Thursday 31 October 2013

சந்திர கிரகணங்களாகும் சந்தோசங்கள்!

சந்திர கிரகணங்களாகும்
சந்தோசங்கள்!
சந்திரனைச் சர்ப்பம்
விழுங்குவதாய்
சொல்லித் தந்தாள் அம்மா!
சர்ப்பமாகி நம் சந்தோசங்களை
நாமே ஏன் விழுங்குகின்றோம்
பல சமயங்களில்...

---கீதா ரவி (கீர்த்தனா)---

Tuesday 29 October 2013

நிலா முற்றம் இடிந்தது!



அன்று ஒரு அழகிய நிலாக்காலம்!
இன்முகம் மட்டும் நட்பின் மடியில்!

ஒருவர் துன்பம் ஒருவர் சுமந்து..
ஒருவர் இன்பத்தில் அனைவரும் மகிழ்ந்து!

வரவில்லை எனின் பதைத்து துடித்து!
வந்து விட்டால் பாசத்தில் அணைத்து!

அழகாய் கூடும் நிலா முற்றம் ஒன்று
சங்கம் வளர்த்து ஒன்று கூடி..
நகைச்சுவை பேசி வாய்விட்டு சிரித்து
எழுத்தினில் அவரவர் உணர்வுகள் கொட்டி
கருத்தொருமித்து வாழ்ந்த காலம்
கண்பட்டதோ?? கனவானதோ???

நிலா முற்றம் இடிந்தது!
நிம்மதி தொலைந்தது!
நேசங்கள் பாசங்கள்
இடம் மாறிச் சென்றன!
உள்ளத்தின் குமுறல்கள்
ஊமைக் காயங்களாய்...
காயங்கள் வலித்தாலும்
மயிலிறகாய் வருடும்
அன்புடன் வாழ்ந்த இனிய நினைவுகள்!


--- கீர்த்தனா---

சுட்டு விரல்களுக்குள் அடங்கின..

ஆனந்த விளையாட்டுக்கள் - இன்று
அடங்கின சுட்டு விரல்களுக்குள்...
துள்ளித் திரிந்த சிட்டுக்கள் - இன்று
அள்ளித் தெளித்தனர் சினத்தை!!!
முல்லைச் சிரிப்பை மறந்து
இருக்கை விட்டு எழ மறுத்து...
கொள்ளை கொள்ளையாய்
சிற்றுண்டி கொறித்தபடி....
கொட்டக் கொட்ட திரையை
உற்றுப் பார்த்தபடி...
விரல்கள் மட்டும் ஓயாமல்
விவரமாய் நர்த்தனமாடியபடி...

--- கீர்த்தனா---

இடிந்து போன மனவீட்டில்...

எதிர்மறை எண்ணங்களின்
சுத்திகரிப்பு ஆலை ஒன்று
இடிந்து போன மனவீட்டில்
இக்கணமே நிறுவ வேண்டும்!!


--- கீர்த்தனா---

சிறப்பு !!


சுழரும் பூமிக்குள்
தமிழின் அழகிய
ழகரமாய் நட்பின்
அழகுச் சிறப்பு !!

குழலின் நாதமும்
யாழின் இசையும்
இழைவதொப்ப
மௌன மொழியின்
மோனச்சிறப்பு!!

விழியின் மூடிய
கதவுகளுக்குள்
குழையும் அன்பின்
ஏகாந்த ராகங்களில்
வழியும் உன்னத
ஆற்றுப் படுத்தல்கள்!!!

--- கீர்த்தனா---

பூவான நெஞ்சங்களுக்கு...

புலர்காலைப் பொழுதினிலே
புன்னகைக்கும் பூக்களெல்லாம்
பூவான நெஞ்சங்களுக்கு
இயற்கை அன்னையின் சமர்ப்பணமாம்!!!

குப்பைக் காகிதமாய்...

வானவில் வளைத்து
வண்ணங்கள் குழைத்து
தூரிகைக் கனவினை
உயிர் ஓவியமாய்
வடித்து வைத்தேன்!!!
சூழ்ந்து கொண்ட
கடும் இருளில்
நிறம் இழந்து..வெறும்
குப்பைக் காகிதமாய்
வண்ண ஓவியம்!!!

---கீர்த்தனா---

பூக்களின் விருப்பம்...

சடசடத்துக் கொட்டும்
மழைத்துளிக்கு
தெரிவதில்லை
பூவுக்கு வலிக்குமென்று!!

தூறலின் மென்மையில்
இதமான நனைதலே
பூக்களின் விருப்பமாய்!!!

---கீர்த்தனா---

உயிர்ப்பயணம்!!


எங்கோ தவறுகள்
மட்டுமே புரிதல்களாக!!!
எங்கும் சாந்தி வேண்டி
பொங்கும் சமாதானம் வேண்டி
வெண்புறாவைத் தேடி
எந்தன் உயிர்ப்பயணம்!!
எல்லா உள்ளங்களுக்கும்
சாந்தியும் நிம்மதியும்
நிரந்தரமாய் உண்டாகட்டும்!!!
உருகும் மெழுகுவர்த்தி
ஒளி தரும் என்றும்...
தன்னுயிர் தந்து!!!!

--- கீர்த்தனா---