Sunday 30 September 2012

ஏழ்வகை வண்ணம்...

இடித்தேவன் மத்தளம் வாசிக்க...
மின்னலவன் புகைப்படம் பிடிக்க...
இறங்கினாள் மழைத்தேவதை
வானிலிருந்தே...!

தேவதையின் பேரழகில்
சொக்கிப்போய்...ஒளிந்திருந்
கதிரவனோ...மெதுவாக எட்டிப்பார்த்து...
மோகமாய்ப் புன்னகைத்தான்...!

மன்னவன் பார்வைக்கணை தாங்காது...
நாணம் கொண்ட மழைமகளோ...
வானவில்லாய் வளைந்து
ஏழ்வகை வண்ணம் காட்டி...
சிருங்காரமாய்ப் புன்னகைத்து...
குளிர்வித்தாள் காதலனை...!

---கீர்த்தனா---

ஆலிலையில் அழகு நிலா


சிறை வைப்பேன் விழிப்பாவையுள்…


விழிகளுக்குள்ளே விருட்சமாய்
என்னவன் வியாபகம்...!
இமைகளை மூடியே...அவன்
அன்பினை..இரசிக்கிறேன்...!
பஞ்சுப் பொதிகளாய்…
இனிமை நினைவுகள்
விழி வானில் மிதந்திட...
திறந்திட விரும்பவில்லை
இமைக் கதவுகளை...!
கண்ணல்ல என்னவன் என்
கண்களுக்குள் கண் அவன்...!
சிறை வைப்பேன்..
விழிப்பாவையுள்...
ஆயுளின் இறுதி வரை...!

****கீர்த்தனா****

ஊமையாய் ஓர் அழுகை…!

தன்மானம் சுடரிடும்
தணியாத தாகம்…!
விடுதலை வேண்டித்
தினம் ஏங்கும் நெஞ்சம்…!
தாயவள் துயர் கண்டு
ஊமையாய் ஓர் அழுகை…!

விடுதலைக்கனவுகள்
சிதைக்கப்பட்ட கொடுமை…
நெஞ்சந்தனிலே
நீங்காத சுமையாய்
அழுத்திக் கொல்லும்…
கொழுந்து விட்டெரியும்
சுதந்திர தாகம்…
பாவி மனதுள் புதைந்து…
கையாலாகாத்தனத்துடன்
நீறு பூத்த நெருப்பாய்…

ஈழத்தாயே மன்னித்துவிடு…!
ஈரமில்லா ஈனர்கள்
கையில் சிக்கி
நீ படும் வேதனையை…
வெந்த நெஞ்சத்துடன்
வேடிக்கை பார்க்கும்
உன் பாவி மகளை…!

***கீர்த்தனா***

உன் நினைவுகளுடன்…

உயிரோடு நேசம்
மாறாத பாசம்…!
உயிர் பிரிந்த பின்னும்
உனக்காக வாழும்…!
உறவே என்னுயிரே…
உயிரினில் கலந்த
காதலுக்காய்…
உயிர் உருக வேண்டாம்…!

ஒருமுறை ஒரேமுறை
உண்மையாய்…
உன்னன்பின் வெளிப்பாடு…
அது போதும்…
உலகின் எல்லை வரை
வாழுவேன்…
உன் நினைவுகளுடன்
உயிர் மீண்டு...!

---கீர்த்தனா---

ஓயாத அலைகள்….


கடற்கரையோரம்…
கண்ணிமைக்காமல் நான்…!
கரைக்காதலனைத் தேடிச்
சளைக்காமல்
அலை மகளின் ஓட்டம்…!

முத்தமிடல் தவிர…
இணையும் வழி
இல்லையென
அறிந்தும்...விடா
முயற்சியுடன்…
கரைகாணாக்
காதலுடன்
ஓயாமல்……...

இன்று போய் நாளையும்…
இன்று போய் நாளையும்…
உயிர்ப்பித்த காதலுடன்...!
நெஞ்சுருகி பார்த்து நின்றேன்…
மரிக்காத காதலின்
உயிர்த் துடிப்புடன்
உலகம் இயங்குவதை…!

