Friday 31 May 2013

உயிர் கொல்லி...

புல்லாங்குழலல்ல ஊதிவிட
இராகம் பிறக்க!!
ஊதுகின்றாய் அடுப்பாங் குழல்!!
நன்றாக ஊது ஊது...
தணலாகிப் பற்றி எரியப்போவது
உன் உயிர் சுமக்கும்
சுவாசத் தொழிலகம்...
புரிந்து கொள்ளும் நேரம்
பிரிந்து சென்று விடும்
உன்னுயிர் வெகு தூரம்!!!

---கீர்த்தனா---

இன்று புகையிலை எதிர்ப்பு தினம்... புகை பிடிப்பவர்களுக்கு அன்புடன் வேண்டுகோள்!! மீள முயற்சியுங்கள்... ஒரு பதிவில் படித்தேன் புகைக்க ஆசை எழும் நேரத்தில் உலர் திராட்சை சாப்பிட்டு வந்தால், அதில் நிகொட்டினை எதிர்க்கும் சக்தி இருப்பதால்,புகைக்கும் விருப்பத்தை அது கட்டுப்படுத்துவதாக... விடுபட விரும்பும் அன்புள்ளங்கள் முயற்சி செய்து பாருங்கள்... அன்புடன் கீர்த்தனா...  

Thursday 30 May 2013

முகில் விடு தூது

வெட்டிய மின்னலில்
தங்க மழைத்துளி!!
கொட்டிய அருவியைக்
கவிழ்த்தது வானம்!!

இடித்த இடியின்
அதிர்வினில் மீண்டு...
விடுத்தது நெஞ்சம்
நனைந்திடும் அழைப்பினை...

ஜலதரங்கம் வாசிக்க
நொடியினில் கற்றது...
மழைக் குளித்த
வீட்டுத் தாழ்வாரம்!!

சாரல் தூவும்
முகில் விடு தூதில்
மூழ்கி நனைந்தது
புவி இதமாக....

---கீர்த்தனா---

Wednesday 29 May 2013

காகிதப்பூ

காய்க்காத பூவுக்குள்
கனமான பாரம்!!
கனவு சுமந்த கண்களுக்குள்
கலங்கலாய் ஈரம்!!

பூக்க வைத்தவனோ
காய்க்க வைக்க ஏன் மறுத்தான்?
வேண்டாத வறுமைக்குள்
ஒரு மரத்தில் பல காய்கள்!!
வேண்டி வருந்தும் கருவறைக்குள்
ஊர்தல் இல்லா வெறும் வெறுமை!!

எதனால் எனும் கேள்வியுடன்
விளைச்சல் இல்லா வறண்ட நிலமாய்...
உளைச்சல் கொண்ட மனத்துடன்
செவி சாய்க்கா இறைவனைத் தேடி...
கோவில் விருட்சங்களை
சுற்றி வலம் வந்த படி.....

---கீர்த்தனா---

இயற்கையின் விதி 2

பனித்துளிகள் உதிர்கையில்
பூக்களுக்கும் வியர்க்கும்!!
மழைத்துளிகள் தழுவுகையில்
இலைகளுக்கும் சிலிர்க்கும்!!!

---கீர்த்தனா---

Monday 27 May 2013

காற்றின் திசையில்...

Bilde: காற்றின் திசையில்...
********************

உண்மை அன்புக்கு
மரணம் வேண்டாம்
மரணம் வேண்டாம்
உருப் போட்டபடி
நெஞ்சம்....

உள்ளே எதுவோ
தவித்தபடி...
அமைதி இழந்த
ஆத்மா போல்...

காற்றின் திசையில்
பரவிப் பரவி...
தவிப்பின் நொடிகள்
நீளமாக நீளமாக...
அலைந்த படி
அலைந்த படி....

அரூப மனம்
உயிர்ப்புடன்
விசும்பியபடி...
அத்தனை அன்பும்
எங்கே எங்கே
என்ற கேள்வியுடன்.......

---கீர்த்தனா---

உண்மை அன்புக்கு
மரணம் வேண்டாம்
மரணம் வேண்டாம்
உருப் போட்டபடி
நெஞ்சம்....

