Thursday 26 September 2013

நடைப்பிணங்கள்...

புன்னகை பூக்கும்
புண்பட்ட நடைப்பிணங்கள்
பூமிக்கு பாரமாய்...

பூவுக்குள் ஒளிந்திருக்கும்
முகாரி இராக கீதங்கள்
யார் காதுக்கும் கேட்காமலே..
அடங்கும் உயிரின் ஒலி...

--- கீர்த்தனா---

திலீப தீபம்

வயிற்றில் வளர்த்த வேள்வித்தீயில்
உயிர் கரைந்த நிமிடங்களை
யுகங்களாய் எண்ணியபடி
காத்து விட மாட்டார்களா என்று
அன்று நாம் கதறித் துடித்த நாட்கள்...

உடலை விட்டு மூச்சு பிரிந்த கணம்
ஒருமித்த மக்கள் வெள்ளத்தின்
ஓவென்ற கதறல் ஒலியின்
வலியின் பிழிதல்
பச்சை ரணமாய் இன்னும் வலித்தபடி...

மனிதம் உள்ளவரை...
அகிம்சை என்ற சொற்பதம்
இவ்வையகத்தில் வாழும்வரை...
இனியவனே நீ என்றும் சிரஞ்சீவி!
என்றோ ஒரு நாள்
உன் கனவு மெய்ப்படும்!
உன் மனதின் பசி அடங்கும்!
அதுவரை நிம்மதியாய் உறங்கு!


தெய்வீகம்...!

காற்றில் கரைகின்ற
கற்பூர ஜோதி
கரைந்து அழிந்தாலும்...
விட்டுச் செல்லும்
அதன் வாசனை
என்றும் தெய்வீகம்...!

--- கீர்த்தனா---

தனி மனித மாற்றம்

ஓயாத அலைகளாய்
நெஞ்சத்தின் கதறல்கள்!
சமூக மாற்றம் அது
தனி மனித மாற்றம்
என்பதை அறிந்தும்!
இலகுவான போதனைகள்
பிறருக்கு மட்டுமாய்...

நெஞ்சத்துப் பேரலையை
சிறிது தணிப்போராய்...
சொல்வதை செய்யும்
பாரதியின் தாசர் சிலர்!
பெய்யும் வான்மழை
அவர்க்காய்...
இன்னும் மனிதம்
கொஞ்சம் வாழ்வதால்...

---கீர்த்தனா---

பேரன்பின் உயிர்ப்பாய்....

நித்தம் நித்தம்
பூஜைக்கு பூக்கள்
கூட மலராமல் போகலாம்!

உயிரில் கலந்த அன்புக்காய்
விழியோரம் கண்ணீர்ப்பூக்கள்
நாள் தவறாமல் அழகாய்ப் பூக்கும்!

ஒவ்வொரு துளியும்
பேரன்பின் உயிர்ப்பாய்...
யாரும் அறியா
நெஞ்சக் கோவிலில்
நாளும் சமர்ப்பணமாய்...

---கீர்த்தனா---

கண்ணீரின் மொழி...

கண்ணீருக்குள்
ஒளிந்திருக்கும்
ஏதேதோ கதைகள்...
பன்னீர் அபிசேகம் 
எதற்கென அறியாத 
ஆண்டவன் போல்...
கண்ணீரின் 
மொழியறியா
மனிதர்களாய் 
நம்மில் பலர்.....

---கீர்த்தனா---

கருணைக் கடலே!!

கருணைக் கடலே!!
அறியாப் புதிரே!!
உணர்வுக் கடலாய்
எனையேன் படைத்தாய்?

இனிமை தந்தனை
இயற்கை வடிவினில்!
வலிகள் தந்தனை
அன்பின் வடிவினில்!

சுகிக்க நினைத்தால்
சுடுகின்ற வலிகள்..
இயற்கையின் அழகினை
எரித்துக் கொன்றன!!

மாறாத பேரன்பு
வெல்லும் என்று...
மனதோடு மழைக்காலம்
குளிர்விக்கும் என்று...
பச்சையம் நிறைந்த
பசுமை மனதுக்காய்...
உன் கழல் தொழுதேன்
அரவணைத்து அருள்வாய்!!

---கீர்த்தனா---

வாராதிருப்பாயோ...

வாராதிருப்பாயோ
கோபம் கொண்ட
வான் முகிலே!!

மழையில் குளிக்க
பூக்கள் எல்லாம்
வான் நோக்கிப்
பார்த்தபடி....!!

---கீர்த்தனா---

வீணைகளின் புழுதி தட்டி...


நம்பினோர் கெடுவதில்லை
நான்கு மறை தீர்ப்பு - இன்று
நம்பினோர் எழுவதில்லை
வீழ்வதுவே தீர்ப்பு!

தர்மங்களும் நியாயங்களும்
பாழுங்கிணற்றின் வயிற்றுக்குள்
முழுமாதக் கர்ப்பிணியாய்
பெருத்து உப்பிய படி...

விதி விலக்காய் சிலர் தவிர்த்து
வீதி தோறும் மனிதம் செத்தோர்!!
நல்ல மனம் தேடித் தேடி
நாடெல்லாம் ஓடி ஓடி!!!

