Friday, 31 May 2013

உயிர் கொல்லி...

புல்லாங்குழலல்ல ஊதிவிட
இராகம் பிறக்க!!
ஊதுகின்றாய் அடுப்பாங் குழல்!!
நன்றாக ஊது ஊது...
தணலாகிப் பற்றி எரியப்போவது
உன் உயிர் சுமக்கும்
சுவாசத் தொழிலகம்...
புரிந்து கொள்ளும் நேரம்
பிரிந்து சென்று விடும்
உன்னுயிர் வெகு தூரம்!!!

---கீர்த்தனா---

இன்று புகையிலை எதிர்ப்பு தினம்... புகை பிடிப்பவர்களுக்கு அன்புடன் வேண்டுகோள்!! மீள முயற்சியுங்கள்... ஒரு பதிவில் படித்தேன் புகைக்க ஆசை எழும் நேரத்தில் உலர் திராட்சை சாப்பிட்டு வந்தால், அதில் நிகொட்டினை எதிர்க்கும் சக்தி இருப்பதால்,புகைக்கும் விருப்பத்தை அது கட்டுப்படுத்துவதாக... விடுபட விரும்பும் அன்புள்ளங்கள் முயற்சி செய்து பாருங்கள்... அன்புடன் கீர்த்தனா...  

Thursday, 30 May 2013

முகில் விடு தூது

வெட்டிய மின்னலில்
தங்க மழைத்துளி!!
கொட்டிய அருவியைக்
கவிழ்த்தது வானம்!!

இடித்த இடியின்
அதிர்வினில் மீண்டு...
விடுத்தது நெஞ்சம்
நனைந்திடும் அழைப்பினை...

ஜலதரங்கம் வாசிக்க
நொடியினில் கற்றது...
மழைக் குளித்த
வீட்டுத் தாழ்வாரம்!!

சாரல் தூவும்
முகில் விடு தூதில்
மூழ்கி நனைந்தது
புவி இதமாக....

---கீர்த்தனா---

Wednesday, 29 May 2013

காகிதப்பூ

காய்க்காத பூவுக்குள்
கனமான பாரம்!!
கனவு சுமந்த கண்களுக்குள்
கலங்கலாய் ஈரம்!!

பூக்க வைத்தவனோ
காய்க்க வைக்க ஏன் மறுத்தான்?
வேண்டாத வறுமைக்குள்
ஒரு மரத்தில் பல காய்கள்!!
வேண்டி வருந்தும் கருவறைக்குள்
ஊர்தல் இல்லா வெறும் வெறுமை!!

எதனால் எனும் கேள்வியுடன்
விளைச்சல் இல்லா வறண்ட நிலமாய்...
உளைச்சல் கொண்ட மனத்துடன்
செவி சாய்க்கா இறைவனைத் தேடி...
கோவில் விருட்சங்களை
சுற்றி வலம் வந்த படி.....

---கீர்த்தனா---

இயற்கையின் விதி 2

பனித்துளிகள் உதிர்கையில்
பூக்களுக்கும் வியர்க்கும்!!
மழைத்துளிகள் தழுவுகையில்
இலைகளுக்கும் சிலிர்க்கும்!!!

---கீர்த்தனா---

Monday, 27 May 2013

காற்றின் திசையில்...

Bilde: காற்றின் திசையில்...
********************

உண்மை அன்புக்கு
மரணம் வேண்டாம்
மரணம் வேண்டாம்
உருப் போட்டபடி
நெஞ்சம்....

உள்ளே எதுவோ
தவித்தபடி...
அமைதி இழந்த
ஆத்மா போல்...

காற்றின் திசையில்
பரவிப் பரவி...
தவிப்பின் நொடிகள்
நீளமாக நீளமாக...
அலைந்த படி
அலைந்த படி....

அரூப மனம்
உயிர்ப்புடன்
விசும்பியபடி...
அத்தனை அன்பும்
எங்கே எங்கே
என்ற கேள்வியுடன்.......

---கீர்த்தனா---

உண்மை அன்புக்கு
மரணம் வேண்டாம்
மரணம் வேண்டாம்
உருப் போட்டபடி
நெஞ்சம்....

உள்ளே எதுவோ
தவித்தபடி
தவித்தபடி...
அமைதி இழந்த
ஆத்மா போல்...

காற்றின் திசையில்
பரவிப் பரவி...
தவிப்பின் நொடிகள்
நீளமாக நீளமாக...
அலைக்கழிந்த
ஆத்மாவாய்
அலைந்த படி
அலைந்த படி....

அரூப மனம்
உயிர்ப்புடன்
விசும்பியபடி
விசும்பியபடி...
அத்தனை அன்பும்
எங்கே எங்கே
என்ற கேள்வியுடன்
கேள்வியுடன்.......
 
---கீர்த்தனா---

Sunday, 26 May 2013

இயற்கையின் விதி!!!

நறு முகை வெடிக்கையில்
கரு வண்டின் மயக்கம்!!!
திருடிச் செல்லும் அனுமதியின்றி
சிறு மலரின் அதரம் தொட்டு,
விரசமின்றித் தேமதுரம்!!!

---கீர்த்தனா---

Saturday, 25 May 2013

எத்தனை ரசங்கள் உந்தன் குரலில்...

சோகத்தில் பிழிய வைத்தாய்!
துள்ளலில் அதிர வைத்தாய்!
காதலில் கனிய வைத்தாய்!
வீரத்தில் நிமிர வைத்தாய்!
பக்தியில் கரைய வைத்தாய்!
எத்தனை எத்தனை ரசங்கள்
உந்தன் குரலில்...
எந்தன் குரலில் ஒலிப்பதெல்லாம்
கந்தன் புகழே எனப் பக்தி ரசம்...
அந்தக் கந்தனும் மனம் குழைந்து
உந்தன் வசம்...
நான் ஆணையிட்டால் அது
நடந்து விட்டால்...கானம்
அது ஏழைகளின் உற்சாக பானம்...
வாழும் வையம் உன் இசையின்
உயிர்ப்பினில்....
வாழ்வாய் நீயும் எம் நெஞ்சின்
இருப்பினில்....
என்றும் சிரஞ்சீவியாய்....

---கீர்த்தனா---