Wednesday, 16 January 2013

குழந்தைத் தொழிலாளர் முறை...



குழந்தைத் தொழிலாளர் முறை
***************************************

படியளக்க யாருமில்லாப்
பட்டாம் பூச்சிகளுக்கு
பச்சரிசிச் சோறுமில்லை
பட்சணங்கள் ஏதுமில்லை
பட்டுப் பூஞ்சிரிப்புமில்லை
புத்தாடைப் பொசிப்புமில்லை!

பாழும் வயிற்றுக்காய்...
பாடுபட்டு வேலை செய்யும்...
பச்சைமண்ணின் சோகந்தனை
பண்பு கொண்டோர் யாரறிவார் !

பற்றியெரியும் கைகளோடு...
பசித்திருக்கும் வயிறும் எரிய...
பட்டுக்கன்னத்தில் நீர்க்கோடுகள்
பதித்த அழியாத கோலங்கள் !

உறைந்துபோன குழந்தைப்பருவ உணர்வுகளும்!
உதிர்ந்து போன ஆசைகளின் எச்சங்களும்!
சிந்திப்புத் தேங்கிய விழிகளுக்குள்
தொலைந்து போன பெருங் கனவுகளும்!

உள்ளத்தை ஊடுருவித் துளைக்கும்
ஏக்கப் பார்வையின் துரத்தலில்...
அவர்களின் கேள்வி ஒன்று எம்முள்ளே...
"ஆசைகள் தொலைத்து விட
பற்றறுத்த ஞானிகளா நாம்? - என்று,
கேட்கவில்லை கேட்டது போல்
நெஞ்சினுள்ளே சுள்ளென ஓர் வலி !

கற்களின் வன்மை உடைக்கத் தெரிந்த பிஞ்சுக்கு
கல்மனங்களைக் கசிய வைக்கத் தெரியவில்லை!
புறக்கணிப்போம் குழந்தைத்தொழிலாளர் முறைமை
வரங்கொடுப்போம் புதுவாழ்வின் சிறப்புரிமை...!

---கீர்த்தனா---

No comments:

Post a Comment