Sunday 28 October 2012

இனிய நிலாக்காலம்...


பறவைகளின் கொஞ்சலுடன்...
அதிகாலைப் பனி நேரம்...
வீட்டுச்சிறு தோட்டம் தனில்

நான் உலவிய காலம்...!
வண்ண மலர்களுடன்
கதைபேசி...புத்தம் புதுக்
காய்கறிகள் பறித்து...
இன்புற்றிருந்த
இனிய நிலாக்காலம்...
இன்றே எனக்கு...
மீண்டும் வேண்டும்...!

பசுவின் மடி தொட்டு...
அன்னை கறந்த பாலில்...
அருமையாய்ச் சுடுபானம்...
அருந்திச் சுவைத்திருந்த
என் வீட்டுச் சமையற்கட்டு...
இந்த நிமிடம்...
இங்கே வேண்டும்...!

ஊற வைத்த பழஞ்சோறு...
சுட்ட கருவாடு தொட்டு...
சுவைத்துக் களித்திருந்த...
என் வீட்டுத் திண்ணை...
இக்கணத்தில்...
வேண்டும் வேண்டும்...!

வட்டமிட்டு நாமிருந்து...
கூடிக் கூழ் குடித்து...
பேசிக் களித்திருந்த...
என் வீட்டு நிலாமுற்றம்...
இப்போதே...
வேண்டும் வேண்டும்...!

கொட்டும் பனிமழையில்...
எல்லாமும் தொலைத்து விட்டு...
விட்டம் பார்த்திங்கே...
விழிகள் வெறித்தபடி...
இழந்தவையின் பெருமை எண்ணி...
மருகும் நெஞ்சம்...
கெஞ்சும் ஏக்கத்துடன்...
புலம் பெயர் மண்ணிலே...!

---கீர்த்தனா---

Friday 26 October 2012

இத்தனை விந்தைகளா?



நேர் கொண்ட கண்களின்
கூர்ப்பார்வை தன்னிலே...
இழந்தேன் என் மனதை
முழுதாய் உன்னிடம் நான்...!

சிறகடிக்கும் நெஞ்சினுள்ளே...
சிருங்கார லகரி ராகம்
இனிதாக மனம் மயக்க...
வான் வெளியில் என் பயணம்...!

ஒற்றைப் பார்வை வீச்சினுள்
இத்தனை விந்தைகளா?
பார்த்து விட்டு நீ சென்றாய்...
திருட்டுக் கொடுத்து விட்டு
நான் நின்றேன்...!

---கீர்த்தனா---

Thursday 25 October 2012

தாய்மை உன்னிடத்தில்...

பெண்மை கொண்ட
வரந்தன்னை பெற்றிடாத
வந்தியை…!


உச்சநிலை தாய்மை
தனை உணர்ந்திடாத
உலர் நிலை…!

கற்றவரும் மற்றவரும்
புரிந்து கொள்ளாக்
கொடும் நிலை…!
சமூகத்தின் விஷநாக்கு
கொத்திக் குதறும்
கடும் நிலை…!

தாயுமானவர்க் கடவுளா நீ
இத்தனை கொடுமை செய்தாய்?
பெண்மையே வருந்தாதே…!
தாய்மையை இழக்காதே…!

கடவுளும் வெட்கித்
தலை குனியட்டும்...
உன் செயல் கண்டு…!
சின்னஞ்சிறு பூக்களிடம்
அவன் பறித்த தாய்மையை…
இன்றே நீ கொடுத்து விடு...!
மனம் நிறைந்து....
சிறு பூவொன்றின் தாயாகு...!


---கீர்த்தனா---


Wednesday 24 October 2012

ஐப்பசி 24













பேச்சினில் சமாதானம்
மூச்சினில் காணவில்லை…!
காட்டு விலங்குகளாய்

எப்போதும் வீண்சண்டை…!

வீட்டினில் குழப்பம்
நாட்டினில் குழப்பம்…
விட்டுக் கொடுக்கும்
எண்ணங்கள்…
வீம்பினில் இங்கு
வருவதில்லை…!
அகங்காரம் தலைதூக்கி….
அறிவுக்கண் மறைத்து…
அமைதியை இங்கு
கொன்று தின்றிடும்…!

