிந்தும்...
எதுவுமே புரியாமலும்...
காலத்தின் சுழற்சியின்,
கோலத்தின் மிரட்சியில்!

கடிதான மனங்களும்,
இனிதான மனங்களும்!
நிறம் மாறும் குணங்களும்,
நிலைத்திருக்கும் குணங்களும்!
எதிர்மறை எண்ணங்களும்,
நேரான எண்ணங்களும்!

புரிதல் இல்லாப் பிணைப்புக்களும்,
புரிதல் கொண்ட பிணைப்புக்களும்!
பற்றாத அன்பும்,
வற்றாத அன்பும்!
படைப்பியலின் தத்துவங்கள்!
வாழ்வியலின் விதிமுறைகள்!

எதற்காக எதற்காக
புரிதல் இல்லாப் படைப்புக்கள்???
ஆயிரமாயிரம் வினாக்குறிகளுடன்
முற்றுப்புள்ளியில்லாத் தொடர் தேடல்கள்!
ஆயினும் ஆயினும் சோர்வின்றிய பயணம்...
தொடரட்டும் தொடரட்டும்...
வெற்றித் தேசம் நோக்கி...

---கீர்த்தனா---

நட்பான நிலவொன்றை...

மெய் மட்டும் வளர்த்தேன்...
பொய் தொலைத்த நெஞ்சத்துள்!

நட்பான நிலவொன்றை...
மிக மிகப் பத்திரமாய்,
ஒளித்து வைத்தேன் கண்ணுக்குள்!
திறக்க மறுத்தேன் இறுக மூடிய
விழிக் கதவுகளை....

காப்பது ஒன்றே இலட்சியமாய்...
அன்பு ஒன்றே போதனையாய்...
சூல் கொண்ட தாயின் கவனத்துடன்!

வெளியே விழத் துடித்தபடி நிலவு
தாய்மையின் பதற்றம் உணராமலே....
புரிந்தும் புரியாதது போல்....

---கீர்த்தனா---

Saturday, 23 February 2013

இறக்கைகள் விரி!!

இலட்சியக் கனவுகள்,
இரத்தத்தின் துடிப்பினில்!
இன்னல்கள் இருட்டாய்,
இலவம் பஞ்சு நெஞ்சுக்குள்...
இடியாகத் தாக்கிச் செல்கையில்...
இடித்து உரைத்து விடு,
இதுவல்ல உன் பணி என...
இளஞ்சூரிய ஒளி உன்முன்னே...
இறக்கைகள் விரி!!!
இலகுவாய்ப் பற!!!
இனிய தேசத்தில் குவிந்திருக்கும்
இனிப்பான வெற்றிக் கனிகளை...
இக்கணமே எட்டிப்பறி!!!

---கீர்த்தனா---

Wednesday, 20 February 2013

வெறுத்த உறவு தஞ்சமென.....

பிடிக்கவில்லை என விலகினேன்!
தீண்டாதே எனத் திட்டினேன்!
வருத்தாதே எனக் கெஞ்சினேன்!

யாருனக்குத் துணை இங்கு..
அணைத்துக் கொள்ளேன்
எனை என்றது!

தந்திடுவேன் எண்ணங்களிலே...
சிதறிடும் வண்ணங்களையே....
அழகாய் வடியேன் கவிகளை
நீ என்றது!

தூரச் செல்லும் உறவுகளும்....
தூக்கம் இல்லா இரவுகளும்....
வெறுத்த உறவே தஞ்சமென,
தனிமையிடம் சரண் புகுந்தேன்!

---கீர்த்தனா---

Tuesday, 19 February 2013

மீட்டலின் உயிர்ப்பில் உருகி.........

மீட்டிய கரங்களின் நடனம்...
என்னுள்ளே என்னுள்ளே...
நாட்டியம் ஆடின நரம்புகள்!

உயிருக்குள் நாதம் சுண்ட...
மெய்மறந்து கண்கள் மூட...
கண்களில் நீர் கசிய,
நெஞ்சம் கசிந்துருக,
மயிர்க்கால்கள்
ஒவ்வொன்றாய்ச் சிலிர்த்து...
ஏதோ ஒன்றோடி,
உச்சந் தலைக்குள்....
உச்சமாய் ஒரு சிலிர்ப்பு பரவ...

