Sunday 30 June 2013

வைர முத்துக்களாய்.....

குங்குமம் குழைத்துப் பூசி
பொன்முகம் சிவக்க மலர்ந்து
இன்முகச் செங்கதிரோன்
மிதந்து வரும் வழி நோக்கி...

செங்கமலச் செல்வியின்
சலிக்காத காத்திருப்பும்...
நீரோட்டத்தில் மிதந்து
மெதுவாய் அசைந்தாடும்
அவள் சிறு நளினமும்...

வட்டப் பச்சிலைத் தட்டில்
நீர்த்துளி ஒட்டாமல்...
வைர முத்துக்களாய் உருண்டோட
தானும் அசைந்து அவள் களிப்பில்
பங்கு கொள்ளும் இலையின் அழகும்...

பார்க்குந்தோறும் சலிக்காமல்
வியந்து வியந்து இரசிக்க
மானுடக் கண்களுக்கு
விருந்தாய்த் தந்தான் இறைவன்...

---கீர்த்தனா---

Friday 28 June 2013

சிப்பிக்கு தெரிவதில்லை!

பிரசவிக்கும் முத்தின் பெருமை
சிப்பிக்கு தெரிவதில்லை!
ஆழ்கடலில் முத்துக் குளிப்பவன்
அறிவான் அதன் அருமை!

கேட்காமல் கிடைப்பவை,
எல்லாமே பெறுமதியற்று!
ஏங்கி தவித்துக் கிடைப்பவை
முத்துக்குளித்துப் பெற்ற உணர்வுடன்...
பொக்கிஷமாய்... பத்திரமாய்....
பொத்திப் பொத்தி...

---கீர்த்தனா---

மௌனக் கசக்கலில்...

தொட்டால் சிறகுதிரும்
பட்டாம்பூச்சிச் சிறகாய்
வண்ண மென்மனம்!

அழுந்தத் தொட்ட
மௌனக் கசக்கலில்
சிறகுத் துகள்களாய்
உதிர்ந்து உதிர்ந்து...

---கீர்த்தனா---

Monday 24 June 2013

ஊழிக்கூத்து

ஊழித் தாண்டவம்
நானும் ஆடுவேன்
மனிதம் மறந்து
எனை நீ அழிக்கையில்!!!

உனக்காய்ப் படைத்தேன்
மரங்களும் செடிகளும்..
சுயநலம் கொண்டாய்...
பூண்டோடு அழித்தாய்!!
இயற்கையுடன் இயைந்து
வாழ மறுத்தாய்!!!

அறிவியல் கற்றும்
அறிவிழந்த மனிதா...
வினை ஒன்று இழைத்தால்
விளைவு ஒன்று உண்டென
அறியாயோ நீயும்....

நீ அடங்கும் வரை
நானும் ஆடுவேன்...
தொடர்ந்தும் தொடர்ந்தும்
ஊழித் தாண்டவம்!!!

இந்தக் கணம் முதல்
அழிப்பதை நிறுத்து!
பசுமையைச் சேர்த்து
செழிப்பதை காத்து...
இயற்கைத்தாய் எந்தன்
மனம் குளிர்வித்து!!!

---கீர்த்தனா---

Friday 21 June 2013

நிலவு நிரந்தரம்..

வருந்தாதே நீயும்
நிலாமுற்றம் இல்லையெனினும்
நிலவு நிரந்தரம் என
சொன்னது நீ தானே??
கருமுகில்கள்
நிலவின் மாண்பை
நிரந்தரமாய் மறைத்தனவோ??
உலா வரும் நிலவின்
வரவிற்காய் ஏங்கி
விழி மேகத்துள்
இரண்டு கறுப்பு நிலாக்கள்
கலங்கிய ஓடைக்குள் மிதந்தபடி
இறவாத அன்பை எக்கணமும்
மறவாமல் சுமந்தபடி...

---கீர்த்தனா---

Wednesday 19 June 2013

வண்ணச் சோலையிலே

தும்பி பறந்த அவ்
வண்ணச் சோலை!
நுண்ணிய மனதிடை
அன்பு கொண்டு ஆறாக...

உண்மை அன்புடன்
கண்ணியம் கொண்ட
அன்பாளர் நிஜமாய்
யாரிங்கு தும்பியே?
பதில் சொல்லென
கணை விடுத்த கேள்விக்கு
என் சொல்வேன் தோழியே
தேடிப் பறக்கின்றேன்!
இன்று நீ நாளை யாரோ
எனும் அன்பாளர்களே
அதிகம் கண்டேன் என்றது!

நொந்த மனது வெந்த
காயங்களுடன் உயிர் கொடுத்த
அன்பு மீண்டும் கிட்டுமோ என
வெம்பி வெம்பி தேம்பி தேம்பி...
தும்பி பறந்த வண்ணச் சோலையிலே
நம்பியபடியே காத்திருப்பு....

----கீர்த்தனா---

Monday 17 June 2013

துகிலுரியும் துச்சாதனர்கள்...

துகிலுரியும்
துச்சாதனர்கள்
மரகதப் பட்டாடை
பறித்து இழுக்க!