தாக்கி இன்புறும்
செயலினை விடுத்து…
நோக்கிச் செல்வோம்
சமாதான வழி தனில்…
வெண்புறா மட்டுமா
அமைதித் தூதனுப்பும்…
மானிடப்புறாக்கள்
நாமும் அனுப்புவோம்….!
உலக சமாதான
தினத்தில் இன்று
உறுதி கொள்வோம்…
கொள்கை வெல்வோம்…!

---கீர்த்தனா---

Tuesday 23 October 2012

விதைப்பின் பயனில்....



 
 
 
 
 
 
 
 
 
கவிதை சொல்லும்
என் விழிகளுக்குள்...
கனவினை விதைத்த
உன் விழிகள்...!
கவிமலர்ப் பூக்கள்
பூத்துக் குலுங்க...
விதைப்பின் பயனில்
இன்பம் பொங்க...!

---கீர்த்தனா---

Saturday 20 October 2012

என்னுயிர் பாரதி...!


நெஞ்சினுள் வாழும்
என்னுயிர் பாரதி...!
சமூகச் சாக்கடைகளை
மிதித்தபடி நடக்கின்றேன்
மாற்றும் திராணியற்று...!

மந்தைகளாய் வாழும்
மாந்தர் மத்தியில்...
ஒளிந்திருக்கும் மனிதம்
எங்கே தேடுவேன்...
நல்லவர் கெட்டவர்
பிரித்தறியத்
தெரியவில்லை...!
சுயநல ஜகத்தின் முன்
தலை குனிந்து...
தோற்றுப்போய்...!

ஏறு போல் நடை
தேறவில்லை இங்கு...!
உன் பக்தையாய் வாழும்
தகுதி இழந்து...
கூனிக்குறுகி உணர்வு இறந்து
மனக்கூட்டுக்குள் பதுங்கி
வெறும் பிணமாய்...!

---கீர்த்தனா---

அன்புத் தோழமைகள்...















வலிகள் சூழ்ந்த
இருளின் களைப்பினிலே...
முகநூல் நண்பர்கள்
முகம் காணாது...
மூன்று நாள்
விடுப்பெடுத்தேன்...!

திருவிழாக் கூட்டத்திலே...
தனித்து விட்ட
குழந்தையைப் போல்...
திரு திரு என்றே விழித்து...
விழிநீர் உடைப்பெடுத்து...
தனிமையின் கொடுமையில்
மிதிபட்டு கலங்கினேன்...!

அன்புத் தோழமைகள்
உள்ளச் சிறைக்குள்
சரண் புகும் கணத்துக்காய்...
யுகங்களாய்க் கடக்கும்
நொடிகளை எண்ணியபடி...!

--- கீர்த்தனா---

கவிக்கருவாய்...!













உணர்வுகள் உறங்கட்டும்..
விலகல்கள் தொடரட்டும்..
நீ மட்டும் விலக முடியா
கவிக்கருவாய்...!

தொடரட்டும் உன் பங்கு...
என் படைப்பின் பணியில்
என்றென்றும்...
சாகாவரத்துடன்...!


---கீர்த்தனா---

Monday 15 October 2012

பொட்டிழந்த பொன்மலர்கள்...

முகர மறுத்த வெண்
மலர்களின் வாசம்...
மூடிய சுவர்களுக்குள்...

உணர்வுகள் கருகி
மெழுகாய் உருகி...
பொட்டிழந்த பொன்மலர்கள்
பூவிழந்த பூங்கொடிகள்...!

சமூகத்துப் பார்வைக்
கண்காணிப்புச் சிறையில்...
விலங்குகள் பூட்டிய
கைகளுடன்...
விலங்கு உடைத்து
வெளியேறும் துணிவின்றி...

உணர்வுகள் புதைத்து
கடைசி ஆசையும் சொல்லும்
உரிமையும் இன்றி...
தூக்கு தண்டனைக்
கைதிகளாய்...
மனிதம் செத்த மனிதருக்காய்
தம் வாழ்வை இறப்பித்து...!

---கீர்த்தனா---

Friday 12 October 2012

சூழும் துன்பம் முழுதாய் மறந்து...

