Friday, 28 August 2015

மதுநிலாவுடன் ஒரு உலா...

மதுநிலா தன் தோளை மிஞ்சி வளர்ந்த குழந்தைக்கு வாஞ்சையுடன் உணவூட்டிக் கொண்டு இருந்தாள். அவள் மனக்காயங்களும் உடல்வலியும் வெகுவாகப் பாதித்து மன அழுத்தத்துக்கு ஆளாகி இருந்தாள். அமைதி பெற மனம் துடித்தபடி இருந்தது . விழிகளுக்குள் ஊடுருவி அகம் படித்த பிள்ளை, அவளது புகைப்படக் கருவியையும் கொண்டு வந்து கொடுத்து, அம்மா கொஞ்சம் வெளியே சென்று வாருங்கள் என்று கைபிடித்து எழ வைத்தான்.
 
தனது சிறிய மின்வாகனத்தில் மனம் போன போக்கில் சென்று கொண்டிருந்தாள் மதுநிலா. ஒரு வீட்டு வேலியால் எட்டிப் பார்த்த தங்கநிற சூரியகாந்திப்பூ அவளைப் பார்த்து சிநேகத்துடன் புன்னகைத்தது. தன்னிச்சையாக மலர்ந்த புன்னகையுடன் அதை நிழற்படமாகச் சிறைப்பிடித்தபின் பயணத்தைத் தொடர்ந்தாள்.

பொன்னிறத்தில் முற்றிக் கதிர் சாய்த்த பரந்த வயல்வெளிகள் கடந்து சென்று கொண்டிருக்கையில் «இயற்கை நிலையம்» எனும் அறிவித்தற் பலகையுடன் ஒற்றையடிப்பாதை ஒன்றைக் கண்டாள். ஆர்வம் உந்தித் தள்ள அதனூடே செல்ல ஆரம்பித்தாள். சிறிது தூரம் ஓங்கியுயர்ந்த மரங்களூடே பயணித்தபின் பாதை இருமருங்கிலும் ஆளுயரம் தாண்டி வளர்ந்திருந்த நாணற்புற்பற்றைகள் காற்றுடன் உரசி சலசலத்தபடி  அவளை வரவேற்றன. அவற்றுக்கு அழகு சேர்ப்பது போல் சின்னஞ்சிறு குருவிகள் அவற்றை ஊஞ்சலாக்கி ஆடியபடி பாட்டுப் பாடின. அந்தரத்தில் வெண்முகிற்குவியல்கள் அங்கு வரச்சொல்லி ஆசை காட்டுவது போல் மிதந்தன. நீர்ப்பறவைகள் சிலவற்றுக்கு அவ்வளவு ஆனந்தம் போலும், இறக்கைகளை அடிக்காமலே விரித்தபடி வானில் நீந்தின. அனைத்தும் ஒன்றிணைந்து ரம்மியத்தை வாரி வழங்கிட அவள் மனமும் இறுக்கம் தளர்ந்து இயற்கையோடு இயல்பாக ஒன்றத் தொடங்கியது. அந்தஇயற்கை நிலையத்தை அடைந்ததும் பலகைத் தடுப்பு வேலியைக் கடந்து பார்வையை சுற்றும் வீசினாள். மதுநிலாவுக்கு மிகவும் பிடித்த சொர்க்கம் அங்கே படைக்கப் பட்டிருந்தது.

குன்றுகள், சிறியமலைகள், நீர்நிலை ஆங்காங்கே அதனுள்ளே பெரிய பாறாங்கற்கள், நீர்நிலைக்கு நடுவே நீண்டு நெடிதுயர்ந்த மரங்களுடன் மேடாக சிறிய நிலப்பரப்பு, ஒரு ஓரத்தில் பரந்து விரிந்திருந்த பச்சைப்புல்வெளி, அதில் மேய்ந்தபடி வெண்பசுக்கள் (முழுப் பசுக்களும், கன்றுகளும் வெண்மை நிறமாயிருந்தன) ஆயிரக்கணக்கில் விதவிதமான நீர்ப்பறவைகள் குவிந்து போயிருந்தன. அவற்றின் மொழிகள் எங்கும் மோதித் தெறித்தன. பூமியை வண்ணங்களில் குளிப்பாட்டுவதற்கு ஆயத்தம் செய்வதற்காகக் கதிரவன் மேற்கு நோக்கிச் சென்று கொண்டிருந்தான். தூரத்தில் மேற்குத் திசையில் பறவைகளை இருந்து ரசிப்பதற்காகக் கட்டப்பட்டிருந்த பரண் போன்ற மரக்குடிலொன்று மிகவும் அழகாகக் காட்சி அளித்தது.

  அது நாடுவிட்டு நாடு வந்து பறவைகள் தங்குமிடம். நமக்கும் இறக்கைகள் இருந்திருக்கக் கூடாதா என்று ஒரு கணம் அவள் மனம் ஏங்கியது. உறவுகள் தொலைத்த புலம்பெயர் வாழ்வில் அன்புறவுகளை நோக்கிப் பறந்து சென்று வரலாமில்லையா... பெருமூச்செறிந்தபடி அங்கே போட்டிருந்த மரபெஞ்சில் ஏறி கால்களை இருக்கையில் வைத்து உட்கார்ந்தாள். கைகளைப் பின்னே ஊன்றி ஆசுவாசமாக இரசிக்க ஆரம்பித்தாள்.

