Tuesday 6 January 2015

மின்னுகின்ற வைரநிலா!

அன்பென்னும் தேன் பொழிய
அண்டமெல்லாம் அதில் குளிர
பொன்னிறத்து வைக்கோல் மேல்
மின்னுகின்ற வைரநிலா
பாலகனே நீர் உதித்தீர்
பாவமெல்லாம் கரைத்து விடும்!

செபம் சொல்லி செபம் சொல்லி
ஆண்டவனைத் துதித்த பின்னும்
பாவ மூட்டை சேர்க்கின்றோம்...
பாவியர்கள் உலகமெலாம் ...

மனிதம் எங்கே சென்றதுவோ...
மனங்கள் எல்லாம் வருத்துகின்றோர்
குணங்கள் மாற்ற வாரீரோ
குறைகள் எல்லாம் தீர்ப்பீரோ...

நொந்து போன ஆட்டுக்குட்டிகளின்
சிலுவை பாரம் ஏற்பீரோ...
வெந்து போன மனங்கள் தனை
மன்னவரே காப்பீரோ...

விண்ணகத்து வண்ண நிலா
மண்ணகத்தில் மலர்ந்தீரே!
எண்ணமெலாம் அறிந்து நீரும்
வண்ணமய அகிலமொன்றை
சாந்த விழிப் பார்வையினால்
அன்புமயம் ஆக்கிடுவீர்...

---கீர்த்தனா---

சனி பகவான்...

அடுத்தடுத்து ஆயிரம் பிரச்சனை
விடுத்துக்கடக்க முடியவில்லை...
ஏழரைச்சனி பிடித்தாட்டுதாக்கும்
விரதம் பிடியென அம்மா சொன்னார்...

பிறந்தநாள் முதலாய்
என்மேற் காதல் கொண்டானோ
அன்புச் சனி பகவான்...

இத்தனை ஆண்டுகள்
சளைக்காமல் பின்னாலேயே
சுற்றிக் கொண்டே வருகிறானே...

பலதடவை உச்சத்தில் நின்று
உச்சபட்சக் காதல்...
உயிர்நின்று மூச்சுமுட்டி
மீண்டு வந்து மீண்டு வந்து...

விட்டுவிடு தலைவா...
முக்கால் கடந்துவிட்டேன்
காலையாவது
நிம்மதியாய் வாழ்ந்து போகிறேன்...

கீர்த்தனா