உள்ளே எதுவோ
தவித்தபடி
தவித்தபடி...
அமைதி இழந்த
ஆத்மா போல்...

காற்றின் திசையில்
பரவிப் பரவி...
தவிப்பின் நொடிகள்
நீளமாக நீளமாக...
அலைக்கழிந்த
ஆத்மாவாய்
அலைந்த படி
அலைந்த படி....

அரூப மனம்
உயிர்ப்புடன்
விசும்பியபடி
விசும்பியபடி...
அத்தனை அன்பும்
எங்கே எங்கே
என்ற கேள்வியுடன்
கேள்வியுடன்.......
 
---கீர்த்தனா---

Sunday 26 May 2013

இயற்கையின் விதி!!!

நறு முகை வெடிக்கையில்
கரு வண்டின் மயக்கம்!!!
திருடிச் செல்லும் அனுமதியின்றி
சிறு மலரின் அதரம் தொட்டு,
விரசமின்றித் தேமதுரம்!!!

---கீர்த்தனா---

Saturday 25 May 2013

எத்தனை ரசங்கள் உந்தன் குரலில்...

சோகத்தில் பிழிய வைத்தாய்!
துள்ளலில் அதிர வைத்தாய்!
காதலில் கனிய வைத்தாய்!
வீரத்தில் நிமிர வைத்தாய்!
பக்தியில் கரைய வைத்தாய்!
எத்தனை எத்தனை ரசங்கள்
உந்தன் குரலில்...
எந்தன் குரலில் ஒலிப்பதெல்லாம்
கந்தன் புகழே எனப் பக்தி ரசம்...
அந்தக் கந்தனும் மனம் குழைந்து
உந்தன் வசம்...
நான் ஆணையிட்டால் அது
நடந்து விட்டால்...கானம்
அது ஏழைகளின் உற்சாக பானம்...
வாழும் வையம் உன் இசையின்
உயிர்ப்பினில்....
வாழ்வாய் நீயும் எம் நெஞ்சின்
இருப்பினில்....
என்றும் சிரஞ்சீவியாய்....

---கீர்த்தனா---

இன்னிசையின் ராஜன்...

அசைய வைத்தான் புவியை
இசை தந்து நாதக்குரலோன்!!!

மரணம் வென்ற மணிக்குரலில்
புவனம் மறையும் காலம் வரை
உலவும் தென்றல் காற்றினிலே
உந்தன் மூச்சுக் கலந்திருக்கும்!!!

எமனும் ஒரு கணம் கலங்கிப் பின்
தலை தாழ்த்தி வணங்கினனோ??
இசைக் குரல்வளையை நசிக்க முன்பு
மனம் குன்றி இழையும் குரல்
கொன்ற பாவியாவேன் என்று...

சௌந்தரத்தின் ராஜன்
இன்னிசையின் மகாராஜன்...
எத்தனை உயிர் உருக வைத்தாய்
குழைந்து வந்த குரலினிலே....
அத்தனை உள்ளமும் கலங்கி
ஒரு கணம் ஆன்ம சாந்திக்காய்....

---கீர்த்தனா---

Friday 17 May 2013

புல்லாங்குழல் இசையில்....

கனாக் கண்டேன் நேற்று

பிருந்தாவனக் கண்ணன்
காற்றில் மிதந்து வந்தான்!!
ஒற்றை விரல் பிடித்து
பூங்காட்டுச் சோலைக்குள்
கூட்டிச் சென்றான்!!

வண்ணமலர்கள் வாசம்!!
வண்டினங்கள் ரீங்காரம்!!
வண்ணப் புள்ளின கானம்!!
எண்ணங்கள் சிறப்பிக்க...

புல்வெளியில் இருக்கை தந்து
புல்லாங்குழலை இடைச்சிறை விடுவித்து
புல்லரிக்கப் புதுராகம் இசைத்தான்...

