Friday, 30 November 2012

கவியறியா என் தூரிகையும்…

கம்பன் வீட்டுக்
கட்டுத்தறியும்…
கவி பாடுமாம்!   


கவிக் குருவிக்
கூட்டினிலே
இணைந்ததினால்
தானோ...?

கவியறியா
என் தூரிகையும்…
கவி புனைய
முனைந்தது…!

தொடுவானம்
தூரமில்லை…என்று
தொட்டு விட
தோள் கொடுத்த
தோழமைக்கு
முதல் நன்றி...!

---கீர்த்தனா---

Tuesday, 27 November 2012

வெளிச்சப்புள்ளிகளைக் காணவில்லை…

அல்லல் சூழ் இருளின்...
அடர் மேகக் கூட்டம்!
ஆசைகள் யாவுமே நிராசைகளாய்…
ஆவன செய்யப் படாமலே!
இருட்டினில் வெளிச்சப்புள்ளிகளை…
இகலோக எல்லைவரை காணவில்லை!

ஈவதற்கு மனம் கொண்ட- அன்பின்
ஈதற் கொடையாளி எங்கேயென…
உதடுகள் துடிக்க, உணர்வுகள் வெடிக்க…
ஊமைக்காயங்கள் கடும்வலி கொடுக்க…
எதிர்பார்க்கும் இரு ஈரவிழிகள்…
ஏக்கத்துடன் எங்கோ வெறித்தபடி…!

ஐக்கியமான அன்பின் ஆழப்பரிமாற்றம்…
ஒருகணத்தில் காற்றின் விசையையும் தாண்டி
ஓடிவரும்… காயங்களின் சுவடுகளை
ஒளடதம் தடவிப் பாசப்பூவால் ஒற்ற...!

---கீர்த்தனா---

அல்லல் = துன்பம்
ஈதல் = கொடுத்தல்
ஒளடதம் = மருந்து

Monday, 26 November 2012

என்னவளே என்னுயிரே...

உன் மனக் கூட்டுக்குள்
வாழ்ந்திட விரும்பும்
உன்னவன் நானடி
என்னவளே!
என் சுவாசமே
உன் சுவாசமாய்...
என் வலி யாவும்
உன் வலியாய்...

சிரிப்பினில் இணைந்து
அழுகையில் கலந்து...
இன்பம் தந்து துன்பம் சுமந்து...
என்னுயிர் வாரிசைக்
கருவினில் சுமந்து...

கண்களின் வருடலில்
கருத்தினை நிறைத்து...
கருணை வார்த்தையில்
துயரினைக் களைந்து...
உன்னை நீயே
எனக்காய் இழந்தாய்...
இழப்பினில் கூட
இன்பம் கண்டாய்!

எழுத்தினில் தானா
உயிரும் மெய்யும்...
இரண்டறக்கலந்து
ஒன்றாய் இணையும்?
இரு மெய் ஒரு உயிர்...
இரு மனம் ஒரு மனம்...
ஒன்றாய் ஆனோம்
நானும் நீயும்!

என்னில் கலந்து எனக்காய் வாழும்...
உன்னைப் போற்றுதல்
அடிமைத்தனம் என்றால்...
தூற்றுவார் தூற்றட்டும்...
என்னவளே...என்னுயிரே...
மகிழ்வுடன் நெகிழ்வுடன்
உன் அன்புக்கு அடிமையாய் நான்!

---கீர்த்தனா---

பெருமையுடன் என்னுயிர்த்தோழன் கருத்தில் இருந்து கருவாய் இக்கவிதை...

Thursday, 22 November 2012

மண்வாசனை


வானம் பொழியும்
நீர்க்கோடுகள்… பாய்ந்து வந்து
மண்மகளை முத்தமிடும்…
முதல் துளிகளை
ஆழ உள்ளிழுத்து
அவள் விடும் ஒரு மூச்சில்…
குப்பென எழுந்து
நாசியை நிறைக்கும்
இனிய மண்வாசனை!

மழைக்குளிப்பின் ஆனந்தத்தில்…
தழுவும் காற்றின் துணையுடன்…
நர்த்தனமாடும் பூக்களும் செடிகளும்!

பட்டுச் சிறகுகள் விரித்து…
நீர்முத்துக்களை
உதறிச் சிலிர்த்துக் களிக்கும்…
வண்ணவண்ணப் பறவைகளும்!

கால்களினால் நீர் துழாவி…
காகிதக் கப்பல் விட்டு…
சிரிப்பினிலே கலகலக்கும்…
சின்னஞ்சிறு குழந்தைகளும்!

நாடு விட்டு நாடு வந்தும்…
நாசியிலே மண் வாசனையும்…
நினைவுகளின் காட்சிகளும்…
நச்சென இன்றும்…

---கீர்த்தனா---

Tuesday, 20 November 2012

வலியே வரமாய்....

பிறப்பிலும் அழுகை!
இறப்பிலும் அழுகை!
வாழ்க்கைப் பாதையின்
வழி எங்கும் அழுகை!

சிரிக்க மறந்த கணங்களை
நினைத்துப் பார்க்கவும்
மறந்து..சிந்தை மயங்கி!

