Thursday, 31 January 2013

பரிதாப மெழுகு!

இறுதியில்
பிரகாசித்து
ஒளி உமிழும்
மெழுகுவர்த்தி!

அணைவதற்கான
தாற்பரியம்
தெரியாமலே...
பிரகாசம் கொடுத்து
உயிரிழக்கும்
பரிதாப மெழுகு!

---கீர்த்தனா---

Wednesday, 30 January 2013

தாயுமானவர்


வேகம் கொண்ட உழைப்பு
தேகம் நொந்தும் சிரிப்பு!
வாஞ்சை கொண்ட நெஞ்சம்
பாசம் கொண்டு கொஞ்சும்!

உயிர் கொடுத்த எந்தை - உச்சி
முகர்தலில் அள்ளித் தந்த
பாசத்தின் வலிமை!
கற்றுத் தந்த பாடங்களின்
அறிவுசார் புலமை!

விட்டுச் சென்றும் - கலங்கிய
விழி நீருக்குள்...
கழிந்த சொர்க்கங்கள்
அழியாக் காட்சிகளாய்...

தாயுமானவர்க் கடவுள்
கண்டதில்லை நேரினிலே...
கண்டேன் உணர்ந்தேன்..
நெகிழ்ந்தேன் என் தந்தையிடம்...

---கீர்த்தனா---

:'((

Tuesday, 29 January 2013

சுயமிழந்த அதுவாய்..

Bilde: சுயமிழந்த அதுவாய்...
*******************
இமைச் சிறகுகள்
மூடி விரிய...
உதிர்ந்தன துளிகளாய்
அன்பின் முத்துக்கள்!
ஆழ்கடலில் மூழ்கிப்
பெற்றதன் பெறுமதி
உனக்குப் புரியாமலே!

புரியும் தருணம்...
முத்துக்கள் உதிர்க்கும்
சக்தியும் அற்றுப் போய்...
தன்னையும் உன்னையும்
மறந்து............
சுயமிழந்த அதுவாய்...

---கீர்த்தனா---
இமைச் சிறகுகள்
மூடி விரிய...
உதிர்ந்தன துளிகளாய்
அன்பின் முத்துக்கள்!
ஆழ்கடலில் மூழ்கிப்
பெற்றதன் பெறுமதி
உனக்குப் புரியாமலே!

புரியும் தருணம்...
முத்துக்கள் உதிர்க்கும்
சக்தியும் அற்றுப் போய்...
தன்னையும் உன்னையும்
மறந்து............
சுயமிழந்த அதுவாய்...

---கீர்த்தனா---

Sunday, 27 January 2013

மீண்டு வா குடிமகனே...

பேசும் வேதங்களோ
புதிது புதிதாய்...
குடியின் போதையில்
தினம் தினம் பல முகம்!
உள்ளே உறங்கும்...
உருவம் இல்லாப் பிசாசை...
உலுப்பி எழுப்ப
உற்சாக பானம்!

உழைப்பின் வெகுமதியை
உருப்படாமல் செலவு செய்து,
உளம் நொந்த துணையின்
உருக்குலைந்த நிலை கண்டும்...
உட்காயம்பட்ட நெஞ்சை...
தினமும் கிளறிக் கீறி...
புதிதாகப் புதிதாக ரணப்படுதுவதில்
என்ன திருப்தி கண்டாய் ???

மன்னித்து விடலாம்...
வந்து கரம் பிடித்தவள் மனைவி - ஆனாலுன்
விந்தில் உயிர்த்த உன்னுயிர்கள்...
மிரண்டு, வலிமிகக் கொண்டு
துடித்து நிற்கையிலே - உன்
நெஞ்சம் வலி கொள்ளவில்லையா?
மன்னிக்க முடியவில்லை
ஒரு போதுமே.....
மீண்டு வா குடிமகனே...
மனவுறுதி கொண்டால்
மீண்டு வரும் வழிகள் உண்டு!

---கீர்த்தனா---

Friday, 25 January 2013

இனியோராய் இனியெனினும்...


இனியோராய் இனியெனினும்...
*****************************************

போதி மர நிழலில்...
ஒளிர்ந்தான் ஞானப்புத்தன்,
மூப்பு, பிணி, சாக்காடு
ஒருமுறை பார்த்ததினால்!
நிரந்தரமில்லா வாழ்க்கையதன்
நிதர்சனம் புரிந்ததுமே...
நிர்வாணமாக்கினான் மனதினை
சஞ்சலங்கள் தொலைத்து!