 
இரவின் தனிமையில்...           
அமைதியின் மடியில்... 
இதமாய்க் கயிற்றுக்
கட்டிலில் சாய்ந்தே...
மெல்லிசைப்பாடல்
இசையில் நனைந்து...
உருகும் இதயம்
பரவசம் கொள்ள...
முகிலினுள் தவழும்
நிலவினை ரசித்து...
நட்சத்திரக் கூட்டத்தை
விழிகளால்  விழுங்கி...
சூழும் துன்பம்
முழுதாய் மறந்து... 
வாழ்க்கையை சுகிக்கும்
இரசிகை ஆனேன்...!

 
---கீர்த்தனா---

 

Thursday 11 October 2012

உன்னை அன்றி யார் அறிவார்...

ஆழக்கடலாய்..உள்மனது...
உன்னுள்ளே என்னவென்று
உன்னை அன்றி யார் அறிவார்...!
மனமே அமைதி கொள்...!

உனக்கு நீயே ஆறுதல்
சொல்..எப்போதுமே...!
அமைதியின் மடியில்....
பிஞ்சுக் குழந்தையாய்
நான் தூங்க வேண்டும்...!
சொல்கின்றேன் மீண்டும்...
மனமே அமைதி கொள்...!

---கீர்த்தனா---

மென்சிறகுகளுக்குள்….


உன்னிடம் மட்டுமே…
குழந்தையாய்
அடம் பிடிப்பு…!
புரிந்து கொள் 
உனதன்புக்
குழந்தையை…!

மென்சிறகுகளுக்குள்
பத்திரமாய் எனைக்காத்து…
அன்பை ஈந்து…
தோள் கொடுத்து
அரவணைத்து…
தவறு கண்டித்து,
மன்னித்து…
தாயுமானவராய்...!

உன்னன்பின் உயிர்ப்பில்…
என்னுயிர் உயிர்ப்பித்து…
இயக்க வேண்டும்
எனை நீயும்…!
உன் பின்னே தொடரட்டும்…
அழகான என் பயணம்…
இறக்கைகளின்
பாதுகாப்புடனே...




---கீர்த்தனா---


நெஞ்சினுள் என்றும் பத்திரமாய்...


முட்களும் பூக்களாகும்…

கூடப் பிறக்கவில்லை…
கூடித் திரியவில்லை…
எத்தனை அன்பு…
உள்ளம் எல்லாம்
நிறைத்து…!

எங்கிருந்து வந்தார்கள்
அன்பு தந்து திணறடிக்க…!
ஒற்றைச் சொல்
பரிவு வார்த்தை…
ஒற்றிச் செல்லும்
இறகால் மனதை….

மனதில் தோன்றும்
உணர்வுகளுக்கு…
வார்த்தைகள் ஒன்றும்
படைக்கவுமில்லை…!
வார்த்தை தேடி
வாய் வராமல்…
நெகிழ்வு நெகிழ்வு
நெஞ்சார்ந்த நெகிழ்வு…!

அதற்கும் ஒரு பெயர்
உணர்வுப் பலவீனம்…!
இத்தனை மலர்கள்
ஒன்றாய்ச் சேர்ந்து…
அன்பை அள்ளி
வாசம் தெளித்தால்…
பலவீனமும் பலமாகும்…
முட்களும் பூக்களாகும்….!

---கீர்த்தனா---

Wednesday 10 October 2012

பறக்கும் நெஞ்சம்...!

நீரின் அலைகள்
விரியும் அழகில்…
மீன்கள் சுழித்து
நீந்தும் அழகில்…
முகை வெடித்துச்சிரிக்கும் 
பூவின் அழகில்…
பனித்துளி சிலிர்க்கும்
புல்நுனி அழகில்…
வானம் கொட்டும்
மழைத்துளி அழகில்…
மழலைகள் விரிக்கும்
பூஞ்சிரிப்பழகில்...
இலவம் பஞ்சாய்ப்
பறக்கும் நெஞ்சம்...!

 ---கீர்த்தனா----

 

 

 

நிழல்கள்

 
 
 
எங்கிருந்தோ அழைத்தது
ஓர் உறவு ...!
முகவரி தொலைத்தது
ஓர் மனது ...!
நிழல்கள் நிஜமாகும்
எனும் வெட்டி
நம்பிக்கையுடன்...
நிஜங்களின் உள்நிலை
அறியாத் தவிப்புடன்...!
தொடரும் தேடல்களும்
சஞ்சலங்களும்.....!
---கீர்த்தனா----

உயிர் நட்பு...