எரிக்காமல் மென்சூட்டுடன் தழுவிய மாலை வெயில். முகத்தில் மோதிய மெல்லிய தென்றல் அவளின் தலைக்குளித்த விரித்த கூந்தலை பட்டும்படாமல் மென்மையாய்த் தடவி அலையவிட்டது. ஆஹா ஒருவித விவரிக்க முடியாத பரவச நிலை. சுழித்த உதடுகளில் புன்னகை கீற்றாய் நெளிந்தது. அட நாம் இயற்கையை ரசிப்பது போல் இயற்கையும் நம்மை ரசிக்கிறதாக்கும் என்ற எண்ணம் மேலும் அவளிடம் புன்னகையை மலர வைத்தது. நொந்த உள்ளத்தை வருடிப் புன்னகைக்க வைக்க இயற்கையை மிஞ்சி என்ன மருந்துள்ளது எனும் எண்ணம் மனதில் ஓடியது. சிறிது நேர ஏகாந்த இனிமையை விழுங்கிவிட்டு எழுந்தது நெஞ்சை உலுக்கும் ஒரு குருவிக் குஞ்சின் அவலக்குரல்.

அவள் மின்வாகனத்தில் போய் அமர்ந்து கொண்டாள். மெல்ல மெல்ல விடாது கத்தியபடி குருவிக்குஞ்சு அவளை நெருங்கியது. இப்போது காலடியில் நின்றவாறு அவள் முகத்தைப் பார்த்துப் பார்த்துக் கத்திக்கொண்டே இருந்தது. உணவு கேட்டுக் கத்துவது போலவே தோன்றியது. பசியில் களைத்த தன் குழந்தையைப் பார்த்த தாயின் பதற்றம் மதுநிலாவின் வயிற்றில் நெஞ்சில் பிசைந்து பரவியது. பரபரப்புடன் முதுகில் காவும் பையை கொட்டி ஆராய்ந்தாள். எதுவுமே இல்லை. மின்வாகனத்தில் சிறியபெட்டி ஒன்று பொருட்கள் கொண்டு செல்வதற்காகப் பொருத்தப்பட்டிருந்தது. அதனுள்ளே தான் வழமையாக பறவைகளுக்குக் கொடுப்பதற்கு ரொட்டித்துண்டுகள் தானியங்கள் எடுத்துச் செல்வாள் மதுநிலா. அன்றைக்கிருந்த மனநிலையில் எதுவுமே எடுக்காமல் கிளம்பி இருந்தாள். குருவிக்குஞ்சு இடைவிடாது முகம் நோக்கி அழுது கொண்டே உணவு கேட்டது. அவள் கண்கள் தன்னிச்சையாக நீரை வெளியேற்றின. «என்ன செய்வேன்» «என்ன செய்வேன்» என அரற்றியபடி அந்தப்பெட்டியை ஆராய்ந்தாள். கடவுளே அங்கேயும் ஒரு காய்ந்த துகள் கூட இல்லை. தண்ணீர்ப் பாட்டிலும் இல்லை. கீழே குனிந்து சாரி சாரி என்றபடி கண்ணீருடன் அதன் இறக்கைகளைத் தடவினாள். பலநிமிடங்கள் ஓயாமற் கத்திய பின் அது இவளிடம் எதுவும் கிடைக்காது என முடிவெடுத்தது போலும். மெல்ல மெல்லத் தத்தலும் பறத்தலுமாய் அங்கிருந்து அகன்றது.

மதுநிலாவின் நெஞ்சம் சொல்லொணா வேதனையை பாரமாகச் சுமந்துகொண்டது. விழியோரம் துளிர்த்தபடியே இருந்தது. குற்றஉணர்வு உள்ளத்தைப் பிசைந்தது. அன்னையென நம்பி வந்து அணைந்த சின்னஞ்சிறு ஜீவனுக்கு பசியாற்றும் நிலை கிட்டாத பாவியானதை ஜீரணிக்க முடியாமற் தவித்தாள். எதையுமே அவளால் இரசிக்க முடியவில்லை. எதுவும் இனிமையாகத் தோன்றவில்லை. பெஞ்சில் ஏறி இருள் கவிந்தது கூட உறைக்காமல் அசைவற்று எங்கோ வெறித்தபடி  வீற்றிருந்தாள். வெள்ளைக்கார மனிதர் ஒருவர் வந்து நலம் கேட்டுக் கவனத்தை ஈர்த்தபின், வீடு நோக்கிய பயணத்தில்...கனத்த உணர்வுகளுடன் கனத்த இருளில் கலந்தாள். வலிகள் சுமப்பதே அவள் வரம் போலும்.