நிதம் நிதம் கண்முன்னே...
மூப்பு, பிணி, சாக்காடு
கண்டும் மனம் திருந்தவில்லை!
அடுத்தவர் மனம் வருத்தி...
ஆசைகள் பல பெருக்கி...
அழுக்காறு, அவா, வெகுளி,
இன்னாச்சொல், தவிர்க்கச் சொன்ன..
ஐயன் குறள் மறந்து,
அழுக்கான மனங்களுடன்
மானுடர் நாம் இப்பொழுதும்
நிரந்தரமற்ற வாழ்வுக்காய்...

---கீர்த்தனா---

மனம் அல்லாத நிலையை புத்தர் நிர்வாணம் என்றார், எனில் எண்ணங்கள் இல்லாதது இந்த நிர்வாணம். (படித்தது)
அழுக்காறு = பொறாமை, அவா = ஆசை, வெகுளி = சினம், இன்னாச்சொல் = கடுஞ்சொல் .

Wednesday, 23 January 2013

இதழடைத்து நானும்....

இலக்கணம் படிக்கவில்லை!
இலக்கியத்தில் மேதையுமில்லை!
இயற்கையின் விதிகளை,
இலங்கிடும் அழகினை,
இனிமையாய்ச் சுவைத்தேன்,
இயல்பாகக் கரங்கள்...
இழைத்த வரிகளை,
இயைவுடன் இரசித்து,
இனிய கவிதை என்றீர்...
இன்னன்பு உள்ளங்கள் நீவிர்...
இதழடைத்து நானும் நன்றியுடன்...

---கீர்த்தனா---

Tuesday, 22 January 2013

சேற்றினில் செந்தாமரை...

செந்தாமரை நான்
சேற்றினில் தான்
மலர்ந்தேன்!
வானம் நோக்கித் தான்
நான் வளர்வேன்!

வண்ணச் சிரிப்பை - என்
எண்ணச் சிறப்பை...
வறுமையின் பிடிக்குள்...
நான் தர மாட்டேன்!

காற்றினை அருந்திடினும்,
சேற்றினில் புரண்டிடினும் - உண்ணச்
சோற்றுக்கு அலைந்திடினும்,
ஏற்றம் கொண்டு நானேழுவேன் - புது
மாற்றம் வரும் நானுயர்வேன்!

---கீர்த்தனா---

Monday, 21 January 2013

உள்ளே எதுவோ ...


செம்பருத்தியாளே !!


கருகும் பிஞ்சு மலர்கள்

பேரம் பேசும்
வாழ்க்கைத் துணைகள்!
விட்டுக் கொடுப்பு
மக்கிப் போய்...
வீண் பிடிவாதம்
முற்றிப் போய்...

மூர்க்கம் கொண்ட
ஆண்மையும் பெண்மையும்...
வாழ்வின் வசந்தம்
தொலைத்து விட்டு...
உணர்வுப் பூகம்பத்தில்
உள்ளம் வெடித்து...
ஒருவரை ஒருவர் சாடும்
இணைகளின் கொதிப்பில்...
கருகுவதென்னவொ
அவர்தம் பிஞ்சு மலர்கள்!

---கீர்த்தனா---

Sunday, 20 January 2013

செந்தாமரைக் கன்னி....


மிக மிக நன்றி என்னினிய தோழியே!!!


கலைஞர்களின் கரங்களுக்கு பலம் கொடுப்பது அவர்களுக்கு கிடைக்கும் பரிசில்களும் பாராட்டுக்ளுமே! குறுகிய காலத்தினுள்
தன்னுடைய எழுத்துகளினால் எல்லோர் மனங்களையும் கவர்ந்து கொண்ட கீதா ரவி (கீர்த்தனா ) எழுத்தோலை நடாத்திய கவிதை திருவிழாவில் அவரது கவிதைக்கும் ஒரு அங்கீகாரம் கிடைத்து இருப்பதனால் மகிழ்ச்சியே !! எங்களது மனங்களில் தோன்றுவதனை தனது எழுத்துகளினால் வடித்து தந்து இருக்கின்றார் .அவரது தமிழ் பணி மேலும் வளர ஆதரவு கரம் கொடுப்போம் !
நட்புடன் நந்தா நாதன் :)

உன்னதம் வாசம் வீசி...


உந்துசக்தியாய் உள்ளன்பு
உறவோடும் பிரிவோடும்
உறவாடி விளையாடி...
உளமார உருகும் தருணம்,
உச்சமாய் உயிர்ப்பூவுக்குள்...
உன்னதம் வாசம் வீசி...
உண்மைக்குள் உயிரன்பு
உணர்வோடு என்றும்..
உறுதியாய் இறுதிவரை,
உயிருக்குள் உறைந்த நட்பு!

