Thursday 21 November 2013

வெள்ளி நிலா...

வெள்ளி நிலா வானிலே
முளைத்த கணங்களெல்லாம்
தனக்காகவே முளைத்ததாய்
மகிழ்ந்து குதூகலித்தது
அறியாச் சிறு குழந்தை!!
குழந்தை குதூகலிக்கட்டும்!!!
வெள்ளிநிலா நாள் தோறும்
வெண்முகம் காட்டட்டும்!!!

---கீர்த்தனா---

Tuesday 12 November 2013

என்னுயிர் அடங்குமோ...


எதனாலோ அடிக்கடி
நினைவில் எழும்
என் வீட்டின் கிணற்றுக்கட்டும்
தொட்டி நிறையத் தண்ணீரும்...
அருகினில் முதுகு தேய்க்கும்
ஓங்கி உயர்ந்த தென்னைமரமும்...

வயிறு சாய்த்த கர்ப்பிணியாய்
குலைகளின் பாரத்தில் வாழைமரங்களும்...
 

அதிகாலை மஞ்சள் வெயில் ரசித்து
பட்சிகளுடன் பேசியபடி
பல்லுத் தேய்க்கும் இனிய கணங்களும்...
புதிதாக இதழ் விரித்த பூக்களுடன்
புன்னகை என்னிதழ் விரிக்க
பேசிய மௌன மொழிகளும்...
 

துள்ளி ஓடும் கன்றுக்குட்டியின்
விடிகாலை விளையாட்டழகும்...
மூங்கில்குழலில் அவித்த வெள்ளைப்பிட்டும்
பச்சை மிளகாய்த் தேங்காய்ச் சம்பலும்
வீட்டுப்படியில் அமர்ந்து
மாமரத்துப் பச்சைக்கிளிகளை
ரசித்தபடி உண்டதும்...

நான்கு சுவர்களுக்குள்
காலைக் கடன்கள் கழிக்கும் போது
புலப்பெயர்வுக்கு வருந்தாமல்
ஒரு நாளும் விடிந்ததில்லை...
 

இடித்தழிக்கப்பட்டு இருந்த இடத்தின்
எச்சமே இல்லாமல் போன
என் வீட்டின் மரணத்தை
இன்னமும் ஜீரணிக்க முடியாத
கணங்களும் இறக்கவில்லை...
எங்கே என் கிராமம்????
இங்கே என்னுயிர் அடங்குமோ
நான் முத்தமிட்டு பிறந்து தவழ்ந்த
செம்மண்ணைத் தொடாமலே???

---கீர்த்தனா---

Sunday 3 November 2013

தாமரையின் தனிச்சிறப்பு!

நீருயர நீருயர
மூழ்காமல்
தலைதூக்கும்
தாமரையின்
தனிச்சிறப்பு!
மூழ்கடிக்கும்
துன்பக் குளத்தில்
வாழ்விழக்கா
வைராக்கியத்தின்
இயற்கைச் சான்று!

---கீர்த்தனா---

நரகாசுர வதம் போதவில்லை


ஏற்றத் தாழ்வில்லா
வாழ்விற்காய்
ஏழ்மையை வதம்
செய்ய வேண்டும்!

பண்டிகை கொண்டாட
நரகாசுர வதம் மட்டும்
போதவில்லை
காத்தற் கடவுளே!

ஏழ்மையின் பெருமூச்சில்
அணைந்து போகும்
தீபங்கள் ஒளி பெறும் நாளே
தீபாவளிப் பண்டிகை நாள்!

---கீர்த்தனா---