சிறு நொடியேனும்
சிரித்து வாழாது...
அழுகையிலேயே
கரைந்து முடியும்
வாழ்க்கைப் பயணம்...
சிலருக்கு மட்டும்
சிறப்பான வரமாய்...!


---கீர்த்தனா---

Sunday, 18 November 2012

மின்சாரப் பரிமாற்றம்!

நான்கு விழிகளின்…
மின்சாரப் பரிமாற்றம்!
பொங்கிப் பிரவகிக்கும்… 
நூறு கவிதைகள்!
நர்த்தனம் ஆடிடும்…
இதயத்தின் அதிர்வுகள்!

விரல்கள் மீட்டா…
அற்புத கானமாய்…
விரவிப் பரவிடும்…
வீணையின் நாதம்!

மாயம் செய்யும்…
அற்புத மனக்கலப்பின்…
பரவசக் களிப்பினில்…
புண்ணிய தேசம் நோக்கி…
சிறகடிக்கும் மனப்பறவை!

---கீர்த்தனா---

Saturday, 17 November 2012

ஒருநாளின் விழிப்புணர்வு… நூறாண்டின் வாழ்வுக்கணக்கு!


இளம் தளிரை முடக்கிவிடும் 
இளம்பிள்ளை வாதம் அது!
ஒருநாளின் விழிப்புணர்வு…
நூறாண்டின் வாழ்வுக்கணக்கு!
சிறுதவறின் அறுவடையாய்
சிறகொடியும் இளம்விதைகள்!

இழப்பது எத்தனை ?
சுமப்பது எத்தனை ?
துள்ளித் திரியும் பிராயமதை…
பலிகொடுத்து ஏங்கி நிற்கும்!
பள்ளி செல்லும் ஆசைதனை…
பறிகொடுத்து பதறி நிற்கும்! 
 
இரக்கமுள்ளோர் அனுதாபம்…
இரக்கமற்றோர் ஏளனம்…
இணைந்த களத் தாக்குதலால்…
வலியின் பிடியில் பிஞ்சுமனம்!

உளம் துடிக்கும் வலியறிவீரோ?
உடல் துடிக்கும் வலியறிவீரோ?
சக்கரநாற்காலி இல்லா ஏழைப்பிஞ்சின்…
நிலமரையும் வலியும் அறிவீரோ?
கள்ளம் இல்லா வெள்ளை உள்ளம்…
கடும்வலி காணும் பாவம் என்ன?

அறிவியல் நிறையுலகில்…
அறியாமை நீங்கி இன்றே…
விழிப்புணர்வு மிகக்கொண்டு…
விடிவிளக்காய் நாமிருப்போம்…
சிறுசுடர்கள் ஒளிவீச்சுக்காய்…!
 
---கீர்த்தனா---

 

Wednesday, 14 November 2012

கொஞ்சும் மழலைகள்....


குவலயம் மகிழும்…
குழந்தையின் சிரிப்பினில்!
குறைகள் யாவும்…
பனியாய் விலகும்!

குவித்த இதழால்…
சிரிக்கும் அழகில்…
சொர்க்க வாசல்…
கண்முன் திறக்கும்!

இதழ்க்கடை நீருடன்…
கன்னத்தில் ஒற்றும்…
ஒழுகும் மென்முத்தம்…
கோடி மலர்களை…
தலைமேற் கொட்டும்!

பாசப் பதிவாய்…
வெண் பஞ்சுத் தொடுகை!
பூக்களின் உதிர்வாய்…
மழலைக் கொஞ்சல்!

மெத்துடல் எம் மேல்…
சரிக்கும் நேரம்…
மொத்தமும் மறக்கும்
பரவசம் பிறக்கும்!

இன்பம் பொங்கும்…
ஒளடத அணைப்பில்
இடர்கள் யாவும்…
பொடிபட்டுப் போகும்!

---கீர்த்தனா---

ஒளடதம் = மருந்து

 

Monday, 12 November 2012

வறுமையின் கொதிப்பு…

பட்டாசு செய்யும்
பட்டாம் பூச்சிக்கு…
பச்சரிசிச் சோறுமில்லை…
பட்சணங்கள் ஏதுமில்லை…
பட்டுப் பூஞ் சிரிப்புமில்லை…
புத்தாடைப் பொசிப்புமில்லை!

பாழும் வயிற்றுக்காய்…
பாடுபட்டு வேலை செய்யும்…
பச்சை மண்ணின் சோகம் தனை…
பண்பு கொண்டோர் யாரறிவார்? 
 
பரிதவித்து இரசாயனம் தொட்டு…
பற்றியெரியும் கைகளோடு…
பசித்திருக்கும் வயிறும் எரிய…
பட்டுக்கன்னதில் நீர்க்கோடுகள்
பதித்த அழியாத கோலங்கள்!

பதறுகிறது வேதனை சுடும் நெஞ்சம்!
பற்றியெரிகிறது உணர்வுத்தணல்கள்!
பாரதிகள் எங்கே சென்றீர்?
பிஞ்சு நெஞ்சம் காப்போம் வாரீர்!!