---கீர்த்தனா---

அமரகவிக்கு சமர்ப்பணம்…

ஜகத்தினில் பிறந்தான்
புதுமை படைக்க…!
தமிழ் பா தந்தான்
சுவைத்து இரசிக்க…!
காதலும் சொன்னான்
இனிக்க இனிக்க…!

ரௌத்திரம் கொண்டான்
தவறுகள் எரிக்க…!
வீறு கொண்டெழுந்தான்
வீணர்களை அழிக்க…!
தன்னம்பிக்கை தந்தான்
நீயே தான் தெய்வமென…!

சாதியம் வென்றான்
சாக்கடை மனங்களில்…!
வீரம் அள்ளிக்கொடுத்தான்
மென் உணர்வுப் பெண்மைக்கு…!
ஈடுமில்லை இணையுமில்லை…
அன்புக்கவிஞன் பெருமைக்கு...!
உணர்சிக்கவிஞனைப்
படைத்தேன் எனப்
பெருமை கொண்டான்
பிரம்மதேவனும்…!
நம் மண்ணில்...
அவன் ஜனிக்க...
மாதவம் செய்தோம்
நாமும்…!

----கீர்த்தனா----

புரியாத பந்தங்கள்...!

முரண்களின் சொந்தங்கள்
புரியாத பந்தங்கள்...!
புரிந்து கொள்ள முயற்சி செய்தும்
புரியாத தொடர் நிலைகள்...!

யார் மனதை யார் அறிவார்..
உன் மனதை நீ அறிவாய்...!
என் மனதை நான் அறிவேன்...!
எண்ணமெலாம் பேரன்பு...
அது தவிர வேறில்லை...!
புரிய வைக்கத் தெரியாமல்
புழுங்கியே தவிப்புகள்...!

அன்பின் மிகுதியிலே...
உரிமையான சாடல்கள்...!
உளம் புரிவாய் எனும்
நம்பிக்கையில்....
கள்ளமில்லாக் கோபங்கள்...!

உனக்கான என்னன்பில்...
துளி கூட விஷமில்லை...!
உன் அரவணைப்பில்லா
இவ்வுலகில்...வாழவே
பிடிக்கவில்லை...!
உன்னன்புக்காய் ஏங்கும்
உயிர்த்துடிப்பு..
ஓய்வில்லாமல் தவிக்கறது...!

----கீர்த்தனா----

தாமரை நெஞ்சம்...

செந்தாமரைப் பெண்ணே...!
செங்கதிரோன் செவ்வொளி
வீசி வருவான்...கூம்பாதே..!
அழகல்ல உன் அழகுத்
திருமுகம் வாடுதல்...!
உன் காதலன்....
பட்டொளித் தழுவலில்...
நாணச்சிவப்பினில்...
நீ மலரும் அழகே அழகு...
ஒளி வீசித் தெறிக்கும்
செம்மை அழகு...!

வாடுதலின் பின்...
கூடுதல் ஓரின்பம்...
வார்த்தைகளில்
சொல்லொணாப் பேரின்பம்...!
ஒளித்தலைவன்
முகத்தினை மட்டும்
நோக்கியே தவமிருக்கும்...
உன் பெருமை மிகு காதலைப்
போற்றுகின்றேன்...!
காதல்மிகு செம்மலரே...
காவியமாய் நீ வாழ்க...!

----கீர்த்தனா----

இசையால் வசமாகா இதயம் எது...


இமைகளை மூடி…
மெல்லிசைப்பாடல்…
காதினில்...இதமாய்
தவழ விட்டேன்…!
இராகமும் அறியேன்…!
தாளமும் அறியேன்…!
இசையினை மட்டும்
உயிரினுள் உணர்ந்தேன்…!

மனம் தொடும் வரிகளை
வியந்து இரசித்தேன்…!
குழைந்து பாடும் குரல்களை
அணு அணுவாய் இரசித்தேன்…!
உருக்கி இழையும் இசையோ
உயிர்நிலை தொட்டது…!

