Tuesday 30 April 2013

பிரிவின் நொடிகளுக்கு

பிரிவின் நொடிகளுக்கு
முட்களின் கூர்மை....
சரியாகத் தைக்கும்
குறி தவறாமல்.....

அப்பா...!!!


காற்றினில் நீங்கள் கலந்த போது....
வேற்றுலகில் நான் தனித்துப் போய்...
வாழ்ந்தவரை துன்பச் சிலுவைகள்
ஏற்றுக் கொண்டீர்...எனை இலகுவாக்கி...
தேற்றுவாரற்று இரவின் மடியினில்
இறுக்கும் துன்பம் களைவாரின்றி...
அப்பா! அப்பா! எனத் தேம்புகின்றேன்
தூக்கம் தொலைத்து விழிநீர் பெருக்கி...

வற்றாத உங்கள் பாசத்துக்காய்
வறண்ட நிலமாய் நெஞ்சம்...
உறிஞ்சிக் குடிக்கும் தாகத்துடன்...
காற்று சுமந்துவரும் விடிகாலைப் பொழுதுகளில்
உயிர்ப்புடன் «கீதாஞ்சலி» எனுமழைப்பை....

எமனும் எதற்காய் வஞ்சம் வைத்தான்
குரல் வளையை பிடுங்கிச் சென்றான்!
உளம் நிறைக்கும் பாசத்துக்காய்...
கருணை கொஞ்சும் புன்னகைக்காய்...
ஜீவனுள்ள அன்புக்காய்...
உயிர் தொடும் உச்சி முகர்தலுக்காய்...
ஏங்கிக் கைகளை விரித்தபடி...
சின்னஞ் சிறு சிறுமியாய் இன்னும்...
கண்ணீருடன்... அப்பா...!!!

இன்று மட்டுமல்ல என்றும் உங்கள் நினைவு தினமே....

தூறலின் பின்...

தூறலின் பின் மென் அமைதி...
தூய்மைச் சிலிர்ப்பில்
மலர்களும் மரங்களும்...
நீர்த்துளிகள் சொட்டச் சொட்ட
தலைக் குளித்த தேவதைகளாய்...

---கீர்த்தனா---

Saturday 27 April 2013

இச்சையுடன் காதல் செய்தேன்...

வண்ணங்கள் ஆயிரம்
வஞ்சியின் நெஞ்சுக்குள்!
கொஞ்சிடும் காதலில்
கொஞ்சமாய்க் கவிதைகள்!

பஞ்சமின்றி அருவியாய்க்
கொட்டிடக் கொட்டிட!
கண்களும் சொக்க
மற்றதெல்லாம் மறக்க!
இயற்கை வண்ணக் காதலனும்
முழுமையாய் மனம் நிரப்ப!

இச்சையுடன் காதல் செய்தேன்
இனிமேலும் காதல் செய்வேன்!!
துச்சம் இனி துன்பம் எல்லாம்
மிச்சம் வலிகள் இனியும் வேண்டாம்!!

---கீர்த்தனா---

Thursday 25 April 2013

இதம்

தலை வருடும்
உன் கரங்களின்
மென் ஸ்பரிசத்தில்
பாசத்தின் மென்
அலைகள்
நேசம் கொண்டு
மயிலிறகாய்
மாறியதோ???
மனக்காயம் மெதுவாக
இதம் உணர்கிறதே!!!

---கீர்த்தனா---

Wednesday 24 April 2013

ஆழம் அது ஆழம்..

ஆழம் அது ஆழம்
அனைத்து மனமும் ஆழம்!!
ஆள வந்தவரோ
அழிக்க வந்தவரோ !!

நீங்காத நேசமோ
நிலையில்லா நேசமோ?
நோகடிப்பாரோ
நோதுடைப்பாரோ?

புறம் பேசுவாரோ
புகழ் பேசுவாரோ?
பராபரமே நாமறியோம்..
நீந்தித் தொடலாம்
ஆழக்கடல் ஆழம் தனை!
தொட்டு விட முடியாது
மனக்கடலின் ஆழம் தனை!

---கீர்த்தனா---

Tuesday 23 April 2013

உயிர்கொல்லிப் புகை தள்ளி...