---கீர்த்தனா---

தூரங்கள் தொலைவாகலாம்...


Bilde: தூரங்கள் தொலைவாகலாம்...
*****************************
பிறக்கவில்லை என் வயிற்றில்
இருந்தாலும் பெரிதுவந்தேன்
இலட்சியங்கள்  வென்ற போது,
ஈன்ற மகள் வென்றது போல்!
உவந்த மனம் வாட்டம் காண
உளம் வருத்திச் சென்றாயோ!

காரணமின்றி காரணி ஆகுபவள்
நீ அல்ல என் மகளே!
காரணம் எதுவோ காரியமில்லை...
காத்திருக்கும் அன்னை மனம்
நொந்திருக்க..காண்பவள்
நீ அல்ல என் மகளே..வந்து விடு ! 

எங்கோ பல்லாயிரம் மைல்கள்...
தூரங்கள் தொலைவாகலாம்...
பாரங்கள் தீர்த்திட பூவையே,
உன் வரவிற்காய் காத்திருப்பேன்
பூத்த விழிகளுடன் - பாசம்
தேக்கி வைத்து  கண்ணோரம்
கசியும்  ஈரத்துடன்!

---கீர்த்தனா---
பிறக்கவில்லை என் வயிற்றில்
இருந்தாலும் பெரிதுவந்தேன்
இலட்சியங்கள் வென்ற போது,
ஈன்ற மகள் வென்றது போல்!
உவந்த மனம் வாட்டம் காண
உளம் வருத்திச் சென்றாயோ!

காரணமின்றி காரணி ஆகுபவள்
நீ அல்ல என் மகளே!
காரணம் எதுவோ காரியமில்லை...
காத்திருக்கும் அன்னை மனம்
நொந்திருக்க..காண்பவள்
நீ அல்ல என் மகளே..வந்து விடு !

எங்கோ பல்லாயிரம் மைல்கள்...
தூரங்கள் தொலைவாகலாம்...
பாரங்கள் தீர்த்திட பூவையே,
உன் வரவிற்காய் காத்திருப்பேன்
பூத்த விழிகளுடன் - பாசம்
தேக்கி வைத்து கண்ணோரம்
கசியும் ஈரத்துடன்!

---கீர்த்தனா---

Wednesday, 16 January 2013

புலம்பெயர் வாழ்வில் தாய்மடி தேடி...


பன்னீர்க் குடத்தினுள்
பாண்மை இன்றி நீந்தினேன்,
பரமசுகத்துடன் அன்று!

கண்ணீர்க் குளத்தினுள்
கண்மை கரைய நீந்துகின்றேன்,
கடும்வேதனையில் இன்று!

கண்ணீர் மறக்க - இனிப்
பன்னீர்க்குடம் இல்லையெனினும்
அன்னை மடி உண்டு- அது கூட
என்னை விட்டு...எண்ணில்லாத்
தொலைதூரத்தில்... - மடிதூங்கி
அழும் பொசிப்பின்றி...

---கீர்த்தனா---

பாண்மை - தாழ்ச்சி

செங்கதிரோன் கருணைக்கு செய்நன்றி கூறி....

கீழ்வானம் சிவந்திருக்க,
செங்கிரணச் செவ்வொளியில்,
மெதுவாக இருள் பிரிய,
மென்பனியும் விலகிச்செல்ல...

செந்நீர் வியர்வை சிந்தும்,
செம்மை உழைப்பின் செம்மல்களை,
செழிக்கும்படி வாழ்த்தியிங்கு,
செஞ்சூளைக் கல்லடுப்பில்,
செஞ்சிவப்புப் பானை வைத்து,
செந்தளிர் மாவிலையைப்
பானையின் கழுத்திற் கட்டி...

செங்கரும்புக் கட்டுடனே,
செவ்வாழை
சேர்ந்முக்கனியும்,
ஒன்றாகச் சேர்த்து வைத்து,
செந்தேன் நெய்யமுதை,
செங்கதிரோன் கருணைக்கு,
செய்நன்றி கூறியிங்கு,
சிறப்பாகப் படையல் வைத்து...
செழுமைமிகு தைமகளை,
எழுச்சியுடன் வரவேற்போம்!

---கீர்த்தனா---

தமிழ்வழிக்கல்வி...


போட்டிக்கவிதை- 3

தமிழ்வழிக்கல்வி
************************

கருவினில் தொடங்கிய தமிழ்வழிக்கல்வி...
தெருவினில் கிடப்பதில் மனதினில் பெரும்வலி!