நரம்பினைச் சுண்டி
நாதம் பரவிட…
மயிர்கால்கள் குத்திட…
இரத்தப் பாய்ச்சல்
உச்சந் தலைக்கேற…
கண்கள் ஆனந்த மழையை
பொங்கிச் சொரிந்தன…!
இசைத்தேவதை என்னுள்ளே…
நடனம் ஆடவே…எங்கெங்கோ
பறந்து சென்றேன்…!
சொர்க்கத்தின் வாசலைத்
தொட்டு வந்தேன்…!

"ஊனை உருக்கி உயிரில்
விளக்கை ஏற்றினாரம்மா"
இசைக்கு ராஜா
இளைய ராஜா...
உணர்வுடன் சொன்ன வரிகள்
உள்ளத்தில் எழுந்து
உருக்கிச் சென்றது...!
இசைக்கு இணையாய்…
இதயம் தழுவ உருகிக்கரைய…
உயிர்க்காதலால் கூட
முடியாதென்பேன்...!

----கீர்த்தனா----

கவிதை சிறகு விரித்து...


கவிதைகள் பிறக்கும்
அதிகாலை நேரத்தை
மிகவும் இரசிக்கிறேன்...!
எட்டிப்பிடிக்க முடியா
கனவுலகெல்லாம்
கவிதை சிறகு விரித்து...

ஆங்காங்கே
பறந்து பறந்து....
உணர்ந்து கரைந்து....
இசையின் மீட்டல்களுடன்...
எனக்கே எனக்கான
தனியுலகில்
நான் மட்டும்...
தேவதையாய்...
இறக்கைகளுடன்
காற்றுடன் காற்றாய்....
மிதக்கின்றேன்....

----கீர்த்தனா----

இயற்கையில் இன்பம்...


எண்ணங்களின் சுமையுடன்
நிம்மதி தேடி
கடற்கரை மணலிலே...!

அலைகளின் பொங்கலில்
சுமைகள் கரைந்திட
இலவம் பஞ்சாய்ப்
பறந்த மனம்...!

கண்களை நிரப்பிய
இயற்கை அன்னையின்
தெய்வீக தரிசனம்...!

தத்துவம் சொல்லித்தந்தன
அலைகள்...ஓயாதே ஓடு..
தேடல்களுடன் என...!

இயற்கை அன்னை
சொல்லித் தந்தாள்..
திரும்பி வரா
வாழ்க்கையை
இரசித்துச் செல் என...!

---கீர்த்தனா---

காதற்பனித்துளி....

அன்றொருநாள்
உள்ளே விழுந்த
பனித்துளியாய் காதல்...!
இனிப்பாய்...
நெஞ்சம் மலர்ந்திட...
பறந்தது மனப்பறவை
சுகராகமிசைத்து...
வான் வெளியின்
மடியினிலே...!

கண்களின் இமைக்குள்...
கனவுகள் மிதந்தது...!
தேவகானமாய்...
இசையின் மீட்டல்கள்...
நெஞ்சை நிறைக்க
விரிந்தது அழகாய்...
காதல் பூ...
மணம் வீசி
மலர்ச்சியுடன்...!

மலர்ந்த பூ
வாடி விடாமல்
நீரூற்றும்
கைகளைத் தேடியே...
தவிப்பாய் தவமிருக்கும்
தனிமைப் பூ...!

-----கீர்த்தனா----

காற்றினிலே ஒரு சேதி...

காற்றினிலே ஒரு சேதி...
தூதாக அனுப்புகிறேன்...!
கானலல்ல என் நட்பு
காவியம் என்று சொல்லு...!

உண்மை நட்பின் உதாசீனம்
உயிரை சிறுகக் குடிக்குமென்னும்
உளவியல் உணர்வுகளை
கொஞ்சம் நீயும் எடுத்து சொல்லு...!

நம்பிக்கை பொய்க்கவில்லை
நன்மதிப்பும் போகவில்லை
அலட்சியம் தாங்கவில்லை...
எனும் உண்மை நீயுமங்கே...
உணர்வோடு போய் சொல்லு...!

