Saturday 29 December 2012

செங்குருதியும் சுவைத்ததோடா...

கருவறைக் கோவிலில்
பூத்த புனிதமலர் ஒன்று...
புழுதியில் கசக்கி வீசி இன்று!

சின்னாபின்னமாக்கி...
இதழ்களைப் பிழிந்த சாற்றின்
செங்குருதியும் சுவைத்ததோடா...
இராட்சதக் காம வண்டுகளே!

கால்களில் உழக்கி நசுக்கிக்
கொன்று தொலைத்திட
நெஞ்சம் துடித்திட
கண்கள் செந்நீர் வடிக்கிறது!

மலரே நீ விதையாய் உறங்கு!
பூவே உன் புதைகுழி மடியில்
கயவரை ஒழிக்க - உனது
ஓராயிரம் கோடி அன்புச்சகோதரர்கள்
போர்க்கொடி தூக்கியாயிற்று!


அழகுமலரே பலகோடி இதயங்களின்
சிந்திய கண்ணீர்ப் பூக்களை - உனக்கு
அஞ்சலியாகச் செலுத்துகின்றேன்..
ஆன்மா சாந்தி அடையட்டும்...

---கீர்த்தனா---

Friday 28 December 2012

நிலைக்காத உறவு...

நீளும் இரவுகள்...
நிறைவேறாக் கனவுகள்...
நினைக்காத நெஞ்சத்துக்காய்...
நினைந்துருகும் நீள்நிலைகள்...
நீக்கமற நீ என்னுள்ளே,
அன்று சொன்னது நீ தானா?
நீக்கிவிடத் துடிப்பதுவும்,
இன்று உண்மையில் நீ தானா?
நிலைக்காத உறவும்...
நிலைமாறும் உலகும்...
நிராசைகளின் பிறப்பிடமாய்...
நிதர்சனத்தின் உறைவிடமாய்...!

---கீர்த்தனா---

Wednesday 26 December 2012

கரை உடைத்த கடுங்கோபம்!

கரையோரக் கண்மணிகள்...
கடவுளாய்த் தான் நினைந்து,
கண்ணோரம் கனவு நிறைத்து,
கடலன்னை மடி தவழ்ந்தார்!

கரை உடைத்த கடுங்கோபம்!
காவு கொண்ட கடுங்கோரம்!
கதறிய உறவுகளின்...நெஞ்சம்
கனத்த வலியின் ஓலம்!
காட்சிப்பதிவாய்க் கண்முன்னே...
கனவிலும் நினைவிலும் -
ஜீரணிக்க முடியாமல்...
கண்களை நனைத்தபடி...
கலங்கிய நெஞ்சத்துள் இன்னும்...!

---கீர்த்தனா---

இறை பாலனே...

ஒளிவீச்சாய்த் தொழுவத்தில்,
மிதந்தாய் பொன்னழகே...
வைக்கோற் போரினிலே...
பேரழகு மின்ன மின்ன...!

கண்களின் ஒளியினிலே
கோடி விண்மீன்கள்...
ஜொலித்தன உலகின்
இருளினை விரட்டிட...!

புன்னகைத்த பூவுதட்டில்...
புதைத்தாய் புண்ணிய பாலனே,
பாவம் பெருக்கிய மானிடர்,
பாவச் சுமைகளை...!

அன்புச் செல்வா! அதிரூப நாயகா!
அன்னை மரியாய் மடி பூத்த மலரே!
நள்ளிரவு காத்திருந்தேன் கண்மலர்த்தி,..
இறை பாலனே உன் வரவை நோக்கி...
இப்போதும் உன்னைச் சுமக்க வைக்க தான்
இவ்வையகம் முழுவதும் பெருகி வழியும்
பாவச்சுமைகளை....!

---கீர்த்தனா---

Monday 24 December 2012

இரட்டைக் கலாச்சாரம்...

இரட்டைக் கலாச்சாரம்...
இடர் படும் பெற்றோர்...
புலம் பெயர் வாசத்தில்
சுவாசம் முட்டி..!

பண்பாடு கலையாத
நம் எண்ணங்கள்,
புண்பாடு காணுமோ
எனத் தினம் எண்ணி...!