ஆழமாய் உறிஞ்சி இழுத்து
ஆர்வத்துடன் உள் நிரப்பி
சுவாசப் பையைத் திணற வைத்து
வட்டமாய், நீளமாய் பின்
அலையலையாய்....
சொர்க்கம் கண்டு கொண்டேன் என
துப்பினாய் வெளியே புகையாய்
உன் உயிரை சொட்டு சொட்டாய்
---கீர்த்தனா---

Sunday 21 April 2013

வசந்தகாலப் பறவைகளாய்....

மஞ்சட் கதிர் பரப்பி
சன்னல் வழி வழியே
புலர்ந்தது எழு என்று
பொன்னொளித் தலைவனவன்
மெல்லவே தேகம் சுட்டான்!

சின்ன விழி மலர
சன்னல் திரை விலக்கி
எட்டிப் பார்க்கையிலே
கொஞ்சும் பறவை ரெண்டு
ஒரு கிளை விட்டு
மறு கிளை தாவி
காதற் குலவல் கொண்டு
கொஞ்சும் இசை மொழியில்
நெஞ்சை நிரப்பினவே...!

வெண் பனி துரத்தி விட்டு
இன் முகம் மலர்த்தி நின்று
வண்ணங்கள் விழி பருக
வசந்தத்தை வரவேற்று...
பனி பொழியும் நாட்டினிலே
வசந்தகாலப் பறவைகளாய்....!

---கீர்த்தனா---

Saturday 20 April 2013

ஜனனம் எதற்காய்

எண்ணிய பெருமை
அத்தனையும் பொய்மை
திண்ணமாய் எண்ணியவை
எதுவுமே உண்மை இல்லை

வன்மை மனங் கொண்ட மனிதர்...
எங்கேயும் எங்கேயும்.....
தேடி அலைந்தும் காணவில்லை
உண்மை அது எங்கே இவ்வுலகில்...

மேன்மை வைத்து பூஜித்தேன்
வேஷம் கொண்ட பொய்முகங்கள்
ஜீரணிக்க முடியாமல்....
மரணம் கொண்டது மனது
ஜனனம் எதற்காய் இவ்வுலகில்
கொண்டேன் நானும் புரியவில்லை
வலிகள் வலிகள் போகும்
வழியெங்கும் வலிகள்

---கீர்த்தனா---

Friday 19 April 2013

கருவாய் நட்பினை நாம் சுமப்போம்...

ஒரு சிறு வாசகம்
பெரும் திரு வாசகமாய்...
ஒரு தேற்றும் பார்வை - வருடும்
அரு மயிலிறகாய்...
இரு மனதின் நேசம்
ஒரு மனதின் நேசமாய்...
உரு இல்லாக் காற்றினூடே
பெரும் அன்பின் பரிமாற்றம்
மரு இல்லாப் புனிதத்துடன்..

கரும் மனதுகள் சில - மாசற்ற
அரும் அன்பினைப் புரியாமல்
பெரும் வலி கொடுத்தாலும்...
தரும் பாசம் என்றுமே....
வெறும் வேசமல்ல உணரப்படுகையில்
நறு மணம் வீசும் நல்நட்பு என்றென்றும்...
பெறும் உன்னதப் பதிவாய்
பெரும் நட்புக்கு இலக்கணம்
இரு அன்புள்ளங்கள் நாமென்று!

உருவில்லா உயிர்த் தோழமை
உருவாக்கும் பெரும் சாதனை!!
கருவினைத் தாய் சுமப்பாள்
இரு ஐந்து மாதங்கள்!
கருவாய் நட்பினை நாம் சுமப்போம்
இரு ஏழு ஜென்மங்கள்!

---கீர்த்தனா---

Wednesday 17 April 2013

தீந் தமிழ்த் தாய் தேவதையே!!!


சொல்லாட்சி நான் புரிய
நல்லாசி தா!! தமிழ் அன்னாய்!!
உன் மாட்சி நா நிதமும்
தேன் கொண்டு பா புனைய!!

இன் இன்பக் கவியினிலே
என் துன்பம் புவியினிலே
இல்லாமல் ஓடி விட - உன்
நல்லாட்சி நடம் புரிய!!