பவழவாய் உதடு குவித்து
நீள்விரல்கள் குழற்துளைகளில் நடனமாட
செந்தாமரை விழியசைத்து
நோகாதே என் தாயே
எனதன்பில் உன் துன்பம் கரை என்றுணர்த்தி
மென்மையாய்ப் புன்னகைத்தான்!!

---கீர்த்தனா---

Thursday 16 May 2013

முதுமைக் காதல்!!!!


தோலணி போர்த்திய
அழகு சுருங்கட்டும்!
ஆடை அலங்காரம்
அனைத்தும் போகட்டும்!

உழைத்த நரம்புகள்
தளர்ந்து போகட்டும்!
மனம் நிறைத்துப் பொங்கும்
நேசத்தின் சாட்சியாய்...
தளர்ச்சியின் பிடியினில்
தொடரும் காதல்...

தளராமல் இறுதிவரை
இறுகக் கைப்பற்றி...
உனக்கு நான்
எனக்கு நீ எனும்
சிறு கை அமுக்கலில்
பெரும் பலத்துடன்
உலகை வெல்லட்டும்
முதுமைக் காதல்!!!!

---கீர்த்தனா---

Tuesday 14 May 2013

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ரவி...



வானமும், பூமியும்
தென்றலும், தாங்கிய
தாயும், ஆளான சிங்கங்களும்
உற்றவரும் சுற்றமும்
நீ பிறந்த நாளில் இன்று
இனிதாக வாழ்த்திப்பாட!

வண்ணங்களும் எண்ணங்களும்
இனிதாக சிறக்கட்டும்!!
பிடித்த துன்பம் தொலைந்தோட
இனி வரும் நாளில் எல்லாம்
இன்பங்கள் பெருகட்டும்!!
எண்ணிய கனவுகள்
பூவாய் மலரட்டும்!!

வாழ்க்கைப் பூங்கா
ஒளிவெள்ளத்தில் நீந்தட்டும்!!
நூறாண்டு காலம் நீடூழி வாழ
நெஞ்சார வாழ்த்துகின்றோம்
வாழ்க வாழ்க!!!!

என்றும் அன்புடன் மனைவி, பிள்ளைகள்...(கீதா ரவி (கீர்த்தனா) அஜந் , ஆதுஷன்) 

Monday 13 May 2013

கண்ணீரும் பன்னீராய்...

மழைத்துளியின் வருகை!!
மயிலுக்கு ஆனந்தம்!!
மரங்களுக்கு குளிர்ச்சி!!
மனங்களுக்கு மென்பரவசம்!!
மலர்களுக்கு சொட்டச்சொட்ட
குளிர்ப் புத்தெழில்!!

வானம் சிந்தும்
கண்ணீர்த்துளிகள்
பலவற்றுக்குப்
பன்னீர்த்துளிகளாய்!!
தன் கண்ணீரும் பன்னீராய்
சுகமளிக்கும் திருப்தியில்
துன்பம் சுமந்து
மழைத்துளிகளைப்
பிரசவிக்க தயாராய்
மீண்டும் வானம்!!!

---கீர்த்தனா---

Friday 10 May 2013

பறக்க ஆரம்பிக்கையில் ..


இன்றுவரை ஆண்டவன்
தந்ததை விடவா
புதிதாய்ப் பெறப்
போகின்றேன்????
பறக்க ஆரம்பிக்கையில்
சிறகுகள் பறிக்கப் படுவது
ஒன்றும் புதிதல்லவே...
ஆனாலும் விழிகளும் நெஞ்சமும்
சிந்தனை அலுவலகமும்
சொல்லுக் கேட்பதில்லையே...
தம் கடமையை
எப்பொழுதும் மிகச்
சரியாகவே செய்கின்றன....

---கீர்த்தனா---

அன்னை மடியில் கீர்த்தனா...

தடவித் தடவி
அசைவினை உணர்ந்து!
ஊட்டி ஊட்டி
தொப்புள்கொடி வழி
அமுதளித்து...

கொடியறுத்து மடியினில்
வீழ்ந்ததில் இருந்து
பூமித்தாய் மடியில்
புதையும் வரை...
பாலுடன் கலந்தூட்டிய
பாசாங்கில்லாப் பாசம்
அன்னையிடம் மட்டுமே
நித்தியமாய் என்றும்!!!