அந்நியக் கலாச்சாரம்
ஒட்டவில்லை நெஞ்சில்...
பெற்றவர் மனம் வருந்தி,
பிள்ளைகள் மனம் வருத்தி!

இரு வேறு சமூகத்தில்
ஊன்ற முடியாமல்...
குழந்தைகளின் போராட்டம்!
பண்பாட்டு விழுமியங்களை
ஆழமாய் நேசிக்கும்...
பெற்றவர்கள் போராட்டம்!
தினந்தோறும் முடிவில்லா
நிம்மதியற்ற விடியல்கள்...!

---கீர்த்தனா---

Saturday 22 December 2012

துணை...


பற்றுக் கொண்டு,
பற்றிக் கொண்ட துணை,
பண்பு கெட்டு நிற்கையிலே!
அற்றைய நாளின்
இனிய நினைவுகளில்...
இற்றைய சினத்தை அடக்கி...
சிரித்து வாழ்வதாய் நடிக்கும்,
காயம் பட்ட நேசநெஞ்சங்கள் !

---கீர்த்தனா---

Tuesday 18 December 2012

தனித்தவம்!

புலரும் பொழுதினில்
புலரா மனத்துடன் !
புதிர்களின் முடிச்சுடன்...
புன்னகைக்க மறந்து !

புதுவழிப் பாதையின்
புரிதல் அறியாமல் !
புதுப் புது அர்த்தங்களின்
புழுங்கலில் மனம் அவிந்து !
புதிய சொர்க்க வாசல் தேடி
புரையேறிய காயங்களுடன் !
புத்தொளியை உற்று நோக்கி
பளிங்குப் பாறையில் தனித்தவம்!

---கீர்த்தனா---

Monday 17 December 2012

அன்பை யாசகமாய் !


நெஞ்சம் நிரப்பிய நேசப்பூக்கள் !
வஞ்சம் இல்லாக் கொஞ்சும் அன்பு !
துஞ்சாமற் காதல் கொண்டு !
வாஞ்சையுடன் வழங்கிய நாட்கள் !

பஞ்சமும் வந்ததோ - பாச
நெஞ்சுக்குள்ளே இன்று !
கெஞ்சும் விழி ஓடைக்குள்...
மிஞ்சாமல் பெருகும் நீருடன்!
தஞ்சம் கேட்கும் உன்னிடம்...
விஞ்சும் அன்பை யாசகமாய் !
எஞ்சிய காயங்களின் ரணங்கள்...
மிஞ்சின ஊமைக் கேவலுடன்...!

---கீர்த்தனா---

பக்குவம்...



புல் நுனியில் பக்குவமாய்
அமரும் பனித்துளி!
முள்ளின் மேல் பயமின்றி
அமரும் ரோஜா!
இயற்கையின் பக்குவம்...
நம்மிடத்தில் இல்லையோ?

---கீர்த்தனா---

Tuesday 11 December 2012

மானிடக்காவலன்!

எட்டைய புரத்தில்...
கிட்டிய முத்தவன்!
கட்டியங் கூறியே

எட்டி உதைத்தான்...
புது ஜகம் படைக்க
சமூகத் தளைகளை!!!

பெண்ணுக்கும் ஒரு மனம்
உண்டெனக் கண்டு...
பொங்கி எழுந்த எம்
தோழன் அவன்!
கண்களில் ஈரமும்
நெஞ்சினில் வீரமும்
பெண்மைக்கு தந்திட்ட
வள்ளல் அவன்!

பாட்டினில் ஆடிய...
ரௌத்திரத் தாண்டவம்
நெஞ்சினில் இன்னும்
பெரு நெருப்பாய்...!

அக்கினிக் குஞ்சொன்று
கண்டான்...!
அக்கினிக் கவிஞனாய்
நின்றான்...!
அநீதிகள் எரித்தான்...
மானிடம் காக்க..
தீர்க்கம் நிறைந்த அனல்
தீப் பார்வையினாலே..!

நெஞ்சினுள் வாழ்ந்திடும்
அமர கவியாய்...என்றென்றும்
எம் ரௌத்திரக் காதலன்!
அருள் நிறை அன்புக் கவிஞன்!
மனம் நிறை மானிடக்காவலன்!