தீந் தமிழ்த் தாய் தேவதையே
தேனமுதம் ஊட்டி விடு!!
தீராத பசியோடு தினம்
காத்திருப்பேன் புசிப்பதற்கு!!

வாஞ்சையுடன் பரப்பிடுவேன்
தீஞ்சுவையின் பெருமை தனை
தரணி எங்கும் மணம் கமழ
தங்கத் தமிழர் மனம் குளிர!!

---கீர்த்தனா---

Monday 15 April 2013

இரக்கச் சொட்டுக்களால் நனைத்து விடு...

சொட்டுச் சொட்டாய்
குருதி உதிர்க்கும்
அன்பினில் வாடி
பலமிழந்த ஓரிதயம்...

ரௌத்திரம் கொண்டு
மிதிக்காதே என்னுயிரே...
துடிப்பது என்றோ
ஒருநாளில் எனினும்-உனை
ஆனந்தப்படுத்திய உறவு...

இரக்கச் சொட்டுக்களால்
நனைத்து விடு...
இரத்தச் சொட்டுக்களை
இரசிப்பவன் நீயல்ல என்னுயிரே...
இல்லையெனின்
என்னுயிரைத் தின்றுவிடு!!

ரணத்தின் வடிவம்
அறிந்தவன் நீ
வந்து விடு இந்நிமிடம்...
பூக்களினால் காயங்களினைத்
துடைத்துவிடு...

---கீர்த்தனா---

அரு திருநங்கையர்...

ஆண்டவன் அன்பினில்
மலர்ந்தது ஓரினம் - அவன்
அருளினில் விளைந்தது
அழகிய உன்னதம்!!!
அருள்நிறை நங்கையர்
அரு திருநங்கையர்!!


உருகும் உணர்வுகள்
கருக்கினர் தீயினில்... 
கருவினில் சுமந்தவள்
அருகினில் வளர்ந்தவர்
தெருவினில் வீசினர்....
பூஜை மலர்களின்
புனிதம் புரியாமலே!!!

அர்த்தநாரீஸ்வரர்க் கடவுளை
அர்த்தமுடன் வணங்கும் நாம்...
வணங்கிட வேண்டாம்...
குணமுள்ள திருநங்கையவள்
மனம் மதித்தால் அது போதும்
மணம் வீசும் அவள் வாழ்வும்!!!

---கீர்த்தனா---

Sunday 14 April 2013

வருக வருக சித்திரைப் பொன்மகளே!!!!

ஆலய மணிகள் எல்லாம்
வேத கான ஒலி எழுப்ப!!
நாத இசை எங்கும்
தென்றலிலே தவழ்ந்து செல்ல!!

செந்தூரப் பொடி தெளித்து
செங்கதிரோன் ஒளி பரப்ப!!
நந்தவனப் பூம்பாவையர் தம்
இதழ் விரித்து சுகந்தம் தர!!

சிங்காரச் சிறகடித்து - சிறு
பறவையினம் பாட்டிசைக்க!!
பாற்கடலும் பொங்கிப் பொங்கி
நடனமாடி வரவேற்க!!

நா வல்ல பாவலரும்
பா வெல்லத் தமிழிசைத்து
சொல்லமுத முத்தாரம்
சிறப்பாகக் கோர்த்து வைக்க!!

தித்திக்கும் பொங்கலுடன்
தேமதுரக் கனி படைத்து,
எத்திக்கும் இன்பங்கள்
நித்தியமாய்ப் பொங்கிடவே!!

சித்திரைப் பூமகளின்
முத்திரை பதிக்க வரும்,
கற்கண்டு வருகைக்காய்
வண்ண வண்ணக் கனவுடனே
தமிழன்னை பிள்ளைகள் நாம்!!

விஜய வருடமதை வரவேற்கக் காத்திருக்கும் அனைத்து அன்புறவுகளுக்கும்....அன்புகனிந்த இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்... :)))))))))))))))

அன்புடன் கீர்த்தனா ( கீதா ரவி )

Saturday 13 April 2013

கத்தும் கடலலை


நட்ட நடு நிசியில்
கத்தும் கடலலையின்
எட்டித் தொடும் முயற்சி
வட்ட நிலா அதனைத்
தொட்டுப் பார்த்துவிட
வெள்ளி நுரை அள்ளித்
துள்ளித் துள்ளி நிதம் - ஓங்கி
உயர்ந்தெம்பி ஓயா முயற்சியுடன்...

