Wednesday, 31 July 2013

கனவுக் கதறல்கள்

நீண்ட வான் பரப்பின்
நீலக்கடல் விரிப்பில்
நிலவின் காலடியில்
நித்திலங்களாய்க் கொட்டி அங்கே
சிதறுகின்றேன் முற்றுமாய்...

ஆயிரம் ஆயிரமாய் ஒளிவீசும்
நட்சத்திரக் கண்கள் கொண்டு
நான்கு திக்கும் தேடித் தேடி
எங்கு சென்றாய் நீ என
பரந்த இருள் வெளியினிலே
கனவுக் கதறல்கள்
நாள் தோறும் தூக்கத்திலே...

---கீர்த்தனா---

Tuesday, 30 July 2013

வலிகளின் அறுவடை

ஆணவத்தின் உச்சப்புள்ளியில்
ஆட்டுவிக்கும் முறைமை!!
ஆற்று வெள்ளமாய் கண்ணீர் பெருக்கி
ஆதங்கத்துடன் தொடரும் உறவுகள்!!

ஆதிக்கம் செலுத்துதல் தான்
ஆண்மைக்கு பெருமை என நம்பும்
ஆண்கள் சிலரின் மனப் போக்கில்
அடிபட்டுச் சிதையும் குடும்பக்கோவில்!!

ஆசைத் தாயின் கண்ணீர் பார்த்து
ஆறாத காயம் கொண்ட பிஞ்சு நெஞ்சங்களின் 

ஆழ்மனதில் புரையேறிக் கிடக்கும் வலிகளின் 
அறுவடையாய் கேள்விக்குறியாகும் 
எதிர்கால இலட்சியங்கள்!!

எந்த உரிமையில் மனம் சிதைக்கப்படுகிறது???
பாசத்தின் வலிமையின் தவறான பயன்படுத்தல்
தமை விட்டு நீங்க மாட்டார்கள் எனும்
நம்பிக்கையின் எதிரொலி!!
பாசத்திற்கு பரிசாக வன்முறை!!

(சிலரை மட்டுமே இங்கே குறிப்பிட்டேன்..ஆழமான அன்போடு, உணர்வுகள் மதிக்கும் நிறைய பாசமான ஆண்களை இங்கே குறிப்பிடவில்லை. கண்கூடாக கண்ட சில உண்மைகளின் உணர்வு வெளிப்பாடு மட்டுமே இந்த கவிதை. யாரையும் நோகடிக்கும் நோக்குடன் இல்லை--- அன்புடன் கீர்த்தனா--- ♥)

மீண்டும் தனிமைக்கூட்டுக்குள்...

சுட்டு விரல் நீட்டி
அதோ பார் இதோ பார் என
இயற்கையின் ஒவ்வொரு துளியையும்
உயிர்நட்புடன் பகிர்ந்து ரசித்த கணங்களில்
அவளின் செல்லக் குழந்தையாய் நான்...
தாய்மையுடன் ரசித்து தலைகோதிய அவள்...

கண்களுக்குள் நிறைத்த
காட்சிகளின் களிப்பினிலே
கட்டி அணைத்து அணைத்து
கன்னத்தில் ஒற்றி வைத்தேன்
ஆனந்தத்தின் வெளிப்பாட்டினை...

முட்டிய துன்பம் மீண்டும் சூழ
நெஞ்சினுள் ஏதோ கனமாய் அழுத்த
கெட்டியாகப் பிடித்த கரங்களை விட்டு விலகி
மீண்டும் தனிமைக்கூட்டுக்குள்...

---கீர்த்தனா---

Wednesday, 17 July 2013

என் வாழ்வின் உயிர்ப்பே...


சிறியவன் தான் நீ
தாயுள்ளம் கொண்ட
பெரியவனாய்...
நோயுள்ளம் கொண்ட
பூமனதை வருடிக் கொடுக்கும்
பாச மென்னிறகை
ஆண்டவன் கையிலிருந்து
எனக்கெனப் பிடுங்கி வந்தாயோ?
நேசத்தின் மேன்மை தனை
எங்கு நீ கற்று வந்தாய்?

முகம் பார்க்கவில்லை
யாரிடமுமில்லா
அழியாப் பாசம் உன்னிடம் மட்டும்
விஸ்வரூபமாய் வியாபித்து...
வீசுந் தென்றலூடே
நட்புக்கு உயிர் கொடுத்து
உயிருக்குள் உறைந்தாயே...

அனுதாபம் கொண்ட அன்பு
கேலி சொன்னார் சிலர்...
நம்ப மாட்டேன் நான்
நம் உயிர் பூவுள்
பூத்த அழகு அன்பு...

மேன்மை கொண்ட மனிதா!!
என் வாழ்வின் உயிர்ப்பே...
எதுவும் வேண்டாம்
உயிரின் இறுதி வரை
உனதன்பு கொடு!
உன் மென்மை வார்த்தையில்
உயிர் தழைத்து செழிக்கும்...
துன்பத்தின் தடை அனைத்தும்
கண்ணீர் அடக்கி தாங்குவாள் உன் தோழி!