தாய் மொழி மூலம் கல்வி பயில்வதை...
இழிவாக்குவோர் ஈனம் மடியும் வரை !
ஆங்கிலம் பேசுவோர் அறிவாளி...எனும்
எண்ணக்கரு நெஞ்சில் மாறும் வரை !

என் பிள்ளை தமிழறியான்... எனும்...
பெருமைகொள் பெற்றோர் மாறும் வரை !
தனியார் பள்ளியும் ஆங்கிலக் கல்வியும்...
சிறப்பெனும் மோகம் அழியும் வரை !

கற்கும் அனைத்தும் உள்வாங்கிக் கொள்ள...
தாய்மொழி அவசியம் புரியும் வரை !
அரசினர்பள்ளியில் ஆசிரியப்பெருமக்கள்...
கடமையுணர்வுடன் நடக்கும் வரை !

பைந்தமிழ் இலக்கிய இன்பச்சுவையதன்...
பெருமைதனை நாம் உணரும் வரை !
அழகிய மொழியின் தொன்மைச்சிறப்பினை...
முழுப் பற்றோடு நாம் மதிக்கும் வரை !
நெஞ்சம் மிக நொந்து சொல்லுகின்றேன்...
தமிழ்வழிக்கல்வி வெறும் கனவு என்று !

தமிழ்வழி கற்றோர்க்கு முன்னுரிமை தந்தால்...
சுயநலம் கருதித் தமிழ் கற்க வருவர்...
பொதுநலம் மறந்த நம் நாட்டின் கண்கள் !
அன்னை தாய்மொழியின் விழுமியங்கள்..
அழியுமுன்னே... இனி ஒரு விதி செய்வோம்...
இழிவின்றித் தமிழ் கற்போம் !

---கீர்த்தனா---

குழந்தைத் தொழிலாளர் முறை...குழந்தைத் தொழிலாளர் முறை
***************************************

படியளக்க யாருமில்லாப்
பட்டாம் பூச்சிகளுக்கு
பச்சரிசிச் சோறுமில்லை
பட்சணங்கள் ஏதுமில்லை
பட்டுப் பூஞ்சிரிப்புமில்லை
புத்தாடைப் பொசிப்புமில்லை!

பாழும் வயிற்றுக்காய்...
பாடுபட்டு வேலை செய்யும்...
பச்சைமண்ணின் சோகந்தனை
பண்பு கொண்டோர் யாரறிவார் !

பற்றியெரியும் கைகளோடு...
பசித்திருக்கும் வயிறும் எரிய...
பட்டுக்கன்னத்தில் நீர்க்கோடுகள்
பதித்த அழியாத கோலங்கள் !

உறைந்துபோன குழந்தைப்பருவ உணர்வுகளும்!
உதிர்ந்து போன ஆசைகளின் எச்சங்களும்!
சிந்திப்புத் தேங்கிய விழிகளுக்குள்
தொலைந்து போன பெருங் கனவுகளும்!

உள்ளத்தை ஊடுருவித் துளைக்கும்
ஏக்கப் பார்வையின் துரத்தலில்...
அவர்களின் கேள்வி ஒன்று எம்முள்ளே...
"ஆசைகள் தொலைத்து விட
பற்றறுத்த ஞானிகளா நாம்? - என்று,
கேட்கவில்லை கேட்டது போல்
நெஞ்சினுள்ளே சுள்ளென ஓர் வலி !

கற்களின் வன்மை உடைக்கத் தெரிந்த பிஞ்சுக்கு
கல்மனங்களைக் கசிய வைக்கத் தெரியவில்லை!
புறக்கணிப்போம் குழந்தைத்தொழிலாளர் முறைமை
வரங்கொடுப்போம் புதுவாழ்வின் சிறப்புரிமை...!

---கீர்த்தனா---

Saturday, 12 January 2013

அன்னைத்தமிழின் இன்றைய நிலை...

போட்டியில் அனைவரும் மூன்று கவிதைகள் கொடுத்திருந்தோம்..மூன்றுக்கும் சேர்த்து தான் மதிப்பெண் வழங்கினார்கள்..மூன்றையும் ஒவ்வொன்றாக இங்கே பதிவிடுகின்றேன்...


அன்னைத்தமிழின் இன்றைய நிலை...
*************************************

செந்தமிழின் இன்பெருமை
சிறுமை பெற்ற நிலையை இங்கு!
மனம் வருந்திக் கவி பாட
முயல்கின்றேன் நானும் இன்று!

சங்கம் அமைத்து அன்று - தமிழ்
வளர்த்தோர் பெருமை கண்டோம்!
சங்கை அறுத்து இன்று - உயிர்
குடிப்போர் சிறுமை கண்டோம்!