எட்டாக் கனியமுத
வெண்ணிலாப் பெண்ணவளும்
மேகப் படையணியின்
வேகப் பாதுக்காப்பில்...
நோக வைத்தேன் கடலலையே
சோகம் தவிர் மேகம் தொட்டு
மழையாய் உனைத் தீண்டுவேன்
இழைந்து இழைந்து எனைக்
குழைவாய் அணைத்துக் கொள்ளென்றாள்...

---கீர்த்தனா---

Friday 12 April 2013

இத்தனை அழகையும் பருக மறுத்து.......


எத்தனை அழகாய்
பிரபஞ்சம் படைத்தான்
இத்தனை நிறங்கள்
கண்ணுக்கு விருந்தாய்...
காண்பதெல்லாம் கனவல்ல
கண்முன் அதிசய ஓவியமாய்... 

பட்டாம் பூச்சிச் சிறகின் நேர்த்தி
பட்டுப் பூவின் இதழின் நேர்த்தி
வண்ணமயிலின் துள்ளும் ஆட்டம்
நீலக் குயிலின் இனிமைப் பாட்டு
பச்சைக் கிளியின் கொஞ்சும் பேச்சு
மிதக்கும் வெண்ணாரைக் கூட்டம்

தலையசைத்தாடும் தென்னங்கீற்று
தடையின்றிப் பாயும் வெள்ளியருவி
தொங்கி மிதக்கும் வெண்பஞ்சு மேகம்
பொங்கி நுரைக்கும் நீலக் கடல்
வெண்மணல் பரத்திய அழகிய கரை

ஓங்கி உயர் மரகத மலைகள்
மாருதம் வீசும் மருத நிலங்கள்
இரவினை ஆளும் நிலா மகராணி
இவளினைச் சூழ்ந்து நட்சத்திரத் தோழியர்
இரவினில் கமழும் மல்லிகை வாசம்
சாமரம் வீசும் வேப்பமரங்கள்

கதிரவன் அந்தப்புரம் தாமரைக்குளமும்
சந்திரன் அந்தப்புரம் அல்லிக்குளமும்
அழகாய் விரியும் அற்புத விடியல்
அந்தியில் உரசும் பகலும் மென்னிருளும்
இன்னும் சொல்லா ஆயிரம் அழகும்
இத்தனை அழகையும் பருக மறுத்து
அமைதி இழந்து எதையோ தேடி...

---கீர்த்தனா---


Tuesday 9 April 2013

செல்வ மகன்





அன்றைய நாளில்
இறக்கைகளுக்குள்
பொத்தி வைத்து
உறங்கிய ஞாபகம்
இந்த நிமிடம் போல்....

"ங்கா" எனும் மெல்லிய
இனியமொழி முனகலுடன்
பஞ்சுடல் மென்ஸ்பரிசம்
மென்மையாய் நெஞ்சுக்குள்
இன்னும் வாசத்துடன்....

பட்டுக் கை கால்கள்
மெல்ல அசைத்தசைத்து
மெத்தென உதைத்து...
கன்னம் குழிய குழியக்
கொள்ளை கொண்டு சிரித்து....

தேனாய் எச்சில் ஒழுக ஒழுக
முத்து முத்தம் பதித்து...
ஒரு போதுமே அழுது
அழிச்சாட்டியம் பண்ணியதில்லை
அம்மாவின் சிறகிழப்பை அறிந்து
பிறந்த செல்வம் போல்...

இன்று மூவாறு நிறைந்து...
அண்ணார்ந்து நான் பார்க்கும்
உயரத்தில் வளர்ந்து... நான்
பெற்ற செல்வ மகன்...
நெஞ்சமெல்லாம் நிறைந்து

வாழ்த்துகின்றோம்... நீ
பிறந்த இந்நாளில்
பார் போற்றும் பெருமையுடன்
நீடூழி வாழ்க வாழ்க!!!