---கீர்த்தனா---

Saturday, 10 November 2012

இணைவுப்பந்தம்...

சொர்க்கத்திலே திருமணங்கள் 
நிச்சயம்!
தர்க்கத்திலே இருமனங்கள் 
கலைந்திடும்!
பொருந்தாத அலைவரிசை…
வருந்த வைக்கும் வாழ்வுதனை!
காதலிக்கும் போது இன்பம்…
கைபிடிக்கும் போது இல்லை!

மணம் பரப்பும் வாழ்க்கைக்கு…
மனதை நுகரும் திறன்வேண்டும்!
உணர்தலும் பகிர்தலும்…
இயைதலும் இழைதலும்…
வேசம் இல்லா பாசமும்…
நேசம் உள்ள நெஞ்சமும்…
இதமாக இணைந்தாலே…
இணைவுப்பந்தம் நிலைத்திடும்!
இன்பம் அங்கே கொழித்திடும்!

---கீர்த்தனா---

வண்ண நிலா...

சுட்டும் இருவிழிக்குள்
கருந் திராட்சைப்
பழங்கள் இரண்டு...
அங்கும் இங்கும்
உருண்டோடி
விழி விரித்துக்
கதை பேச...

செப்பு வாயிதழ்கள்
ரோஜாமொட்டாய்
குவித்துச் சுழித்து...
நெஞ்சப்பூவை
அள்ளிச் செல்ல...
 
கால் முளைத்த
சிறு பூவின்...
கன்னக்குழிச் சிரிப்பு
மூவுலகமும்
மறக்கச் செய்ய...
வைத்த கண் வாங்காமல்
மெய் மறந்த ரசனையுடனே
நான்...!

---கீர்த்தனா---

Wednesday, 7 November 2012

பாலைவனத்தில் பரிதவிப்பு....

பரந்த பாலைவனத்தில்…
கால்கள் சுடப் போகின்றேன்
தனிப்பயணம்!

இலக்கின்றிச் செல்லும்…
முடிவில்லாப்...
பெரும் பயணம்!

சூட்டின் கொடும் வலியில்…
கண்களில் நீர் பெருக…
அருந்த நீரின்றி
வாயும் அதைப் பருக…
மனதின் கடும் காயங்கள்
கொடும் சூட்டிலும் ஆறாமல்!

சுட்டு வெந்த பாதங்கள்…
சுடு மணலில் வீழ்ந்து மடியுமுன்…
மலர் தூவிக் கைகளில் ஏந்த…
அன்புள்ளம் பாய்ந்து வருமோ?

---கீர்த்தனா---

Tuesday, 6 November 2012

கவிகளுக்கு எங்கே இறப்பு…

காற்றுக்கெங்கே வேலி…
கனவுக்கெங்கே எல்லை…
காதலுக்கெங்கே அழிவு… 

கதிரவனுக்கெங்கே இறப்பு…

கருவறைக்குளெங்கே பொய்மை…
கல்லுக்குளெங்கே மென்மை…
பண்புக்கெங்கே சிறுமை…
அன்புக்கெங்கே அடைக்கும் தாழ்…

நட்புக்குள் ஏது பிரிவு…
நட்புக்கு ஏது முடிவு…
கருவாக என்னுள் கலந்து…
உயிராய் உறைந்த உன்னால்…
பிறக்கும் கவிகளுக்கு எங்கே இறப்பு…

---கீர்த்தனா---

Sunday, 4 November 2012

விழி மூடிய கனவிலும்...

தேம்பியபடி
உறங்கினேன்...
மனம் களைத்த

குழந்தையாய்...
வேதனை சூழ்ந்த
மனநிலையில்...!

விழி மூடிய
கனவிலும்
உட்புகுந்தாய்...!
அன்புக்கரம் நீட்டி...
சுண்டினாய்...

விரல்களால்
விழிநீர்த் துளிகளை...!

 
கலங்காதே அன்பே
எதற்குமென
செல்லமாய்க் குட்டு
வைத்தாய்..
உச்சந்தலை தனிலே...
சிரித்தபடி...!

கனவினிலும் ஆறுதல்
தரும் உன் அன்பில்
நெக்குருகிக் கரைந்தேன்....!
பாதுகாப்பின்
மலர்ப்படுக்கையில்...
மீண்டும் சுகமான உறக்கம்...!
இதழ்க்கடையில்
பூத்த சிரிப்புடன்...!

---கீர்த்தனா---

மாயை...அதுவே மெய்!

உருவம் கொண்ட
மெய்யும் மெய் !
அருவம் கொண்ட 

உயிரும் மெய்!

உணர்வு கொண்ட
மனிதன் மெய்!
உள்ளம் கொண்ட
காதல் மெய்!

கருணை உள்ள
கடவுள் மெய்!
கண்கள் உணர்ந்த
காட்சிகள் மெய்!

வாழ்வில் காணும்
இன்பங்கள் மெய்!
மனதை உழற்றும்
துன்பங்கள் மெய்!

இல்லை இல்லை
அத்தனையும் பொய்!
அனைத்தும் மாயை
அதுவே மெய்!

---கீர்த்தனா---