Sunday, 28 October 2012

இனிய நிலாக்காலம்...


பறவைகளின் கொஞ்சலுடன்...
அதிகாலைப் பனி நேரம்...
வீட்டுச்சிறு தோட்டம் தனில்

நான் உலவிய காலம்...!
வண்ண மலர்களுடன்
கதைபேசி...புத்தம் புதுக்
காய்கறிகள் பறித்து...
இன்புற்றிருந்த
இனிய நிலாக்காலம்...
இன்றே எனக்கு...
மீண்டும் வேண்டும்...!

பசுவின் மடி தொட்டு...
அன்னை கறந்த பாலில்...
அருமையாய்ச் சுடுபானம்...
அருந்திச் சுவைத்திருந்த
என் வீட்டுச் சமையற்கட்டு...
இந்த நிமிடம்...
இங்கே வேண்டும்...!

ஊற வைத்த பழஞ்சோறு...
சுட்ட கருவாடு தொட்டு...
சுவைத்துக் களித்திருந்த...
என் வீட்டுத் திண்ணை...
இக்கணத்தில்...
வேண்டும் வேண்டும்...!

வட்டமிட்டு நாமிருந்து...
கூடிக் கூழ் குடித்து...
பேசிக் களித்திருந்த...
என் வீட்டு நிலாமுற்றம்...
இப்போதே...
வேண்டும் வேண்டும்...!

கொட்டும் பனிமழையில்...
எல்லாமும் தொலைத்து விட்டு...
விட்டம் பார்த்திங்கே...
விழிகள் வெறித்தபடி...
இழந்தவையின் பெருமை எண்ணி...
மருகும் நெஞ்சம்...
கெஞ்சும் ஏக்கத்துடன்...
புலம் பெயர் மண்ணிலே...!

---கீர்த்தனா---

Friday, 26 October 2012

இத்தனை விந்தைகளா?



நேர் கொண்ட கண்களின்
கூர்ப்பார்வை தன்னிலே...
இழந்தேன் என் மனதை
முழுதாய் உன்னிடம் நான்...!

சிறகடிக்கும் நெஞ்சினுள்ளே...
சிருங்கார லகரி ராகம்
இனிதாக மனம் மயக்க...
வான் வெளியில் என் பயணம்...!

ஒற்றைப் பார்வை வீச்சினுள்
இத்தனை விந்தைகளா?
பார்த்து விட்டு நீ சென்றாய்...
திருட்டுக் கொடுத்து விட்டு
நான் நின்றேன்...!

---கீர்த்தனா---

Thursday, 25 October 2012

தாய்மை உன்னிடத்தில்...

பெண்மை கொண்ட
வரந்தன்னை பெற்றிடாத
வந்தியை…!


உச்சநிலை தாய்மை
தனை உணர்ந்திடாத
உலர் நிலை…!

கற்றவரும் மற்றவரும்
புரிந்து கொள்ளாக்
கொடும் நிலை…!
சமூகத்தின் விஷநாக்கு
கொத்திக் குதறும்
கடும் நிலை…!

தாயுமானவர்க் கடவுளா நீ
இத்தனை கொடுமை செய்தாய்?
பெண்மையே வருந்தாதே…!
தாய்மையை இழக்காதே…!

கடவுளும் வெட்கித்
தலை குனியட்டும்...
உன் செயல் கண்டு…!
சின்னஞ்சிறு பூக்களிடம்
அவன் பறித்த தாய்மையை…
இன்றே நீ கொடுத்து விடு...!
மனம் நிறைந்து....
சிறு பூவொன்றின் தாயாகு...!


---கீர்த்தனா---


Wednesday, 24 October 2012

ஐப்பசி 24













பேச்சினில் சமாதானம்
மூச்சினில் காணவில்லை…!
காட்டு விலங்குகளாய்

எப்போதும் வீண்சண்டை…!

வீட்டினில் குழப்பம்
நாட்டினில் குழப்பம்…
விட்டுக் கொடுக்கும்
எண்ணங்கள்…
வீம்பினில் இங்கு
வருவதில்லை…!
அகங்காரம் தலைதூக்கி….
அறிவுக்கண் மறைத்து…
அமைதியை இங்கு
கொன்று தின்றிடும்…!

தாக்கி இன்புறும்
செயலினை விடுத்து…
நோக்கிச் செல்வோம்
சமாதான வழி தனில்…
வெண்புறா மட்டுமா
அமைதித் தூதனுப்பும்…
மானிடப்புறாக்கள்
நாமும் அனுப்புவோம்….!
உலக சமாதான
தினத்தில் இன்று
உறுதி கொள்வோம்…
கொள்கை வெல்வோம்…!

---கீர்த்தனா---

Tuesday, 23 October 2012

விதைப்பின் பயனில்....



 
 
 
 
 
 
 
 
 
கவிதை சொல்லும்
என் விழிகளுக்குள்...
கனவினை விதைத்த
உன் விழிகள்...!
கவிமலர்ப் பூக்கள்
பூத்துக் குலுங்க...
விதைப்பின் பயனில்
இன்பம் பொங்க...!

---கீர்த்தனா---

Saturday, 20 October 2012

என்னுயிர் பாரதி...!


நெஞ்சினுள் வாழும்
என்னுயிர் பாரதி...!
சமூகச் சாக்கடைகளை
மிதித்தபடி நடக்கின்றேன்
மாற்றும் திராணியற்று...!

மந்தைகளாய் வாழும்
மாந்தர் மத்தியில்...
ஒளிந்திருக்கும் மனிதம்
எங்கே தேடுவேன்...
நல்லவர் கெட்டவர்
பிரித்தறியத்
தெரியவில்லை...!
சுயநல ஜகத்தின் முன்
தலை குனிந்து...
தோற்றுப்போய்...!

ஏறு போல் நடை
தேறவில்லை இங்கு...!
உன் பக்தையாய் வாழும்
தகுதி இழந்து...
கூனிக்குறுகி உணர்வு இறந்து
மனக்கூட்டுக்குள் பதுங்கி
வெறும் பிணமாய்...!

---கீர்த்தனா---

அன்புத் தோழமைகள்...















வலிகள் சூழ்ந்த
இருளின் களைப்பினிலே...
முகநூல் நண்பர்கள்
முகம் காணாது...
மூன்று நாள்
விடுப்பெடுத்தேன்...!

திருவிழாக் கூட்டத்திலே...
தனித்து விட்ட
குழந்தையைப் போல்...
திரு திரு என்றே விழித்து...
விழிநீர் உடைப்பெடுத்து...
தனிமையின் கொடுமையில்
மிதிபட்டு கலங்கினேன்...!

அன்புத் தோழமைகள்
உள்ளச் சிறைக்குள்
சரண் புகும் கணத்துக்காய்...
யுகங்களாய்க் கடக்கும்
நொடிகளை எண்ணியபடி...!

--- கீர்த்தனா---