Friday, 10 May 2013

பறக்க ஆரம்பிக்கையில் ..


இன்றுவரை ஆண்டவன்
தந்ததை விடவா
புதிதாய்ப் பெறப்
போகின்றேன்????
பறக்க ஆரம்பிக்கையில்
சிறகுகள் பறிக்கப் படுவது
ஒன்றும் புதிதல்லவே...
ஆனாலும் விழிகளும் நெஞ்சமும்
சிந்தனை அலுவலகமும்
சொல்லுக் கேட்பதில்லையே...
தம் கடமையை
எப்பொழுதும் மிகச்
சரியாகவே செய்கின்றன....

---கீர்த்தனா---

அன்னை மடியில் கீர்த்தனா...

தடவித் தடவி
அசைவினை உணர்ந்து!
ஊட்டி ஊட்டி
தொப்புள்கொடி வழி
அமுதளித்து...

கொடியறுத்து மடியினில்
வீழ்ந்ததில் இருந்து
பூமித்தாய் மடியில்
புதையும் வரை...
பாலுடன் கலந்தூட்டிய
பாசாங்கில்லாப் பாசம்
அன்னையிடம் மட்டுமே
நித்தியமாய் என்றும்!!!

மடியினில் படுத்த
சிறு நொடி நேரம்
கண்ணீர் துடைத்த
அவள் கர வாஞ்சை
எல்லாமும் எனக்குள் தந்து
உன் துன்பம் மற என்றுணர்த்த
கொஞ்சமாய்த் தூங்கினேன்
அனைத்தும் மறந்து...

---கீர்த்தனா---

Tuesday, 7 May 2013

குளிர்ப் பள்ளி எழுச்சி...

சில்லென்று இதழ் தொட்டு
விழித்தெழ வைத்தது
ரோஜாவை...பனித்துளி...
இருள் பிரியும் பொழுதினில்...
குளிர்ப் பள்ளி எழுச்சி...

---கீர்த்தனா---

ஆடினான் ஆனந்தக் கூத்தன்...

ஆடினான் ஆடினான் 
ஆனந்தக் கூத்தன்....
மெய்யெல்லாம் சாம்பல் பூசி!
ஆடும்வரை ஆட்டம்,
சாம்பல் காட்டில் முடியும்
உணர்ந்து கொள் மனிதா என்று!
உணரவில்லை உணரவில்லை
தொடருகின்ற பந்தங்கள்!
உளம் நொருக்கும் எண்ணங்கள்!
வாழும் வரை ஈதல் அன்பு
உண்மை நெஞ்சம் தந்தவர்க்கு!
உன்னில் உயிர் வாழும் வரை!
சாம்பல் காட்டில் கரையும் வரை!

---கீர்த்தனா---

Friday, 3 May 2013

இசையொன்று படைத்தாயே..

இழந்தவை ஏராளம்!
இழப்பதற்கு ஏதுமில்லை!
மனம் தடவும் மயிலிறகாய்
பாட்டொன்று உண்டு!
"குறை ஒன்றும் இல்லை
மறை மூர்த்தி கண்ணா"

வலிகளின் தடங்கள் - என்
வாழ்க்கை நானறிவேன்!
வரமாய்த் தந்தாய் - உன்
கருணை இதுவா நானறியேன்!

இருப்பினும் குறை ஒன்றும்
இல்லை மறை மூர்த்தி கண்ணா
குறை ஒன்றும் இல்லை கண்ணா!
இசையொன்று படைத்தாயே
மனம் தன்னைத் தாலாட்ட
குறை ஒன்றும் இல்லை கண்ணா!

---கீர்த்தனா---

மாயன் வரவிற்காய்...


செங்காந்தள் நீள் விழியாள்
சுழற்றும் பார்வைக்குள்
காதற் கோலம் கண்டதென்ன?
கோலக் காட்சிக்குள்ளே
மிதந்த பிம்பம் தான் என்ன?

கண்ணுக்குள் நிலவாக
பத்திரமாய் அவன் பிம்பம்
பதித்து வைத்துக் காதலுடன்
கொடி பற்றிப் படர்ந்த படி!

இடை பொய்த்த பாவையவள்
நடை மெலிந்து ஏக்கத்துடன்...
தடை தாண்டும் காதலுடன்...
விழி வாசல் விரித்து வைத்து
மாயன் அவன் வரவிற்காய்...

---கீர்த்தனா---

Wednesday, 1 May 2013

உழைக்கும் கரங்களுக்கு...

களைப்பின்றி உழைக்க...
இளைப்பின்றி ஜெயிக்க...
உழைப்பாளி உடல்நோவிற்கு
கொத்தடிமை வாழ்வுக்கு...
புள்ளி தொட்டு முற்று வைத்த...
வரலாற்றுச் சிறப்பின்
மேன்மை பெற்ற நாளாம்
மே தின நன்னாளாம்!
நானிலம் எங்குமே...
நலம் வாழத் தொழில் செய்யும்...
வியர்வை முத்துச் சொந்தங்களின்...
உயர்வின் பெருமை நாமுணர்ந்து
வாழ்த்துச் சொல்லும் நேரமிது...

---கீர்த்தனா---