உருகுவது வெறும் நட்பல்ல...
உன்னுயிர் நட்பென்று...
உறுதியோடு எடுத்து சொல்லு...!

உடைந்து விடும் கண்ணாடி...
பல பிம்பம் காட்டுதற் போல்...
உன் பிம்பம் மட்டும் இங்கே...
எனைச் சுற்றி நிற்கும் உண்மை
கண்ணீர் கலந்து நீயும்...
உணர்வோடு எடுத்து சொல்லு...!

பிரிவின் அழுத்தத்திலே...
சிறு நெஞ்சு சிதறுமுன்னே
விரைவாக ஓடி வந்து...
நட்புக்கரம் பற்றச் சொல்லு...!

----கீர்த்தனா----

பூமனதின் இறப்பு…

அம்பு தைத்த சிறகுகள்
இரத்தச் சொட்டுடன் ரணமாய்…!
அடிபட்ட பறவையின்…
ஊமை வலி,
ஊசிக்குத்தல்களாய்…!

உணரும் நாளில்
எழமுடியாமல்….
சிறகொடிந்து ,உருக்குலைந்து
உருவம் இழந்தது...!

உண்மையின் தரிசனம்
தூங்குவதில்லை...!
உன்னதத்தின் உத்தமம்
நெஞ்சினில் குறையவில்லை...!

புரிந்து கொள்ளும் நாளில்…
பூமனதின் இறப்பு,..
கல்லறையில் தூங்கும்...!
உணரப்படும்…
அன்பின் பெருமை…!
என்றோ ஒருநாள்
பூஜிக்கப்படும்…!
அங்கே ஓரிடத்தில்…
நிச்சயமாய்...நிரந்தரமாய்...!

----கீர்த்தனா----

தண்ணிலவுக் காலம்..


மின்னற்பார்வையின்
தீண்டலில்…
நானும் நீயும்
நாமாகிய அதிசயம்..!

நீச்சல் தெரியாமலே
நீந்தலும்…!
இறக்கையில்லாமலே
பறத்தலும்…!
தேன் பருகாமலே
உன்மத்தமும்…!
புன்னகைக்க நினைக்காமலே
உதட்டில் விரியும் புன்னகையும்...!

இனியதொரு புதுவுலகில்…
நானும் நீயும்,
நம் உணர்வுகளும் மட்டுமே
சஞ்சரிக்கும்…
அழகிய தண்ணிலவுக் காலம்…!
வாழ்வின் இனிய தேன்சொட்டுக்களின்
சுவையுடனே...
உள்ளம் துள்ள, இனிமை பொங்க,
நாம் மட்டுமே...!
 
---கீர்த்தனா---


இலவச இன்பம்…!

வானம் சிருஷ்டிக்கும்
கணப்பொழுதில்
ஓர் அழகிய நீர்வீழ்ச்சி…
கண்டேன் அதன்
அழகிய ஓட்டம்
சாளரக் கண்ணாடிச்
சரிவினிலே…!

கொட்டும் சாரலின்
கொள்ளை அழகினில்…
குழந்தையாய் மாறித்
துள்ளும் மனம்…!
எனக்கே எனக்காய்
ஆண்டவன் கொடுத்த
இலவச இன்பம்…!

---கீர்த்தனா---

ஜீவனும் தேய்ந்திடும்.....


ஜீவனும் தேய்ந்திடும்
ஒரு நொடிப் பிரிவினில்...
என்ன சொந்தமோ
புரியவுமில்லை...
இப்படி என்னுயிர்
துடித்ததும் இல்லை...

உள்ளகத்து சுகமோ..துக்கமோ
உன்னிடம் பகிர்கையில்
இனம் புரியா ஒரு நிறைவு...
அடி நெஞ்சில் சுள்ளென
துன்பத்தின் கீறலாய்...
வலியின் சுவடுகள்...
உனதொரு சிறு முகச்சுழிப்பில்...!

