Tuesday 20 August 2013

காற்று சுமந்து வரும்...

தூரங்கள் தூரமாய்...
காற்று சுமந்து வரும்
உயிர் மூச்சு...
பிரபஞ்சத்தின்
அத்தனை மலர்களின்
வாசத்தையும்
ஒன்றாய்
அன்பின் வடிவில்
சுவாசத்தில் கலந்து
நறுமணம் வீச வைக்கும்...
வாழ்வின் கடைநிலை
வாழ்தல் வரை...

---கீர்த்தனா---

இரு நிலவுகள்!!

வெண்ணையாய் திரண்ட கன்னம்
வெண்மையாய் மின்ன மின்ன!!
அண்ணாந்து பார்த்தான் என் மகன்
அண்ட வெளியை நோக்கி...
சின்னஞ்சிறு மலர்க்கை தூக்கி
மேலே சுட்டிக் காட்டி!!

அண்ணாந்து பார்த்தேன் நானுமங்கே
வெண்ணை திரண்டு பந்தாய் உருண்டு
வெண்ணிலவு ஒளிவீசித்
தண்மையாய் ஊர்ந்தது!!
கண்களை நிரப்பின இரண்டு நிலவுகள்!!
ரசித்தேன் ரசித்தேன் சுற்றும் மறந்து...
என் தளிர் நிலவவனையும்
வெண் குளிர் 
நிலவினையும்!!!

---கீர்த்தனா---

தூங்கா அதிசயமாய்,,,

தூங்கும் விழிகளுக்குள்
தூங்கா அதிசயமாய்
தூளி கட்டி ஆடும்
நினைவுக் குழந்தைகள்...

---கீர்த்தனா---

Friday 16 August 2013

எச்சில் நீரும் தேன் சுவையாகும்...

எச்சில் நீரும்
தேன் சுவையாகும்
சின்ன இதழ் கடை
சிரிப்பினில் வழிந்து
சொட்டும் துளிகள்
நம்மிதழ் தொடுகையில்...

திக்கும் மழலை
"அம்மா" சொல்கையில்
சொக்கும் பரவசம்
பூ மெத்தை விரிக்கும்...
நட்சத்திரங்கள்
கண்களில் ஜொலிக்கும்...

---கீர்த்தனா---

இழப்பு

எம் சுவாசம் தந்தவள்
தன் சுவாசம் இழக்கையில்...
யாவும் இழந்த நம் யாக்கை
வெறும் கூடாக!
உணர்வுகளின் தடங்கள்
சுடும் தீயாக!
அன்னை மடிக்காய் ஏங்கிப்
பொங்கிய கண்ணீர் ஆறாக
வேதனையின் பிழிதல் சாறாய்
உருகி உருகி நெஞ்சம்
உதிரம் கொட்டியபடி!

இழப்பு அது தன்னுயிர்
ஈந்தவள் போகும் வரையில்
யாதார்த்தமான வெறும் கணக்கு!
பாசாங்கில்லாப் பாசம்
இனி எங்கேயெனப்
பொங்கிக் கதறி அழும்
மனதின் உயிர்த்துடிப்பு
அவள் சுவாசத்தைக்
காற்றில் தேடி அலைந்தபடி..

EN KANAVAR RAVIYIN ANNAI IRAIVANADI SERNTHAAR.. :((

மேகப்பூக் கணைகள்...

வானம் எய்த
மேகப்பூக் கணைகள்
மோகம் கொண்டு
புவியுடல் தழுவ
இராகம் பிறந்தது
மழை விடு தூதில்...




---கீர்த்தனா---

மொழியிழந்தோம்


உயிர்த்தமிழ் அமுதாய்
உறவாடிய நாவில்...
அலுப்போடு உறவாடும்
அந்நிய மொழியின் தேவை!

உபயோகம் இன்றி
உள்ளே அடங்கிய அமுதம்!
வருடக்கணக்கில்
ஆழ்மனதின் வேதனையாய்
உணர்வுடன் உறைந்து போய்!

வெம்பியழும் மனது
தமிழன்னையிடம்
மன்னிப்புக் கோரி
ஒவ்வொரு கணங்களும்!

இலக்கணமும் இலக்கியமும்
மங்கிய புகை ஒளியாய்
முழுமை அற்று மறதியின் பிடியில்...

நாளை என் வம்சம்
அன்னை மொழி மறந்த நாவுடன்
புலம் பெயர் நாட்டில்!

நக்கினார் நாவிழந்தார் அன்று!
நக்கினோம் மொழியிழந்தோம் இன்று!
உறைக்கும் உண்மை இருப்பினும்
சுரணையற்று தொடருகின்றோம்...
தொடர்ந்தும் தொடர்ந்தும்...
நாடிழந்து அகதிகளானதால்....

---கீர்த்தனா---

Wednesday 7 August 2013

வலி..

வலி எழுத விரும்பவில்லை
எழுதுகோல் தொட்டதும்
வலிகளே வரிகளாய்
உணர்வுகள் ரணங்களாய்
உடைந்து சிதறின வார்த்தைகள் ...
கடிவாளம் வலிகளுக்கும்
இறக்கைகள் கனவுதேசத்துக்கும்
கைகள் ஏந்திக் கடவுளிடம்...

---கீர்த்தனா---

Tuesday 6 August 2013

ஆழ் உறக்கம்...

தடையில்லாச் சிறகுகள் வேண்டும்...
வாடகையில்லா வான்வெளியில்
சுகமாக மிதந்து மிதந்து
பறந்தது பறந்து களைத்தபின்னே!

நீளப்பரப்பிய மேகக்கட்டிலில்
வெண்பஞ்சு மெத்தைக்குள்
பொன்பஞ்சு உடல்புதைத்து
வெண்மதித் தண்மையில்
மென்குளிர் தழுவிடவே!

பொன்னெழில் செங்கதிரோன்
சுட்டெழுப்பும் கணம் வரையில்
வாழ்வின் அவலங்கள் மறந்து
வானத்து வண்ணப் பறவையாய்
நட்சத்திரப் பூக்குவியல் மத்தியில்
மெய்மறந்த ஆழ் உறக்கம்...

---கீர்த்தனா---

ஒற்றைக் குயிற் பாட்டு....

நீண்ட பெரு வெளியில்
மிரட்டிச் சூழ்ந்த இருளில்...

அண்டசராசரமும்
இடிந்து விழுந்த உணர்வில்...

ஒவ்வொரு நிமிடத் துளிகளும்
பென்னம்பெரு நரகத் துளிகளாய்...

தனக்குள் அடக்கிய துன்பச்சுமைக்குள்
தன்னையே அடக்கம் செய்யும்
ஆதரவற்ற நிலையில்...

வாழ்வாதாரம் தேடும்
ஒற்றைக் குயிற் பாட்டாய்
உள்ளே எழும் கேவலின் சோக ராகம்
எங்கோ தூரமாய் யாருக்கும் கேட்காமலே...

---கீர்த்தனா---