எங்கோ ஒரு இனிய உலகில்
நான் மட்டும் மிதந்து மிதந்து
மெதுவாகப் பறந்து செல்ல....
வீணையின் தந்திகளைச்
சுண்டி மீட்டுகிறார்களோ?
இல்லையெனில்....

நம்முயிரைத்தான் மீட்டுகிறார்களோ?
நானறியேன்...உயிர் உருக
நனைந்தேன் நனைந்தேன்
வீணையின் நாத மழையிலே...

---கீர்த்தனா---

Sunday, 17 February 2013

அடங்காப் பசியுடன் இருவிழிகள்....

விழிகளைக் கொடையாய்க்
கொடுத்தாயே........
கோடி நன்றி நானுரைப்பேன்!
எத்தனை வித்தைகள்....
வண்ணங்களால் வான்பரப்பில்!
வகை வகையாய் நிலப்பரப்பில்!
எந்த ஓவியன் இவை வரைந்தான்,
அழகு ஆயிரம் கண்களை நிறைக்க!

நீர்நிலைகள் வானம் பார்த்துக் காதலிக்க...
கமலப் பெண்கள் ஆதவனைக் காதலிக்க...
அல்லிப்பெண்கள் மதியழகைக் காதலிக்க...
தாமரை இலைகளோ ஒட்டாமல்
உருண்டோடும் நீர்துளியைக் காதலிக்க...
தொட முடியா வானத்தினைத்
தொட்டு விட நிலம் துடிக்க....

இன்னும் இன்னும் எதை சொல்ல
ஒன்றின் மேல் ஒன்று தீராக் காதலுடன்....
அத்தனை அழகையும் ஒன்றாய்...
அடங்காப் பசியுடன் - என்னிரு
விழிகள் விழுங்கின மிச்சமின்றி...

---கீர்த்தனா---

Friday, 15 February 2013

என் எழுதுகோலால்..என்ன பயன்??

தெருப் புழுதியில் சிறுமலராய் நீ
எதற்காய் எதற்காய் ஆனாய்???
உன் பிஞ்சு வதனம் தேக்கிய
உணர்வுகளின் மொழிதனை,
படித்து விட்ட ஒரு கணத்தில்...
இதயக் கூடு பிளந்து...
துளித் துளியாய்ச் சொட்டுக்கள்
உதிர்வதை உள்ளே உணர்கிறேன்!
அடிவயிற்றின் பசித்தீயை,
தார்ச்சூடும் வென்றதுவோ பூஞ்சிட்டே??
என்ன பயன்....பசி தீர்க்கா
என் எழுதுகோலால்??
உள்ளே சொட்டுக்கள் உதிர்கின்றன
மீண்டும் பிழிந்து பிழிந்து....

---கீர்த்தனா---

Thursday, 14 February 2013

பொக்கிஷமாய்......

காதலில் குலவாப்
பட்சிகள் உண்டோ?
காதல் செய்யா
விலங்குகள் உண்டோ?
காதலை உணரா
மனிதரும் உண்டோ?

ஒருமுறையேனும்
உயிருக்குள் பூக்கும்...
இனிய காதலின் பரவசம்...
பிறர் அறிந்தும் அறியாமலும்,
இதயத்தின் மூலைக்குள்,
பொக்கிஷமாய்...மீட்டலின் சுகமாய்...
இல்லை என்று உரைப்பார்க்கும்
உண்டு என்றே சொல்வேன்...

காதலுணர்வு அது
இயற்கையின் தத்துவம்...
காதல் செய்வதில்,
தவறேதுமில்லை...
ஆதலினால் காதல் செய்வீர்!
விரும்பாத உள்ளத்தை
வற்புறுத்தி வருத்தாது...
உம்மை விரும்பும்
உள்ளத்தினை மட்டும்...


---கீர்த்தனா---

என்றும் சாஸ்வதமாய்.....