வலியின் வடிவம் விளக்கும்
வார்த்தைக்காய்…
தேடலுடன் பெரும் துயரம்
எப்போதும் எண்ணங்களில்…!
வாழ்வின் வழியெல்லாம்…
உணர்வுப் பகிரல்களின்
உறவாய் நீ வேண்டும்!
உள்ளன்பின் உண்மைத் தழுவலுடன்...
எனக்கான என் உறவாய்….!

----கீர்த்தனா----

நினைவுகளின் எச்சங்களுடன்...!

நெஞ்சமெனும் ஆலயத்தில்…
நினைவுகளால் கோவில் கட்டி…
நித்தம் உனைப் பூஜித்தேன்…!
கோவிலுள் கருவறையில்…
நீக்கமற நீ மட்டும்….
நிறைவாக நிறைந்திருக்க …
என்ன எண்ணிப் பழகினையோ
என்னவனே நானறியேன் …!

எண்ணமெல்லாம்
சிதைத்த பின்னே…
மௌனமாய் நீ செல்ல…
மௌனமொழி அறியாது
மருகிப்போய் நானுமிங்கே …
ஏங்கி நின்றேன்
வழிமேல் விழி வைத்து…
நினைவுகளின் எச்சங்களுடன்...!

---கீர்த்தனா----

சுமப்பேன் சிலுவையை...

வலிகள் நிறைந்த இதயங்கள்
வலிகள் நிறைந்த இதயங்களுடன்
மட்டும் தான் இணையுமோ
எப்போதுமே..............
சிரிக்கும் போது மட்டும்
உன் துணையாக அல்ல நான்
அழும் போது உன்னோடு
மனம் வெதும்பி சேர்ந்தழும்
உயிர்த்துணை நான்...
உன் துயர் கண்டால்
உணர்வுக்குவியலில்
பைத்தியம் ஆகிறேன்...
அதனால் அன்புள்ளங்களிடம்
பைத்தியம் போல் புலம்புகிறேன்..!

தோழமையே உனக்காக
என்னுயிர் துடிப்பது உண்மை..!
முகமூடி மனிதர்களில்
உண்மை முகம் பிரித்தறிய முடியா
வலியுடன்....உண்மை அன்பின்
ஊற்றுடன் அன்பினை வழங்குவேன்
வற்றாமல் ஜீவநதியாய்...என்
இனியதோழமைகள் அனைவருக்குமாய்...!
வலிக்க வைப்போர் வலிக்க வைக்கட்டும்
சிலுவை சுமந்த இயேசுவின் பெருமை
என்றோ மனிதர் உணர்ந்தனர் அன்றோ...
சுமப்பேன் சிலுவையை அன்பின் உச்சமாய்
நான் அன்புக்கு அரசி...!

----கீர்த்தனா----

உனதழகு மனதின் ஆழத்துள்…..

குறையொன்றும்
பெரிதில்லை…
நீ மட்டும் போதுமென…
உன்வாய் மலர்வுப்பூக்கள்
உதிர்ந்த அக்கணம்…!
உனதழகு மனதின்
ஆழத்துள் வீழ்ந்து….
சிறைப்பட்டேன் நான்….
சிறை மீளும் ஆசையின்றி…!
காதலின் காதலனே
அன்புருவின் நாயகனே…
நீ மட்டும் போதுமெனக்கு
வாழ்வின் உச்சம் தொட…!

குறை தன்னை
பெரிதாய் நினைந்து….
நத்தையாய் சுருளும்
என் மனம்…. இன்று
தன்னம்பிக்கையுடன்
தெளிவாய்…..
நன்றி சொல்ல
வார்த்தையின்றி…
அன்புமலர்
பூஜை செய்தே…
உள்ளம் உருகினேன்…!

----கீர்த்தனா----

நட்சத்திரக் கூட்டங்களின் நடுவிலிருந்து….


சென்று விடுகிறேன்…
எங்கோ வெகு தூரமாய்….
அன்பினைக் கொடுத்தெடுத்த
உன்னன்புக்காய் ஏங்கி ஏங்கிப்
போராடிக்களைத்து…
உடலும் உள்ளமும்
சோர்ந்து தான் போயிற்று…!
இவ்வாழ்வின் எல்லை
ஒன்றே நிம்மதி…!

