எங்கும்...எங்கெங்கும்,
இருள் சூழ் அடர் காடு!
உடல் நடுங்க மனம் பதைக்க,
தனித்து விடப்பட்ட
ஆட்டுக் குட்டியாய்....
ஓநாய்க் கூட்டத்தின்
மத்தியில் நிற்கும் உணர்வுடன்!
கடித்துக் குதறத் துரத்தியபடி
சோதனைகள், வேதனைகள்
வாழ்வில் சூழ்ந்து மொய்க்க
தன்னம்பிக்கை மெதுவாக
இறப்பிக்கப் பட்டபடி...
துணையாய் உற்ற உறவின்
தோளில் தட்டும் சிறு ஸ்பரிசம்...
உன்னுடன் நான் என
உணர்த்துகையில்...
மீண்டும் மெதுவாக மெதுவாக
துளிர்விடும் தன்னம்பிக்கை!
அன்பென்னும் நூலிழை...
நகர்த்திச் செல்லும் வாழ்வினை...
---கீர்த்தனா---
எதுவோ புரிந்தும்...
எதுவுமே புரியாமலும்...
காலத்தின் சுழற்சியின்,
கோலத்தின் மிரட்சியில்!
கடிதான மனங்களும்,
இனிதான மனங்களும்!
நிறம் மாறும் குணங்களும்,
நிலைத்திருக்கும் குணங்களும்!
எதிர்மறை எண்ணங்களும்,
நேரான எண்ணங்களும்!
புரிதல் இல்லாப் பிணைப்புக்களும்,
புரிதல் கொண்ட பிணைப்புக்களும்!
பற்றாத அன்பும்,
வற்றாத அன்பும்!
படைப்பியலின் தத்துவங்கள்!
வாழ்வியலின் விதிமுறைகள்!
எதற்காக எதற்காக
புரிதல் இல்லாப் படைப்புக்கள்???
ஆயிரமாயிரம் வினாக்குறிகளுடன்
முற்றுப்புள்ளியில்லாத் தொடர் தேடல்கள்!
ஆயினும் ஆயினும் சோர்வின்றிய பயணம்...
தொடரட்டும் தொடரட்டும்...
வெற்றித் தேசம் நோக்கி...
---கீர்த்தனா---
மெய் மட்டும் வளர்த்தேன்...
பொய் தொலைத்த நெஞ்சத்துள்!
நட்பான நிலவொன்றை...
மிக மிகப் பத்திரமாய்,
ஒளித்து வைத்தேன் கண்ணுக்குள்!
திறக்க மறுத்தேன் இறுக மூடிய
விழிக் கதவுகளை....
காப்பது ஒன்றே இலட்சியமாய்...
அன்பு ஒன்றே போதனையாய்...
சூல் கொண்ட தாயின் கவனத்துடன்!
வெளியே விழத் துடித்தபடி நிலவு
தாய்மையின் பதற்றம் உணராமலே....
புரிந்தும் புரியாதது போல்....
---கீர்த்தனா---
இலட்சியக் கனவுகள்,
இரத்தத்தின் துடிப்பினில்!
இன்னல்கள் இருட்டாய்,
இலவம் பஞ்சு நெஞ்சுக்குள்...
இடியாகத் தாக்கிச் செல்கையில்...
இடித்து உரைத்து விடு,
இதுவல்ல உன் பணி என...
இளஞ்சூரிய ஒளி உன்முன்னே...
இறக்கைகள் விரி!!!
இலகுவாய்ப் பற!!!
இனிய தேசத்தில் குவிந்திருக்கும்
இனிப்பான வெற்றிக் கனிகளை...
இக்கணமே எட்டிப்பறி!!!
---கீர்த்தனா---
பிடிக்கவில்லை என விலகினேன்!
தீண்டாதே எனத் திட்டினேன்!
வருத்தாதே எனக் கெஞ்சினேன்!
யாருனக்குத் துணை இங்கு..
அணைத்துக் கொள்ளேன்
எனை என்றது!
தந்திடுவேன் எண்ணங்களிலே...
சிதறிடும் வண்ணங்களையே....
அழகாய் வடியேன் கவிகளை
நீ என்றது!
தூரச் செல்லும் உறவுகளும்....
தூக்கம் இல்லா இரவுகளும்....
வெறுத்த உறவே தஞ்சமென,
தனிமையிடம் சரண் புகுந்தேன்!
---கீர்த்தனா---
மீட்டிய கரங்களின் நடனம்...
என்னுள்ளே என்னுள்ளே...
நாட்டியம் ஆடின நரம்புகள்!
உயிருக்குள் நாதம் சுண்ட...
மெய்மறந்து கண்கள் மூட...
கண்களில் நீர் கசிய,
நெஞ்சம் கசிந்துருக,
மயிர்க்கால்கள்
ஒவ்வொன்றாய்ச் சிலிர்த்து...
ஏதோ ஒன்றோடி,
உச்சந் தலைக்குள்....
உச்சமாய் ஒரு சிலிர்ப்பு பரவ...
எங்கோ ஒரு இனிய உலகில்
நான் மட்டும் மிதந்து மிதந்து
மெதுவாகப் பறந்து செல்ல....
வீணையின் தந்திகளைச்
சுண்டி மீட்டுகிறார்களோ?
இல்லையெனில்....
நம்முயிரைத்தான் மீட்டுகிறார்களோ?
நானறியேன்...உயிர் உருக
நனைந்தேன் நனைந்தேன்
வீணையின் நாத மழையிலே...
---கீர்த்தனா---
விழிகளைக் கொடையாய்க்
கொடுத்தாயே........
கோடி நன்றி நானுரைப்பேன்!
எத்தனை வித்தைகள்....
வண்ணங்களால் வான்பரப்பில்!
வகை வகையாய் நிலப்பரப்பில்!
எந்த ஓவியன் இவை வரைந்தான்,
அழகு ஆயிரம் கண்களை நிறைக்க!
நீர்நிலைகள் வானம் பார்த்துக் காதலிக்க...
கமலப் பெண்கள் ஆதவனைக் காதலிக்க...
அல்லிப்பெண்கள் மதியழகைக் காதலிக்க...
தாமரை இலைகளோ ஒட்டாமல்
உருண்டோடும் நீர்துளியைக் காதலிக்க...
தொட முடியா வானத்தினைத்
தொட்டு விட நிலம் துடிக்க....
இன்னும் இன்னும் எதை சொல்ல
ஒன்றின் மேல் ஒன்று தீராக் காதலுடன்....
அத்தனை அழகையும் ஒன்றாய்...
அடங்காப் பசியுடன் - என்னிரு
விழிகள் விழுங்கின மிச்சமின்றி...
---கீர்த்தனா---