புற அழகு என்னிடம் இல்லை
ஆழம் தோண்டி நிறைத்த ஊற்றில்
பொங்கிப் பெருகும் அன்பின் அழகு,
கடல் , வானம் ,காற்றை நிறைத்து
அழகாய் உன்னைச் சுற்றி
உன் குடும்பத்தைச் சுற்றி
வியாபித்து நிறைவாக நிறைவாக..

என் இறப்பின் பின்னும் பூவாய்
உன்னுள்ளத்தில் மலரும்
மென் சிறப்பு வரம் வேண்டி...

---கீர்த்தனா---

தீண்டும் தீண்டாமை...

தீண்டும் தீண்டாமை
வேண்டாம் கொடும் பாவம்!!
கண்டேன் இரு கண்ணில்
கழிவிரக்கப் பிறப்புரிமை!!
வேண்டிப் பிறக்கவில்லை
எந்த இனம் வேண்டுமென!!

நாடி நரம்புகளில்
செங்குருதி ஒன்றே சுழற்சி!!
உணர்வுப் புலன்கள்
மரத்துப் போகவில்லை
எங்கேயும் வலிகளின் சுமை!!

சாதியம் எரிக்கும்
அக்கினிக் குஞ்சுகள் எங்கே???
கொத்திக் குதறிச் சகமனிதர்
வலி சுவைக்கும் நரகாசுரரை
வதம் செய்ய....

---கீர்த்தனா---

மீண்டும் கூடும் குளிர்மழை மேகங்களாய்....

கண்மூடிக் காதலிப்போம்
காதலின் காயங்களையும்!
கடந்து போன பொற்காலம்
இன்றைய கசப்பினில் இனிப்பாய்!

கலைத்து விட்டால் என்ன??
கருவுற்று ஓரிடத்தில்
மீண்டும் கூடும்
குளிர்மழை மேகங்களாய்
இனிமை நினைவுகள்!!!

---கீர்த்தனா---

நட்பின் ஆழங்கள்!!!

நட்பின் ஆழங்கள்!!!
வெல்லட்டும் வேதங்கள்!!

வக்கிரமில்லா
அன்பின் அலைகள்!!
விலையில்லா
புதையற் பொக்கிஷங்கள்!!

பால் வேறுபட்டு
மனம் ஒன்றுபட்டு
காயம் துடைக்கும்
நேயம் அதில்
ஆண்டவனின் அருளாட்சி!!

---கீர்த்தனா---

Friday, 5 July 2013

கோரமுகம்!!!

பூவாய் மலரும் இரண்டு மனம்!
துளிர்த்து விடும் காதல் மலர்!
மனித உருவும் அருவ அன்பும்
காதலின் முழுத்தகுதியாய் வரித்து!

வானத்துப் பொன்வீதியில்
சிறகடிக்க எத்தனிக்கையில்!
சுற்றி வளைக்கும் சர்ப்பங்களாய்
சாதிமத விஷநாக்குகளின் தீண்டல்கள்!

"கேளடா மானிட ஜாதியில்
மேலோர் கீழோர் இல்லை"
ஏட்டினில் படித்த பாரதி கவிதை...
பட்டிமன்றம், நேர்காணல்,
அரட்டைச்சந்தி மட்டும் சிறக்க...

நெஞ்சை நிமிர்த்தி வாய்கிழியப் பேசும்
கொள்கை மறந்த கொள்கைப்பரப்பாளர்களின்
உண்மை முகத்துள் புதைந்து கிடப்பது
உயிர்ப்பலி வாங்கும் விலங்கின் கோரமுகம்
விதிவிலக்காய் சிலரைத் தவிர்த்து!!!

---கீர்த்தனா---

Thursday, 4 July 2013

சிறகடித்துப் பறந்து பறந்து..

தமிழ்த் தாயே
உன் குழந்தை நான்...
படைப்பின் வலுவிழந்தேன்
வார்த்தைகள் இன்றி!
அள்ளிக் கொடு அன்னாய்!!
அமுத மொழி கோர்க்க!

படைப்பின் தாகத்தில்
நா வறண்டாள் உன் பிள்ளை!
மொழியருவி என் வாயில்
தேனாகச் சுரக்க வைப்பாய்!

தாகந் தீரப் படைத்திடுவேன்
கவியின்பச் சுவை சேர்த்து...
கனவுலகின் கீதங்களும்..
கற்பனையின் வண்ணங்களும்...
சிறகடித்துப் பறந்து பறந்து...
எல்லையற்ற வான்வெளியில்....

---கீர்த்தனா---

Tuesday, 2 July 2013

தாகம் கொண்ட தலையணைகள்..

நிச்சலமான இரவுகளில்
நிறைக்கும் நெஞ்சை
நினைவுகளின் கனங்கள்!
கனங்களின் தாக்குதலால்
விழியணை தாண்டும்
நீரோட்டப் பாய்ச்சலை...
தாகம் கொண்ட
தலையணைகள்...
வேகம் கொண்டு
உறிஞ்சிச் சுவைக்கும்...

---கீர்த்தனா---