மடியினில் படுத்த
சிறு நொடி நேரம்
கண்ணீர் துடைத்த
அவள் கர வாஞ்சை
எல்லாமும் எனக்குள் தந்து
உன் துன்பம் மற என்றுணர்த்த
கொஞ்சமாய்த் தூங்கினேன்
அனைத்தும் மறந்து...

---கீர்த்தனா---

Tuesday 7 May 2013

குளிர்ப் பள்ளி எழுச்சி...

சில்லென்று இதழ் தொட்டு
விழித்தெழ வைத்தது
ரோஜாவை...பனித்துளி...
இருள் பிரியும் பொழுதினில்...
குளிர்ப் பள்ளி எழுச்சி...

---கீர்த்தனா---

ஆடினான் ஆனந்தக் கூத்தன்...

ஆடினான் ஆடினான் 
ஆனந்தக் கூத்தன்....
மெய்யெல்லாம் சாம்பல் பூசி!
ஆடும்வரை ஆட்டம்,
சாம்பல் காட்டில் முடியும்
உணர்ந்து கொள் மனிதா என்று!
உணரவில்லை உணரவில்லை
தொடருகின்ற பந்தங்கள்!
உளம் நொருக்கும் எண்ணங்கள்!
வாழும் வரை ஈதல் அன்பு
உண்மை நெஞ்சம் தந்தவர்க்கு!
உன்னில் உயிர் வாழும் வரை!
சாம்பல் காட்டில் கரையும் வரை!

---கீர்த்தனா---

Friday 3 May 2013

இசையொன்று படைத்தாயே..

இழந்தவை ஏராளம்!
இழப்பதற்கு ஏதுமில்லை!
மனம் தடவும் மயிலிறகாய்
பாட்டொன்று உண்டு!
"குறை ஒன்றும் இல்லை
மறை மூர்த்தி கண்ணா"

வலிகளின் தடங்கள் - என்
வாழ்க்கை நானறிவேன்!
வரமாய்த் தந்தாய் - உன்
கருணை இதுவா நானறியேன்!

இருப்பினும் குறை ஒன்றும்
இல்லை மறை மூர்த்தி கண்ணா
குறை ஒன்றும் இல்லை கண்ணா!
இசையொன்று படைத்தாயே
மனம் தன்னைத் தாலாட்ட
குறை ஒன்றும் இல்லை கண்ணா!

---கீர்த்தனா---

மாயன் வரவிற்காய்...


செங்காந்தள் நீள் விழியாள்
சுழற்றும் பார்வைக்குள்
காதற் கோலம் கண்டதென்ன?
கோலக் காட்சிக்குள்ளே
மிதந்த பிம்பம் தான் என்ன?

கண்ணுக்குள் நிலவாக
பத்திரமாய் அவன் பிம்பம்
பதித்து வைத்துக் காதலுடன்
கொடி பற்றிப் படர்ந்த படி!

இடை பொய்த்த பாவையவள்
நடை மெலிந்து ஏக்கத்துடன்...
தடை தாண்டும் காதலுடன்...
விழி வாசல் விரித்து வைத்து
மாயன் அவன் வரவிற்காய்...

---கீர்த்தனா---

Wednesday 1 May 2013

உழைக்கும் கரங்களுக்கு...

களைப்பின்றி உழைக்க...
இளைப்பின்றி ஜெயிக்க...
உழைப்பாளி உடல்நோவிற்கு
கொத்தடிமை வாழ்வுக்கு...
புள்ளி தொட்டு முற்று வைத்த...
வரலாற்றுச் சிறப்பின்
மேன்மை பெற்ற நாளாம்
மே தின நன்னாளாம்!
நானிலம் எங்குமே...
நலம் வாழத் தொழில் செய்யும்...
வியர்வை முத்துச் சொந்தங்களின்...
உயர்வின் பெருமை நாமுணர்ந்து
வாழ்த்துச் சொல்லும் நேரமிது...

---கீர்த்தனா---