எல்லோரிடமும்
பொய்ப்பதில்லை...காதல்!
பொன்னைப்போல் காக்கும்
பொழுதெல்லாம் உருகும்
நிறம் மாறாக் காதல்
நிஜமாக உண்டு!

ஓரிடம், ஒருபுள்ளி நோக்கியே...
தவமாய் தியானமாய்...
உயிராய் உணர்வாய்..
ஒருவரிடம் பொய்த்தாலும்
இன்னொருவரிடம்...
பொய்க்காமல்...

உயிர்பூவுக்குள் உறைந்து
காதல் கரைந்து போகாமல்...
உணர்வுகளின் உயிர்ப்பினில்
உளமாரக் கசிந்துருகி...புனிதமான
நூலிழையின் பிணைப்பில்
இறவாமல், கருகாமல்
என்றும் சாஸ்வதமாய்.....

---கீர்த்தனா---

Wednesday, 13 February 2013

கலைந்ததுவோ கூடுமிங்கு!

வேடந்தாங்கல் வந்ததன்று!
புலம்பெயர்ந்த பறவையொன்று!
அன்பினை ஊட்டி ஊட்டி,
இழைத்ததொரு குருவிக்கூடு!

தாய் போல அரவணைத்து,
தாங்கியது பெருமையுடன்...
தங்கி நின்ற குஞ்சுகளைத்
தனதன்பு இறக்கைக்குள்ளே!

பெருங்காற்றின் வீச்சினிலே...
கலைந்ததுவோ கூடுமிங்கு!
கூடி நின்ற குஞ்சுகளும்,
திசைக்கொன்றாய்ப் பறந்தனவே!

ஒரு மூலைப் பொந்துக்குள்ளே...
அமைதி இழந்த தாய்க்குருவி,
குஞ்சுகளின் வரவுக்கேங்கி...
கலைந்து சென்ற திசைகள் நோக்கி...
தனியாக ஏக்கத்துடன்...
வேதனைகள் சுமந்தபடி!!!

---கீர்த்தனா---

Tuesday, 12 February 2013

மலர வைப்பாய் பகலவனே....

கமலமவள் செவ்வதனம்
கூம்புவதும் மலர்வதுவும்
பகலவனின் வரவதனால் - அவள்
தேம்புவதும் தெரியாமல்
சென்று சென்று தான் வருவானோ?
அவன் திசை நோக்கியே
காதற் தவம் செய்து சளைக்காமற்
காத்திருக்கும் செவ்வெழிற் பூமகளை
மலர வைப்பாய் பகலவனே....

---கீர்த்தனா---

Monday, 11 February 2013

கலைநிலாப் பெண்ணே!

கலைந்தவை யாவும் கதையாய்,
கலைநிலாப் பெண்ணே!
கனவுலகில் காண்பேனோ?
கண்ணெதிரில் காண்பேனோ?

கடந்த பொழுதுகளில்
கண்ணிமைக்க மறந்து
ஊடுருவிப் பார்த்த கணங்கள்
உன்னுள்ளே வீழாமற் போனேனோ?

என்னுள்ளே நீ மட்டும்
விதையாய் வீழ்ந்து - பின்
விருட்சமாய் வளர்ந்ததேன்?
இன்று கனவாகப் போனதேன்?
கண்களை மறைக்கும்
சுடுநீரின் வெப்பம்
கனலாய்ச் சுடுவதேன்?

---கீர்த்தனா---

Sunday, 10 February 2013

ஓவியப்பாவையாய்...

மழைச் சிறு துளியில்
ஒளிக் கதிரவன்
தூரிகை வீச்சுப் பட்டு...
வியத்தகு பெரும்படைப்பாய்
வளைந்தெழுந்தாள்
வானவில் தேவதை...
வண்ணங் கொண்டு,
எண்ணம் வென்று,
கண்கள் நிரப்பிய
ஓவியப்பாவையாய்...

---கீர்த்தனா---

தெய்வம் நீ...

எத்தனையோ கவி வரிகள்
எழுதுகின்றோம் விதவிதமாய்...