ஓயாத அதன் அழுகுரலும் முகத்தை நோக்கிப் பார்த்த அதன் பார்வையும் உள்ளே ஆழமாய்ப் பதிந்து போயின. நாளை உணவெடுத்து மீண்டும் அங்கு அவள் வருவாள், ஆனால் அந்தக்குஞ்சு அவளிடம் இனி வருமா? (வந்து காத்திருந்தாள் அது வரவே இல்லை) இனி வாழும் காலம் வரை மதுநிலா இதை நினைத்து வருந்துவாள்... ஒவ்வொருதடவையும் ரொட்டித் துண்டு எப்போதும் வெளிச்செல்கையில் அவள் கைப்பையில் இருக்கும்படி பார்த்துக்கொள்வாள்.
(ஒருநாளில் ஒரு சிற்றுயிருக்காவது பசியாற்றும் ஆனந்தமும் மனநிறைவும் எல்லாருக்கும் கிடைக்கட்டும். எப்போதும் நம்மால் முடிந்ததை கையில் எடுத்துச்செல்வோம்...)
---கீர்த்தனா---(கீதா ரவி)

குட்டிகதை போல ஒன்று. எண்ணங்களின்  வெளிப்பாடுகள் கிறுக்கல்களாக பதிந்திருக்கிறேன். குறைநிறை இருப்பின் சுட்டிக்காட்டுங்கள். 

12 comments:

  1. மதுநிலாவோடு நானும் சென்றதாய் உணர்ந்தேன் தோழி!
    கதையென நினைக்காமல் கண்ணெதிரே காணும் நிகழ்வாகக் கண்டேன்.
    உங்கள் எழுத்து காட்சிகளாய் விரிந்தது மிகச் சிறப்பே!

    ஜீவகாருண்யத்தை வலியுறுத்திய அருமைப் படைப்பு!
    வாழ்த்துக்கள் தோழி!

    ReplyDelete
    Replies
    1. உங்கள் தொடர் வருகைக்கும் அன்பான ஊக்குவிப்புக்கும் நெஞ்சார்ந்த நன்றி தோழி!

      Delete
  2. கதை மதுவோடு இன்றினையை வத்தாலும் கொஞ்சம் பந்தி பிரித்து படங்களை சேர்தால் கதை இன்னும் நெஞ்சில் தங்கும் அக்காசி இது என்பார்வை! என்ன செய்வது ஜீவகாருணியம் இளமதி சொல்லியது போல நெஞ்சைக்குடையுது வீசி எறிவோம் பறவைகள் சரி நிம்மதியாக வாழட்டும்!

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் ஊக்குவிப்புக்கும் மிகவும் நன்றி தம்பி. பதிவிடும் போது பந்தி பிரித்து தான் பதிவிட்டேன். பதிவு நீளம் கூடி விட்டதோ தெரியவில்லை இங்கே தளத்தில் பார்க்கும் போது எல்லாம் இணைந்து விடுகின்றன... பல தடவை எடிட் பண்ணி பார்த்தபின் அப்படியே விட்டு விட்டேன். இன்று நீங்கள் சுட்டி காட்டிய பின் எழுத்தை சிறிதாக்கி எடிட் பண்ணினேன். சரியாகி விட்டது. புகைப்படம் இணைக்க இடம் போதுமா தெரியவில்லை தகுந்த படம் கிடைத்ததும் இணைத்து விடுகிறேன் தம்பி.

      Delete
  3. வணக்கம் சகோ கதையை நகர்த்திச்செல்லும் தங்களின் நடை பிடித்திருக்கின்றது அருமை தளத்தில் இணைத்துக்கொண்டேன் தொடர்கிறேன் நன்றி
    நட்புடன்
    தேவகோட்டை கில்லர்ஜி அபுதாபி.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் வருகைக்கும் இணைத்துக் கொண்டமைக்கும் மிகவும் நன்றி சகோதரா! மிக்க மகிழ்ச்சி. ஏதோ சிக்கல் எனது கூகிள் அக்கவுண்டில் யார் தளத்தையும் இணைக்க முடியவில்லை. சரி பண்ணவும் தெரியவில்லை. தொடர்வேன் உங்கள் தளத்தையும்....

      Delete
  4. >>>ஒருநாளில் ஒரு சிற்றுயிருக்காவது பசியாற்றும் ஆனந்தமும் மனநிறைவும் எல்லாருக்கும் கிடைக்கட்டும். எப்போதும் நம்மால் முடிந்ததை கையில் எடுத்துச்செல்வோம்..<<<

    சிற்றுயிர்களிடம் காட்டும் அன்பு அருமை.. இனிய சிந்தனை..

    வாழ்க நலம்..

    ReplyDelete
    Replies
    1. உங்கள் வருகைக்கும் பின்னூட்டத்துக்கும் வாழ்த்துக்கும் மிகவும் நன்றி சகோதரா!

      Delete
  5. Replies
    1. வருகைக்கும் பின்னூட்டத்துக்கும் மனமார்ந்த நன்றி தோழி!

      Delete
  6. கதை நன்று! தொடர்வேன் ! வாழ்க ! வளர்க!

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் ஆசீர்வாதத்துக்கும் நெஞ்சார்ந்த நன்றி ஐயா!

      Delete