சென்று விடுவேன்
வெகுவிரைவில்…
நட்சத்திரக் கூட்டங்களின்
நடுவிலிருந்து
உன்னைத் தேடுவேன்…!
அடுத்தொரு பிறவி உண்டெனில்
எனக்காய் உனைத் தருவாய்
எனும் நம்பிக்கையில்...

----கீர்த்தனா----

ரோஜா...

முள்ளின் மேலும்
முகம் சிணுங்காமல்
அழகாய் அமர்வேன்...!


----கீர்த்தனா----

Friday 7 September 2012

பெரும் பயணம்...

வினாக்குறிகள்
நிரப்பித் தொடரும்…
சஞ்சலங்கள் நிறை வாழ்வில்…
விடையில்லாப்
பகுதிகள் ஏராளம்…!

விடியலின் பொழுதுகளில்…
தினந்தோறும் தேடலுடன்
சளைக்காமலே…
திசை தெரியா ஓட்டம்…!

எதுவரை எல்லை
எதுவும் புரியாமலே…
விதியின் தலையில்
பழி சுமத்தி…
முடிவில்லாத் தேடலுடன்
பெரும் பயணம்...!

---கீர்த்தனா---

கண்ணனவன் குழலின் இசை


காற்றின் ஒலியினிலே
தவழ்ந்து வந்த…
கண்ணனவன் குழலின் இசை…
காதலோடு காதினையே…
இனிதாக நனைத்திடவே…
மெய்மறந்த ராதையவள்,
கண்கள் சொக்கியே…
கசிந்துருகிக் காதல் கொண்டு…
பரவசம் எய்தினாள்
காதலின் உச்சத்தில்…
உயிரன்பின் தழுவலில்...!
----கீர்த்தனா----

காதலின் உயிர்ப்பில்


உறக்கம் தொலைத்து
மருகிக் களைத்து
உருக்கிக் கரைந்தும்...
காதலைக் காதல்
வெறுப்பதில்லை…!

இன்னும் அதிகமாய்ப்
பெருகிப் பெருகி
காதலின் உச்சமாய்க்
காதலைக் காதலிக்கிறது...!
காதலின் உயிர்ப்பில்
உலகின் இயக்கம்..
உயிர்த் துடிப்புடனே..!

---கீர்த்தனா---

பனி பொழியும் நாட்டினிலே…!

தாயின் மடியிலிருந்து
வேருடன் பெயர்த்து
வீசி எறியப்பட்டு…
வந்து வீழ்ந்தோம்

பனி பொழியும் நாட்டினிலே…!

கனவினில் மட்டும்…
தாய் மடித்தூக்கம்…!
அலைபேசியினில் மட்டும்…
தந்தையின் உச்சி முகர்தல்…!
காற்றின் வழி மட்டும்…
உறவினர் உரையாடல்…!

தாய் தந்தை
ஸ்பரிசமின்றி…
உடன்பிறந்தோர்
அரவணைப்பின்றி…
பனியுடன் பனியாய்…
உணர்வுகளும்
உறைந்து போய்…
வெறும் ஜடமாக
நாமும் செல்கிறோம்…
வாழ்க்கையின் ஓட்டத்திலே…!

----கீர்த்தனா----

நிலையில்லா வாழ்க்கைக்காய்…


மாயையின் உருவங்கள்
நான் என்பதும்
நீயென்பதும்…!!
தொலையப்போகும்
ஆன்மாக்காய்…
துன்பங்கள் பல சுமந்து
உழல்கின்றோம்….

நிலையில்லா
வாழ்க்கைக்காய்…
நிலைக்குமெனும்
நம்பிக்கையில்…
பயணங்கள்….
முடிவேயில்லாமல்…!!

அளவோடு செல்வம்…
அன்போடு பகிர்தல்…
உணர்வோடு மனிதம்…
கரை காணாக்காதல்…
கருத்துள்ள நட்பு…
இவை போதும் வாழும்
வரை நிம்மதிக்கு...!

---கீர்த்தனா---