----கீர்த்தனா----

Friday 7 December 2012

குளிரும் நானும்...

விடிந்தும் விடியவில்லை
குளிரின் தீண்டலிலே...!

போர்வைக்குள் சிறைவாசம்
மிகவும் பிடிக்கிறதே...!
பசி உணர்வும் மறந்து...
தலையணைக்குள் முகம் புதைத்து
தூங்கும் சுகம்...இதம் இதம்..!
இறைவன் தந்த இனிய வரம்!

வெள்ளைப் பூமழை பொழிய...
சாளரம் ஊடறத்துக் காட்சிகள் விரிய...
மெல்லிருளின் சிறு அணைப்பில்..
சுடுபானக் கோப்பை தனை...
இதழ்களிலே பொருத்திக் கொண்டேன்!

சில்லிட்ட மயிர்க்கால்கள்
குத்திட்டு எழுந்து நிற்க...
குளிரின் தழுவல் தனை
காதல் செய்தேன் இதமாக...
கதகதப்புப் போர்வைக்குள்
முழுதாகப் புதைந்து கொண்டே!

---கீர்த்தனா---

விழிநீரே....

வலி தீர்க்கும் சக்தி
இல்லையெனின்...
எதற்காக உடைப்பெடுத்து

ஓடுகிறாய் ?

சத்தம் இல்லாமல் தான்
இருக்கின்றேன்...
பாசத்தின் பிரிவு
மனதைப் பிழியத்தான்
செய்கிறது...
ரணமாக வலிக்கத் தான்
செய்கிறது...

உன்னிடம் உதவி கேட்டேனா ?
எதற்காக விழி தெறிக்க
இந்த நீரோட்டம்??

---கீர்த்தனா---

Monday 3 December 2012

அழகியல் விதிகள்...















பூப்பூவாய் வெண்பனிப்பொழிவு!
பார்க்குமிடமெலாம் நீக்கமற நிறைந்து...
மென்துகள் குவியல் பூமகள் மடியில்!

புதைந்து, புரண்டு எழுந்திடும் ஆசை
கரைந்து மறையும் நொடிப்பொழுதினிலே...
கடும் குளிரின் மிரட்சியினாலே!

மேக மூட்டம் விலக்கி அங்கே...
துகள் மேற் சூரியக்கதிர் தழுவும் நேரம்...
இலட்சம் கோடி வைரப் பொடிகள்...
மின்னும் கண்களை நிறைத்த படியே!

கொட்டிய அழகினைக் கண்களால் விழுங்கி...
கோர்த்தேன் அழகிய ஆரம் தனையே!
ஆண்டவன் படைப்பின் அழகியல் விதிகள்...
மனதினை நிறைக்கும் இலவசச் சுகங்கள்!

---கீர்த்தனா---

Saturday 1 December 2012

நேசத்தின் அளவீடு

கம்பீரமானவளே !
எங்கே தான் தொலைந்தாய்?
உன்னைக் காணாமல்
மூழ்கடிக்கும் காரணிகள் தான் என்ன?
நேசத்தின் ஆற்றுக்குள்
மூழ்கித் தான் தொலைந்தனையோ?
எழுகிறாய் வீழ்கிறாய்
அடிக்கடி ஏன் தடுமாற்றம்?

ஒருநாளில் மகிழுதல்...
பலநாளில் துவளுதல்...
நிலையில்லாமல்...
நிறம் மாறும் மனம்...
மாயத்தின் தளையோ..,
பாசத்தின் முடிச்சுக்கள்?

வலிகளின் கொள்ளளவும்
அன்பின் கொள்ளளவும்
அளவிடும் கருவி ஒன்று
இக்கணத்தில் இங்கு வேண்டும்
வேசமில்லா என் நெஞ்சுதனை
அளவிட்டுக் காட்டிவிட

மாயப் பிறப்பறுக்கும்...
அந்நாளில் தோன்றும்
நிம்மதியில் ஓர் உறக்கம்...
அந்நாள் வரை யாவருமே
இரையாகித் தான் ஆகவேண்டும்
போராட்டத்தின் பசியடக்க...!

---கீர்த்தனா---