எழுச்சி கொள்ளத் தெரியாத
வீழ்ச்சி கொண்ட மனிதர்களாய்
பாரதியும் இன்றிருந்தால்
வீணைகளின் புழுதி தட்டி...
நல்லதோர் வீணையாக
ஒவ்வொன்றாய் மாற்றி இன்று
நல்லுலகம் படைத்திருப்பான்!!!

---கீர்த்தனா---

நெஞ்சத்து ஆசைகள்!












அந்திவானத்து வெட்கச் சிவப்பு!
அழகுப் பூக்களின் வண்ண அணிவகுப்பு!
ஆசையாய் கொஞ்சும் பட்சிகள் காதல்!
ஆனந்த கானத்தின் உயிர்ப்புத் தழுவல்!

ஆண்டவன் சன்னதி மங்கள வாத்தியம்!
ஆரண்யம் நடுவே மூங்கில் குடில்!
ஆடிக் களிக்கும் தோகை மயில்கள்!
துள்ளித் திரியும் மருள்விழி மான்கள்!

நுரைத்துச் சுழித்தோடும் அழகு நீரோடை!
ஓங்கி உயர்ந்து பொங்கும் கடலலை!
அழியா அன்பின் அழகிய இராகம்!
இந்தக் கணத்தின் நெஞ்சத்து ஆசைகள்!

---கீர்த்தனா---

முட்களின் அணிவகுப்பு !!


பயணங்கள் 

முடிவதில்லை!
பாதைகள் 

தெரியவில்லை!
பாதம் தொடும்

இடமெலாம்
முட்களின் 
அணிவகுப்பு !!


---கீர்த்தனா---

இவள்...

இவள் இயற்கையன்னையின்
கைக்குழந்தை!!!!
வண்ணங்களும் உணர்ந்தவள் - உரு
இல்லா வலிகளும் உணர்ந்தவள்!!
இலக்கணம் நன்கு அறியாது
இயல்பாய் கிறுக்கி விட்டு - தமிழ்த்
தாயின் மடியில் புரள்பவள்!!!

---கீர்த்தனா---

வினாக்குறிகள்....


விடுகதை வாழ்வுக்கு
விடை தேடும் மனதுக்கு
தொடர்கதையாய்
வினாக்குறிகள் மட்டுமே
மிச்சமாய் !!



---கீர்த்தனா---

வெண்மையின் உண்மை!!

அறியாமல் செய்யும் தவறு!
அன்போடு மன்னிக்கும் தாய்மை!
கண்ணீரும் மாலையாகி
தேம்பும் குழந்தையின்
கலங்கிய கண்களுக்குள்
வெண்மையின் உண்மை!!


---கீர்த்தனா---

திருக்குறளே தேசிய நூல்

வாழ்வியற் தத்துவங்கள்
அத்தனையும் மொத்தமாய்!
இருவரிகள் வடிவினில்
இரத்தினச் சுருக்கமாய்!
தந்தனன் ஐயனும்
குறள் வடிவினிலே!
நற்றவம் செய்தோம் நாம்
திரு வரிகள் உணர்ந்திடவே!

முப்பாலும் கலந்து தந்து
எப்பாலோரும் உணர வைத்து
அறனுடன் சேர்த்து
அனைத்தும் வலியுறுத்தும்...
ஆண்டகை வாக்குகள்
நாட்டினை ஆளும்!!
உயிர்களைக் கவரும்
உலகினை வெல்லும்!!

தெள்ளு தமிழினிலே
அள்ளிக் கொடுத்த வரி...
அறிஞர் மனம் கவர்ந்து,
திரை கடலும் கடந்து,
உலமெலாம் பரந்து...
உயரிய சிறப்பதனால்
மேன்மைதனைப் பெற்ற
அருந்தவ நூல் தனை
தேசிய நூல் ஆக்கிடவே
யோசித்தல் தகுமா???
யாசித்தல் முறையா???

அன்புடைமை பெருக்கி
பண்புடைமை வளர்க்கும்!
வாழ்வியலின் வேதம்
வானோங்க ஒலிக்கும்!
வள்ளுவப் பெருந்தகை வாக்கு
வாழ்வை நேராக்கும் நோக்கு!
திருக்குறளே தேசிய நூல்!
வேறு இல்லை அதற்கு நேர்!!
ஓங்கி உரைத்திடு நீ
தங்கத் தமிழ் ஊன்றும் வேர்!!

---கீர்த்தனா---

இறக்கை விரி...மேலே பற....

மனமொடுங்கிய குருவி ஒன்று
மரக்கிளையின் ஓரத்திலே...
தனியாக அமர்ந்திருந்து
வியந்து வியந்து பார்த்ததங்கு...
துணிவுகொண்ட குருவிகளின்
திறமைகள் அனைத்தையுமே...
பறக்கும் திறன் அறியாது...

ரௌத்திரக்குருவி ஒன்று
ரௌத்திரம் ஓரம் வைத்து
மெதுவாக நட்புக் கொண்டு
அன்பு கொண்டு மனதை வென்று...

மகிழ்வாக்குவேன் தோழிக்குருவி
புது உலகம் காட்டுவேன் என்று...
இறக்கை நுனி பிடித்திழுத்து
வான் வெளியில் எறிந்ததன்று...
இறக்கை விரி...மேலே மேலே பற என்று!!!

---கீர்த்தனா---