Tuesday 9 October 2012

நீங்கும் காலம்….!

பழையவை கழிதல்
பழமொழி இங்கே….
நட்பினில் மட்டும்…
வேண்டவே வேண்டாம்…!
புதியன புகுதல்
ஒரு வகை இனிமை…
பழையன கழிதல்
மிக மிகக் கொடுமை...
பூக்களாய் மனதில்
தோன்றிய நட்பு….
வாட்களாய் மனதினை
அறுத்திட வேண்டாம்…!

திகட்டக் கொடுக்கும்
அன்பும் ஒரு நாள்….
நமக்குரியோரைத்
தூர நிறுத்தும்…!
கற்பது புதிய பாடங்கள்
எனினும்… முகவரி தொலையும்
வலியுடன் விரைவில்…
முகவுலகம் விட்டு
நீங்கும் காலம்….!

நெருஞ்சி முட்கள்
நெஞ்சினுள் தைக்கும்…
வலிகளின் மனது….!
அலட்சியம் காட்டும் உயிர் நட்பு
மலர் போல் மனதை….
அணுவாய்க் கொல்லும்….!
துன்பம் இங்கே தங்கட்டும்…!
இன்பம் அங்கே பொங்கட்டும்…!

---கீர்த்தனா---


 

Saturday 6 October 2012

நீ.................

கண்கள் மூடும்
கனவிலும் நீ...
மெய்மறந்தபடியே
நினைவிலும் நீ...
என்னுள்ளே
பெரும் பிரளயமாய் நீ...
பெரும் பிரபஞ்சமாய் நீ...

உன் வியாபிப்பினால்...
தொலைந்து தான்
போனேன்...நான்...
உயிர் மட்டுமல்ல...
உணவை மறுக்கும்...
உடலும்...சிறுக சிறுக
உணர்வுக்கடலில் கரைகிறது...

----கீர்த்தனா----

Friday 5 October 2012

ஏகாந்தம்…..

ஏகாந்தத்தில் மூழ்கிய
மலை முகடுகள்…!
அவற்றைத் தொட்டுத்
தழுவிடத் துடிக்கும்…
வெண்பஞ்சு மேகங்கள்…!

இங்கே வந்து…எனைத்
தழுவிக்கொள் வானமே என
அழைபிதழ் நீட்டும் நீர்நிலை…!
சாரல் மழையின்…
வருகைக்காய் தவமிருக்கும்
இயற்கையின் அதிசயங்கள்…!

நீரை கிழித்து வாழ்க்கைப்பயணம்
தொடங்க காத்திருக்கும்
ஒற்றைப்படகு…!
காதலுடன் உன் கை சேரக்
காத்திருக்கும் என்னுடன்
இயற்கையும் இணைந்து…
ஏகாந்தத்தில் தவிப்புடன்…!

---கீர்த்தனா---

Thursday 4 October 2012

விழிவாசல் திறந்து வைத்தே...

ஒருமுறை பறக்க வைத்தாய்...
மறுமுறை தவிக்க வைத்தாய்...
எதுவரை உன்னுள்ளே நான்?

உதடுவரை உள்ளேனோ ?

உயிர்வரை உள்ளேனோ?
உணர முடியாது தினம் தவித்து...
உளநிலை வலியெடுத்து...
தனிமையில் தவமிருக்கும்...
கால் கடுத்த தனிக்கொக்காய்...
மனம் கனக்க நானுமிங்கே...
நிலை தளும்பி நிற்கின்றேன்..!

மனமறிய வைத்துவிடு...
வலுவிழந்து போகுமுன்னே ...!
கரையுடைக்கக்  காத்திருக்கும்...
அணைக்கட்டாய் விழியோரம்...!
பொங்கி அணையுடைக்க...
துடித்திடும் இந்நொடியில்...
நீ வருவாயெனும் ஏக்கத்துடன்...
எனை மறந்தாயோ எனும் தவிப்புடன்...
விழிவாசல் திறந்து வைத்தே...
ஏக்கத்துடன் காத்திருப்பு...!

---கீர்த்தனா---