எம் அன்னையவள் பெருமைதனை
எழுதிவிடத் துடிக்கையிலே,
எந்த வார்த்தை கோர்
த்தெடுப்பேன்
என்பது தான் தெரியவில்லை...

இன் தமிழன்னாய் உதவிடுவாய்...
என் அன்னை பெருமை சொல்ல...

என்னுள்ளில் துடிக்கும் பாசத்தில்
என்னுயிர் உருகிச் சொல்வதொன்றே...
கற்பனைத் தெய்வத்தின் வடிவந்தனை
கண்முன்னே காண வைத்த தெய்வம் நீ

---கீர்த்தனா---

இனிய அன்னையர்தின வாழ்த்துக்கள் என் செல்ல அம்மா...

Saturday, 9 February 2013

ஓடு ஓடு வேகமாக...

ஓயாமற் துரத்தும்
துன்ப அலைகளின்,
துரத்தலின் வீரியத்தால்
கலங்காதே மனமே!

எழுச்சி கொண்ட
வேகக் குதிரையாய்,
முன்னோக்கிப்
பாய்ந்து செல்!

ஒருகணம் தாமதித்தாலும்
இழுத்துச் சென்று மூழ்கடிக்கும்...
ஆழக் கடலினுள்
மீள முடியாமலே...
ஓடு ஓடு வேகமாக,
மிக வேகமாக....
காற்றைக் கிழித்தபடி...

---கீர்த்தனா---

Friday, 8 February 2013

பூம்பஞ்சுச் செல்வம்

பஞ்சு மேகக் குவியலை
மென்மையாய்த் திரட்டி...
பட்டாம்பூச்சியின் அழகினை
மெதுவாகத் திருடி...
அத்தனை வண்ணமும்
குழைத்தொன்றாய்த் தீட்டி...
சத்தமில்லாமல் உன்
கைகளில் பூங்கொத்தாய்த்
தந்தானோ...பிரம்மனும்...
பூம்பஞ்சுச் செல்வத்தை...

---கீர்த்தனா---

Thursday, 7 February 2013

என் மனைத் தேவதை... • நீராடிய பூமயில்...
  நிலவாக பூமியில்...
  விரித்த கூந்தல்
  பனித்துளி உதிர்க்க...
  வாராயென அழைத்தது
  வீசிய நறுமணம்!

  பின்புறம் அணைத்து
  முகம் புதைத்தேன் - என்
  மனைத் தேவதை
  குழற் கற்றை துழத்தி
  வாசம் நுகர்ந்தேன்...
  சுவாசம் நிறைத்து!

  இன் காதல் மையலிலே
  மெதுவாகச் சாய்த்தாள் - தன்
  மென் தேகப் பஞ்சுடலை...
  இயைவாக எந்தன்
  நெஞ்சணையில்...

  நெற்றிச் சுருளின் நீர்த்திவலை
  சற்று உருண்டது நாசிதொட்டு - பின்
  ஒற்றி மகிழ்ந்தது மென்னிதழை - நான்
  முற்றும் முற்றும் எனை இழந்து
  சுற்றும் பூமியை மறந்து நின்றேன்...

  ---கீர்த்தனா---

 • துழத்தல் = அளைதல்
 • ஜீவ மழை....


  அன்பின் ஜீவ மழைத் துளியின் ...
  சிறுதூறல் நனைத்து விட்டால்...
  புதிதாய்ப் பிறப்பேன்!
  எழுத்தாணி எடுப்பேன்!
  எழுச்சிதரும் எழுத்தினிலே...
  சமூகப் பிழை களைவேன் - முண்டாசுக்
  குருவின் தங்கப் பணி தொடர்வேன்!

  பசித்திருக்கும் தமிழ்த் தாயைப்
  புசிக்க வைத்து நான் மகிழ்வேன்!
  இயற்கையையும் இரசிப்பேன்!
  இனிதான உண்மை நட்பின்...
  இன்பெருமையும் எடுத்துச் சொல்வேன்!

