Wednesday 25 December 2013

வையகத்தின் பேரொளியே!!!

வைக்கோலின் அணைப்பில்
வையகத்தின் பேரொளியே!!!

மெய் கொண்ட வேதனைகளும்
பொய் ஆனோரின் பாவங்களும்
வாஞ்சையுடன் சுமக்கப் பிறந்தவரே!!

மறு கன்னத்துடன் அறைந்த கன்னத்தையும்
மறுபடி காட்டும் பொறுமையும், அன்பும்
உம்மிடம் வேண்டுகின்றோம்...

மன்னிப்பெனும் வார்த்தையின்
மாண்புக்கு சாட்சியானவரே
மறந்து விட்டோர் நெஞ்சங்களில்
மன்னிப்பை கற்றுத் தருவீர்...

இறை தூதா! இயேசு பாலா!
அன்பெனும் பெருமழை
அனைவர் உள்ளங்களையும் குளிர்விக்க
ஆனந்தமாய் பிறந்தீரே....

இனி நிலைத்திடுமே மனிதம்
ஒளிர்ந்திடுமே இவ்வையகம்...

---கீர்த்தனா---

Saturday 21 December 2013

எண்ணிய முடிதல் வேண்டும்...

வெறும் கோஷங்களுக்காகவோ...
அன்றேல் தன் புகழுக்காகவோ...
புனையவில்லை அவன் கவிதை!!

அவன் சொல்லெனும் வண்ணமும்
செயலெனும் திண்ணமும்
ஒன்றாக்கி வாழ்ந்திட்ட அமரகவி!!!

சுவாசமாய் கொள்கைகள்
சுத்தமாய் சுவீகரித்து...
உணர்ந்த உணர்வுகளை
வார்த்தைச் சிலம்புகளாய்
உருக்கி வார்த்து...
புரட்சியின் வேட்கையை
அக்கினித் துண்டங்களாக்கி...
அனலாய் விதைத்தவன் பாரதி
அடக்கப்பட்டோர் அகத்தில் பார் அத்தீ...

அவன் ஆன்மாவின் இராகங்கள்
மெய் ஆக்கல் வேண்டும்- அவை
மெய் ஆக்கிய பின்பே
அவன் புகழ் பேசவும், பாடவும்
அவனியில் எமக்கருகதை தோன்றும்!!
வாரீர்!! வாரீர்!! அவன் பணி தொடர்வோம்!!!

--- கீர்த்தனா---

Friday 20 December 2013

மூங்கில் குழற் காற்றாய்...

 பெரு மரத்தையும்
அடியோடு பெயர்க்கும்
அதே காற்றுத்தான்
மூங்கில் துளைகளின் வழியே
நுழைந்து குழைந்து
இன்னிசை நாதத்தை
மழலைக் குழந்தைகளாக
பிரசவித்துச் செல்கிறது!!!

ஊதும் அழகிய உதட்டுத்தாயின்
கர்ப்பத்தின் வழியே பிறந்து
நடனமாடும் விரல்களின்
ஆனந்தத் தழுவலில்
மூங்கில் துளைகளில்
புகுந்து தவழ்ந்து வரும்
இசைத் தென்றல் ஆகிடவே
இனிய இப் பிறப்பெடுத்தேன்!!!

---கீர்த்தனா---

Wednesday 11 December 2013

அக்கினிக் கவிஞா...


அக்கினிக் கவிஞா!
அன்னைத்தமிழின் குழந்தாய்!!
ஆசுகவித் தலைவா!
இயற்கையின் காதலா!
கண்ணம்மாவைக் கொஞ்சிய
பாசமிகு தந்தையே!!!
கனவுகள் விதைத்தாய்
நிஜமாய்க் கொதித்தாய்!!
முத்தான புரட்சி வரிகளில் 
வித்தாக முளைக்கட்டும்
கொள்கைகளின் செயல் வடிவம்
இன்று முதல் இக்கணம் முதல்
உன்னை உண்மையாய்  போற்றும்
உன்னன்பு  தாசர்களிடம்...
---கீர்த்தனா---