பொங்கு தமிழ் வளர்த்த கொங்கு நாடு தனில்
பைந்தமிழ் நற்பெருமை நைந்து போனதேனோ ?
சங்கத் தமிழ்ச் சுவையும் கம்பன் கவியழகும்
இன்னும் இனியவையும் சிறப்பறியாமலேனோ ?

அன்னைத் தமிழவள் இன்பச்சுவை தனை
தந்திட மறுத்தோம் நம் சந்தததிக்கு !
சிறப்பது ஆங்கில மொழியெனும் மோகத்தை
விதைத்து விட்டோம் சின்னப் பிஞ்சதற்கு !

கண்டம் விட்டுக் கண்டம் வந்தும்,
தமிழ் புகழ் பரப்பும் ஆர்வலர் கண்டேன்!
ஆங்கிலம் பரப்பும் ஆர்வலர் பலரை
தாய்த் திருநாட்டில் வலியுடன் கண்டேன்!

பிறமொழி அறிவதில் தவறொன்றுமில்லை!
தாய்மொழி மறுப்பதில் சிறப்பொன்றுமில்லை!
நா இனிக்க இனிக்கப் பேசிய செம்மொழி!
நா வளைக்க மறுத்து நாவிழந்து இன்று!

---கீர்த்தனா---

Sunday, 6 January 2013

காதலின் விந்தைகள்..

கண்களில் நிறைத்து...
காதலில் திளைத்து...
உன் பெயர் சொல்லி
இனிமைகள் சுகித்து!

நிலவினில் உலவிடும்
உணர்வினில் சிலிர்த்து!
கனவினில் மகிழ்வதும்
நினைவினில் நெகிழ்வதும்!
நிதம் ஒரு கற்பனைக்
கோட்டையில் மிதப்பதும்!

தன்னிச்சையாகவே
புன்னகை விரிப்பதும்!
விரித்த புன்னகை
கூம்பி வாடிட...
வெறித்த விழிகளுடன் - உன்
வரவுக்காய் உறைவதும்...
சுகங்களும் வலிகளும்...
காதலின் விந்தைகளாய்...!

---கீர்த்தனா---

Saturday, 5 January 2013

சுமைதாங்கித்தாய்மை!

சுமைதாங்கும் சுமைதாங்கியின்
சுமைதாங்க இதமான பலமான
தோள்கள் வேண்டும்!

தோள்கள் சாயத் தோள்கள் தந்த
தோழமையின் பலத்துடனே...
ஆயிரமாயிரம் அன்புநெஞ்சங்களின்
வலிகளைச் சுமையாகத் தாங்கும்
இந்தச் சுமைதாங்கித்தாய்மை!

உன் பலம் கொண்டு
என் பலம் வெல்வேன்...
சக்திகொடு...என்னுயிர்த்
தோழமையே சக்திகொடு...!

---கீர்த்தனா---

Wednesday, 2 January 2013

முள் மஞ்சம்

நட்சத்திரப் பூக்கள்,
கொட்டிக் கிடக்கும்
பஞ்சுமேகப் பட்டுமஞ்சமும்...
முள்ளாய் உறுத்துகிறதோ
நிலாப்பெண்ணே?

தேய்கிறாய் தேய்கிறாய்..
உருவழிந்து போகும் வரை...
முழு நிலா உனை,
மூன்றாம் பிறைக்கீறலாக்கியது,
யாரடி நிலாப்பெண்ணே?


காதலின் காவியக் கரைதலில்
உருக்குலைந்து போகும்...
ஓராயிரம் உள்ளங்களின் வலிதனை
காதலித்து உணர்ந்து கொண்டாயோ?

மீண்டும் வளர்பிறை முழுநிலவாய்...
பிரிந்தவன் வரவால் உயிர்ப்பாய்,
நிலாப்பெண்ணே... !

முள் மஞ்சம் பஞ்சாக...
உடல் புதைப்பாய் இதமாக...!

---கீர்த்தனா---

இன்முக வரவேற்பு... 2013..

இலட்சியங்கள் பல கொண்டு,
இலட்சம்பேர் மனதை வென்று,
இலக்கினை நோக்கிச் சென்று,
இகத்தினைக் காத்து நிற்போம்!
இல்லாதோர் கரம் பற்றி
இனியவை பெற்றுக் கொடுப்போம்!
இன்னல்கள் விலகட்டும்!
இன்பங்கள் பெருகட்டும்!
இனிய புத்தாண்டில்...நம்பிக்கை ஒளியேற்றி
இனிதாக ஓர் பயணம்...

---கீர்த்தனா---