காணச் சகிக்கா
மழை மேகம்
இறுகக் கண்கள் மூடி,
பொழியும் துளிகளையும்
தனக்குள் அடக்கி
எங்கோ சென்றுவிட!

கூனிக் குறுகிய
இயற்கை அன்னை
ஈர நெஞ்சங்களைத் தேடி
பட்டாடை வேண்டாம்
ஆடை கொடுங்கள் போதும்
எனும் மன்றாட்டுடன்
கதறி அழ!!

துரத்தும் வில்லன்களாய்
மரம் அழிப்போர்...
காப்பதற்கு துடிக்கும்
நல்லோரையும் மீறி....

---கீர்த்தனா---

மரங்களைக் காக்கும் பெரும் பணி புரியும் தம்பி சிதம்பரம் திருஞானம் அவர்களுக்கு இந்த கவிதை சமர்ப்பணம்..

Sunday 16 June 2013

அன்பு கொண்ட நட்பு மட்டும்...

கதையல்ல நிஜம் சொன்னேன்
புரியாத உயிரன்பில்...
ஜென்மங்கள் பல நூறு
தொடர்ந்து தான் வந்தாயோ?
நட்புகள் ஒரு கோடி
நடப்புகள் பல கோடி
விலகாமல் உனைத் தேடி
தினந்தோறும் கவி பாடும்...
உளம் தன்னை யார் தந்தார்?
புரியாமல் விடை தேடி...
திட்டினாலும் பிடிக்கிறது
மௌனம் கொண்டால் வலிக்கிறது
அன்பு கொண்ட நட்பு மட்டும்
துடிப்போடு வெல்கிறது!!

---கீர்த்தனா---

அப்பா....

அன்னை சுமந்த பாரம்
கருவறை விடுத்து
மண்ணில் விழுந்த கணத்தில்
தன் நெஞ்சுள் ஏற்றும் ஜீவன்!
ஏற்றிய நிமிடம் முதல்
ஊற்றும் உதிரத்தில்
ஒளி விளக்கேற்றி
தன்னுயிர் வளர
தன்னலம் தொலைத்து
மெழுகாய் கரைந்து
மெதுவாய் உருகி
வாழ்வின் எல்லை வரை,
அத்தனையும் எமக்கீந்து
உழைப்பின் வலியை
நம் சிரிப்பில் மறக்கும் அப்பா....

----கீர்த்தனா----

அனைத்து தந்தையர்களுக்கும் என் அன்பான இனிய தந்தையர் தின நல் வாழ்த்துக்கள்.

Friday 14 June 2013

வறண்ட நிலம்!

மண் பிளந்து
அகல வாய் திறந்து
வான் துளி பருக
அண்ணாந்து பார்த்தபடி
வறண்ட நிலம்!

"மண்ணே நீ மண்ணாய்ப் போ"
என அலட்சியமாய்
உல்லாசப் பயணத்தில்
மழை மேகம்!

வயிறு சுருண்டு
தாகம் கொண்டு
நா வறளும் போதினிலும்
வியர்வைத்துளி நீர் பாய்ச்ச
துடித்தபடி விவசாயி!

----கீர்த்தனா----

Sunday 9 June 2013

பசுமை

பச்சையத்துக்கும்
மனக் குளிர்ச்சிக்கும்
அழகிய தொடர் காதல்!
வெம்மை தணிக்கும்
பன்னீர்ப் பூக்களாய்
இயற்கை அமைத்த
இனிய விதி!

---கீர்த்தனா---

உள்ளங்களும் பனியாய் உறைந்து

எங்கேயோ எனது கவிதை வரிகள்!
எதற்காகவோ மனதின் அலை பாய்ச்சல்!
எந்திரத்தனமாய் உறவுகள்!
எதுவுமே இல்லாததாய் உணர்வுகள்!
ஏக்கமும் வெறுமையும் சூழ்ந்து வலிக்கும்
புலம் பெயர் வாழ்வு...

எதற்கான வாழ்க்கை????
கடமையாய் உண்டு, உறங்கி, எழுந்து
மறுபடி உண்டு, உறங்கி, எழுந்து
எதுவிதப் பற்றுமின்றி...
நேரம் காலமின்றி உழைப்பது
ஒன்றே குறியாய்...
சராசரி வாழ்வுக்கு ஓடியோடி
உழைத்தே ஆக வேண்டிய கட்டாயத்தில்...

சந்திப்பதெனில் நூறு தரம் சிந்தித்து
முன் கூட்டியே நேரம் குறித்து...
இயந்திரத்துடன் இயந்திரம் பேசுவது போல்
உணர்வுகள் இறந்த பிணைப்புகள்!

வாழ்வே வெறும் சூனியமாய்
பனியின் உறைவு உள்ளங்களிலும்!
திக்கெட்டும் பரந்து போய்
இரத்த சம்பந்தங்கள் எங்கெங்கோ
எதற்காய் வாழ்கின்றோம்???
அடிக்கடி எழும் கேள்வியுடன்...
தொடரும் பயணம்...