  உயிர்க் காதலையும் உணர்வேன்!
  ரசம் நிறைந்த தாம்பத்யம்...
  விரசம் இன்றியே வரைவேன்!
  பிணி வழங்கும் வலி விழுங்கி
  இனிதாகப் புன்னகைப்பேன்!
  இந்த நொடி முதல் - புத்தம்
  புதுப்பூவாய் நான் மலர்வேன்!

  ---கீர்த்தனா---

  Monday, 4 February 2013

  மூடு பனிக்குள் புதைந்து...

  வெண்ணிற ஆடையில்...
  மௌன தேவதைகளாய்
  ஒவ்வொரு மரங்களும்....

  விறைத்து நின்றது இயற்கையும்
  மூடு பனிக்குள் புதைந்து...
  அசாதாரண அமைதியுடன்...

  பார்வையினூடே நெஞ்சச் சிறைக்குள்
  குளிரின் அத்து மீறிய ஊடுருவல்...
  சுடுபானம் தேடின நாடி நரம்புகள்...

  கதிரவனை எதிர்நோக்கிக்
  காதலுடன் இரு விழிகள் - அவன்
  வெப்பத் தழுவலுக்காய்க் காத்திருக்கும்
  கணங்கள் யுகங்களாய்...

  பஞ்சுச் சிறகுக்குள்
  நெஞ்சக் குளிர் மறைக்க
  சிலிர்ப்புடன் மரக்கிளையில்
  சின்னப் பறவைகள் - அவற்றைப்
  போர்வை கொண்டு போர்த்திடத்
  துடிக்கும் என் கரங்கள்....

  ---கீர்த்தனா---

  என் மனைத் தேவதை...


  நீராடிய பூமயில்...
  நிலவாக பூமியில்...
  விரித்த கூந்தல்
  பனித்துளி உதிர்க்க...
  வாராயென அழைத்தது
  வீசிய நறுமணம்!

  பின்புறம் அணைத்து
  முகம் புதைத்தேன் - என்
  மனைத் தேவதை
  குழற் கற்றை துழைத்து
  வாசம் நுகர்ந்தேன்...
  சுவாசம் நிறைத்து!

  இன் காதல் மையலிலே
  மெதுவாகச் சாய்த்தாள் - தன்
  மென் தேகப் பஞ்சுடலை...
  இயைவாக எந்தன்
  நெஞ்சணையில்...

  நெற்றிச் சுருளின் நீர்த்திவலை
  சற்று உருண்டது நாசிதொட்டு - பின்
  ஒற்றி மகிழ்ந்தது மென்னிதழை - நான்
  முற்றும் முற்றும் எனை இழந்து
  சுற்றும் பூமியை மறந்து நின்றேன்...

  ---கீர்த்தனா---

  Saturday, 2 February 2013

  என்னுயிர் பாரதி...! 2


  நெஞ்சினுள் வாழும்
  என்னுயிர் பாரதி...!
  சமூகச் சாக்கடைகளை
  மிதித்தபடி நடக்கின்றேன்,
  மாற்றிடுவேன் எனும்
  நம்பிக்கையில்...!

  மந்தைகளாய் வாழும்
  மாந்தர் மத்தியில்...
  மனிதத்தைத் தேடிய
  என் பயணம்!
  நல்லவர் கெட்டவர்
  பிரித்தறிவோம்!
  வீணர்கள்   யாவரையும்
  மிதித்திடுவோம் !
  சுயநலம் கொண்ட  மனங்களுக்கு
  பொதுநலம் யாதெனக்
  கற்றுத் தருவோம் !

  உன் பக்தையாய் வாழும்
  தகுதி இல்லையென
  ஒருகணம் எண்ணிய
  தன்னிரக்கம் தொலைத்தே...
  வீறு கொண்டெழுந்தேன் - இனி
  ஏறு போல் நடப்பேன் !!
  நீறு பூத்த இலட்சிய நோக்கை
  பற்ற வைப்பேன்...பெரு நெருப்பாய்
  உன் இலட்சியம் காப்பது ஒன்றே
  பெருங் கடனாய் ....!

  ---கீர்த்தனா---