Monday 8 April 2013

உறவுகளின் மௌனமொழி...

உலவுகின்றோம் உணர்வுள்ள
மனித இயந்திரங்களாய்
உருளுகின்ற பூவுலகில்
ஊஞ்சலாடும் உள்ளத்துடன்
புள்ளி இல்லா வட்டமொன்றில்!!

புரியாத உறவுகளுடன்
புரியாத உணர்வுகளுடன்
சுற்றிச் சுற்றி முடிவில்லாமல்
அதே வட்டத்தில்...தொடர்ந்தபடி!!

உறவாடும் உறவனைத்தும்
இறுதிவரை வருவதில்லை!!
உறுதியாகத் தெரிந்தாலும்
உளம் சாந்தி கொள்வதில்லை

உறவுகளின் மௌனமொழிக்கு
அகராதியில் அர்த்தம் தேடி
உணர்வுகளின் ஆளுதலில்
முற்றாகத் தொலைந்தபடியே...!!

---கீர்த்தனா---

Sunday 7 April 2013

பூந்தளிர்க் கண்ணா!!



கண்ணா உந்தன்
வெண்ணை திருடும்
கண்ணைச் சிமிட்டும்
குறும்புப் பார்வை
கரும்பாய் என்
நெஞ்சை அள்ள...!!

அரும்பாய் மலர்ந்தாய்
சுழிக்கும் சிறு,
மொட்டிதழ் விரித்துப்
புன்னகைப் பூவால்...
தேன்துளி தெளித்துக்
கொள்ளை கொண்டாய்
மாயக் கள்வா!!!!

கரும் நுரை மேகம்
வண்ணமாய் குழைந்து
மென்னுடல் கொண்ட
பூந்தளிர்க் கண்ணா!!
மாந்தளிர்ப் பாதம்
மார்பினில் உதைத்தாய்!!

என் மடிமீதும்
கனவினில் புரண்டாய்
அள்ளி அணைத்து
ஆராரோப் பாடினேன்!!
ஆண்டவன் என் மடி
தூங்கிய பேரின்பத்தில்
கண்மை கசிய
ஆனந்த நீர் பெருக!!!

---கீர்த்தனா---

அன்புப் பிசாசு நான் ...


நான் நீயாக...

நான் நானாக வாழ்ந்ததை விட
நான் நீயாக வாழ்ந்த கணங்களே
அதிகமாய்...... உந்தன்
உணர்வுகளில் ஆழ்துன்பம் உண்டு
உதட்டின் சிரிப்பினில்,
வலியின் விழுங்கல் உண்டு
நானறிவேன்.... ஏனெனில்
நீயறியாமலே உன் துன்பம்
சுமப்பவள் நான்...அறிவாயோ என் அன்புக் குழந்தை நீ
இறுதிவரை உனக்காய் சுமப்பேன்
தாலாட்டும் தாயாய் இருப்பேன்...
அன்பின் வடி
வினில் இறைவன்
உன்னிடமும் என்னிடமும்...

--- கீர்த்தனா---

"ஊர்க்காற்று"




அழிந்த எம் கிராமத்தை விட்டு புலம் பெயர்ந்து வாழும் என் கிராமத்து மக்கள் பெரும்பான்மையோர் ஸ்விட்சர்லாந்து நாட்டில் "ஊர்க்காற்று" எனும் ஒன்று கூடல் நிகழ்வில் இணைந்து மண்வாசனையை நுகர்ந்தோம்...அந்த நினைவுப் பதிவு இந்தக் கவிதை...அவ்வளவு மகிழ்வு 28, 30 வருடங்களின் பின் உறவுகளை சந்தித்த உணர்வின் வெளிப்பாடு சொல்ல வார்த்தைகள் இல்லை... :))))))))))) ♥

***************************************************

எழில் கொஞ்சும் நம் கிராமம்
குரும்பையூரின் நாமம் தனை
உச்சரிக்கும் போதினிலே
உணர்வுக் குழம்புகளாய்...நாம்...
புரண்டு தவழ்ந்த செம்மண்ணின்
புகழ் வாய்ந்த பெருமை தனை
நினைக்கும் தோறும் நினைக்கும் தோறும்
தாயவளைத் தொலைத்துத்
தவிக்கும் குழந்தையின் உணர்வுடனே...