---கீர்த்தனா---

Saturday 8 June 2013

புதைகுழி

இழப்புகளின் கடைநிலை வரை
திருந்தி விட நினைப்பதில்லை!
தாலிக்கயிறும் தன்னுயிர் விந்தும்
கொடுத்துப் பெற்ற உறவுகளின்
கண்ணீரும் சுடுவதில்லை!
தூக்கி எறிந்து செல்லாது
மாற்றி விடத் துடிக்கும்
பாசத்தின் கனமும் புரிவதில்லை!

அழகிய கூட்டின் நிம்மதிமூச்சு
குலைவதும் தெரிவதில்லை!
தெருவினில் படுக்கின்ற,
நிலை ஒன்று வரும் வரை
வருத்தமும் இல்லை!
மது அரக்கன் தட்சணையாக
தன்னுயிருடன் பிற உயிர்
பறித்திடப் போவதை உணரவுமில்லை!

உணருகின்ற நேரத்தில்
வாழ்வின் வசந்தங்கள் எதுவுமே
மிஞ்சப் போவதுமில்லை!!!!!
மீள முடியா ஆழத்துள் வீழ்வது நிஜம்..
எழ நினைத்தாலும் எழுவதற்கு வழியின்றி
புதைகுழிக்குள் முழுதாய் புதைந்து...
ஒரு கணம் ஒரே ஒரு கணம்
அனைத்தையும் நினைத்துப் பார்..
மனிதன் என்பவன் மிருகமாகிய,
உறைக்கும் உண்மை சட்டென சுடும்!!

---கீர்த்தனா---

மகிழ்வு அனுபவிப்பதற்காகவோ, இல்லையெனில் துன்பம் மனதை சூழுகையில் தற்காலிகமாக அதை மறப்பதற்கோ குடிப்பழக்கம் ஆரம்பிக்கிறது. பெரும்பாலும் மெல்ல மெல்ல மது மனிதனை முற்றாக ஆக்கிரமித்து அனைத்தையும் இழக்கச் செய்வது மறுக்க முடியாத உண்மை. எல்லாராலும் அதை அளவாகப் பாவிக்க தெரிவதில்லை. அதனுடைய பாதிப்பில் மதுவுடன் சேர்த்து விலங்கு குணமும் மெது மெதுவாக அவர்களை ஆக்கிரமிக்கிறது. மது அருந்துவதால் எந்த பிரச்சனைகளுக்கும் தீர்வு கிட்டப் போவதில்லை. அவர்களை நம்பி வாழும் உயிர்களும் நடுத் தெருவுக்கு வரும் நிலையோ இல்லையெனில் விபரீத முடிவுகளுக்கு அந்த உறவுகள் ஆளாகும் நிலையோ ஏற்படலாம். ஒருவர் சுயநலத்தால் பல உயிர்கள் பாதிக்கப் படலாமா? அந்த குடிப்பழக்கம் இருப்பவரிடம் இருக்கும் நல்ல குணங்கள் அனைத்தும் மது அரக்கனால் பிடுங்கப்படும் என்பது, மிகவும் வலிக்கும் உண்மை. இன்றைய கால கட்டத்தில் அதிலிருந்து மீள்வதற்கு எவ்வளவோ நவீன மருத்துவங்கள் வந்து விட்டன. அன்புள்ளங்களே!! இது யாரையும் புண்படுத்த எழுதவில்லை. இந்த நிமிடத்திலிருந்து ஒருவராயினும் இந்தப் பழக்கத்தில் இருந்து மீளுவாரானால், அவர் வாழ்வுடன் அந்தக் குடும்பத்தின் வசந்தமும் என் எழுதுகோலுக்கு சாந்தி அளிக்கும்.. அன்புடன் என்றும் உங்கள் நலம் விரும்பும் கீர்த்தனா

Wednesday 5 June 2013

மென்மையின் வன்போராட்டம்..

மருள்விழி மானின்
துள்ளலும் பாய்ச்சலும்
புற் தரை மேய்ச்சலும்
சுனை நீர் நீச்சலும்
சந்தோஷ கணங்களாய்
மென்மைக் குணத்துடன்!!

புலியின் விரட்டலில்
வாழ்வின் கணங்கள்
நொடி நொடியாய்
தோற்கையில்....
அத்தனை பலமும்
ஒன்றாய்த் திரட்டிய
கடைசி முயற்சியில்
மென்மை வன்மையாகி....
போராடும் திறன் பெற்று
வாழ்வு இல்லையெனின் சாவு..

---கீர்த்தனா---

Tuesday 4 June 2013

நெஞ்சச் சுமை

மலையொன்று பெரிதாக
தடையாகக் கண்முன்னே
கரம் கொண்டு நீ தூக்கு,
சஞ்சீவி மலை தன்னை
அநாயாசமாகத் தூக்கிய
ஆஞ்சநேயா!!! தாள் பற்றினாள்
தஞ்சம் நீ என உன்பக்தை...
திடம் கொண்ட புஜம் தூக்கி
இடர் யாவும் உன் தோளில்
மலையாகச் சுமந்து கொண்டு
இவள் நெஞ்சச் சுமை இறக்கு...
சுமக்கும் சக்தி இழந்து விட்டாள்...

---கீர்த்தனா---