திணைப்புலங்கள் ஐந்து எனக் கற்றோம்
ஆறாந்திணைப் புலமாய் நாமும் கண்டோம்
அன்பும், அன்புசார் நிலமுமாய்
குரும்பசிட்டிக் கிராமந்தனை!

எட்டுத்திக்கும் சென்று தான் நானும் பார்த்தேன்!
ஏழு கடல் தாண்டியும் தான் தேடித் பார்த்தேன்!
நம் வீட்டுக் கிணற்றுநீரின் சுவை...
இக்கணம் வரை...எங்கேயும் கிட்டவில்லை!

ஓங்கி உயர் பனங்காடுகளும்..
தென்னங் கீற்றுகளில்
தென்றல் உரசும் சலசலப்பும்..
வெண்மலர் தாங்கி நின்று
குடை விரித்த தேமாக்களும்...

அமைதி சூழ் ஆலயங்களும்
சிங்காரமாய் அசைந்து வரும் - நம்
கலைஞர் கைவண்ணச் சிறப்பில்
அம்மன் கோவிற் சித்திரத்தேரும்...
இனிய திருவிழாக் காலங்களும்...
பச்சையம் போர்த்திய விளைநிலங்களும்
இச்சை இன்னும் தீராமல்...
மனக் கண்ணுள் இரசித்தபடி...

இளைஞர் இளைப்பாறலுக்கு
நிழல் தந்த அரசமரமும், அரசடிச்சந்தியும்...
சிட்டுக் குருவிகளாய் நாம் சிறகடித்துத் திரிந்த
ஒற்றையடிப் பாதைகளும்...
மணிகடைச்சந்தி, குரும்பசிட்டிச்சந்தி..
மாயெழு, வவுணத்தம்பை வீதிகளுடன்
இன்னும் பிற வீதிகளும்...

முதலெழுத்தை முத்தாய் நாம் கற்ற
பொன் அவர் தந்த பரமானந்தா பாடசாலையும்...
விளையாட்டு, கலைப்பணி பெருமையுடன்
வளர்த்து வந்த சிறு தமிழ்ச் சங்கங்களும்...
கல்வியிற் சிறந்து மேன்மை பெற்ற
மேதைகளின் பெருமைகளும்...
சிம்மக் குரலோன் நேர் கொண்ட பார்வையுடன்,
நாம் கண்ட பாரதியாய் நடராஜா மாஸ்டரும்...
பெயர் குறிப்பிடா இன்னும் பல
சமூக ஆர்வலர்களும்...

இன்னும் இன்னும் சொன்னவை சில
சொல்லாதவை பலவாய்ப் பசுமையாய்ப் பதிந்த
குரும்பையூரின் அற்றைய நினைவுகளை...
சூல் கொண்ட தாயாய் இற்றைவரை
நெஞ்சினுள்ளே சுமந்தபடி,
புலம் பெயர்ந்த நாடுகளில் நாமெல்லாம்!!!
நெஞ்சம் உகுக்கும் செந்நீரின் ஈரத்துடன்
அழிக்கப்பட்ட கிராமத்தின்
பழைய கோலம் தேடியபடி
ஏக்கத்துடன் இன்றும்...

அன்று ஊர்க்குருவிகள் நாமெல்லாம்
ஊர்விட்டுப் பறந்து சென்றோம்
இன்று ஊர்க்காற்றுத் தென்றலது
ஒவ்வொருவர் காதினிலும்
பாசம் கொண்டு அழைப்பு தனை
மென்மையாய் வருடிச் சொல்ல..
ஓடி வந்தோம் நாமுமிங்கு
வாழ்வின் இறுதிக்குள்
ஒருமுறையேனும்
உறவுகளுடன் சங்கமிக்க...

ஒருங்கிணைத்த உறவுகட்கும்
ஒப்பில்லாச் சொந்தங்களுக்கும்
ஆயிரம் கோடி நன்றி...
நெகிழ்வுடனே நெகிழ்வுடனே
நெஞ்சாரக் கூறி நின்றோம்...

---கீர்த்தனா (கீதா ரவி)---