Friday, 12 April 2013

இத்தனை அழகையும் பருக மறுத்து.......


எத்தனை அழகாய்
பிரபஞ்சம் படைத்தான்
இத்தனை நிறங்கள்
கண்ணுக்கு விருந்தாய்...
காண்பதெல்லாம் கனவல்ல
கண்முன் அதிசய ஓவியமாய்... 

பட்டாம் பூச்சிச் சிறகின் நேர்த்தி
பட்டுப் பூவின் இதழின் நேர்த்தி
வண்ணமயிலின் துள்ளும் ஆட்டம்
நீலக் குயிலின் இனிமைப் பாட்டு
பச்சைக் கிளியின் கொஞ்சும் பேச்சு
மிதக்கும் வெண்ணாரைக் கூட்டம்

தலையசைத்தாடும் தென்னங்கீற்று
தடையின்றிப் பாயும் வெள்ளியருவி
தொங்கி மிதக்கும் வெண்பஞ்சு மேகம்
பொங்கி நுரைக்கும் நீலக் கடல்
வெண்மணல் பரத்திய அழகிய கரை

ஓங்கி உயர் மரகத மலைகள்
மாருதம் வீசும் மருத நிலங்கள்
இரவினை ஆளும் நிலா மகராணி
இவளினைச் சூழ்ந்து நட்சத்திரத் தோழியர்
இரவினில் கமழும் மல்லிகை வாசம்
சாமரம் வீசும் வேப்பமரங்கள்

கதிரவன் அந்தப்புரம் தாமரைக்குளமும்
சந்திரன் அந்தப்புரம் அல்லிக்குளமும்
அழகாய் விரியும் அற்புத விடியல்
அந்தியில் உரசும் பகலும் மென்னிருளும்
இன்னும் சொல்லா ஆயிரம் அழகும்
இத்தனை அழகையும் பருக மறுத்து
அமைதி இழந்து எதையோ தேடி...

---கீர்த்தனா---


Tuesday, 9 April 2013

செல்வ மகன்





அன்றைய நாளில்
இறக்கைகளுக்குள்
பொத்தி வைத்து
உறங்கிய ஞாபகம்
இந்த நிமிடம் போல்....

"ங்கா" எனும் மெல்லிய
இனியமொழி முனகலுடன்
பஞ்சுடல் மென்ஸ்பரிசம்
மென்மையாய் நெஞ்சுக்குள்
இன்னும் வாசத்துடன்....

பட்டுக் கை கால்கள்
மெல்ல அசைத்தசைத்து
மெத்தென உதைத்து...
கன்னம் குழிய குழியக்
கொள்ளை கொண்டு சிரித்து....

தேனாய் எச்சில் ஒழுக ஒழுக
முத்து முத்தம் பதித்து...
ஒரு போதுமே அழுது
அழிச்சாட்டியம் பண்ணியதில்லை
அம்மாவின் சிறகிழப்பை அறிந்து
பிறந்த செல்வம் போல்...

இன்று மூவாறு நிறைந்து...
அண்ணார்ந்து நான் பார்க்கும்
உயரத்தில் வளர்ந்து... நான்
பெற்ற செல்வ மகன்...
நெஞ்சமெல்லாம் நிறைந்து

வாழ்த்துகின்றோம்... நீ
பிறந்த இந்நாளில்
பார் போற்றும் பெருமையுடன்
நீடூழி வாழ்க வாழ்க!!!

Monday, 8 April 2013

உறவுகளின் மௌனமொழி...

உலவுகின்றோம் உணர்வுள்ள
மனித இயந்திரங்களாய்
உருளுகின்ற பூவுலகில்
ஊஞ்சலாடும் உள்ளத்துடன்
புள்ளி இல்லா வட்டமொன்றில்!!

புரியாத உறவுகளுடன்
புரியாத உணர்வுகளுடன்
சுற்றிச் சுற்றி முடிவில்லாமல்
அதே வட்டத்தில்...தொடர்ந்தபடி!!

உறவாடும் உறவனைத்தும்
இறுதிவரை வருவதில்லை!!
உறுதியாகத் தெரிந்தாலும்
உளம் சாந்தி கொள்வதில்லை

உறவுகளின் மௌனமொழிக்கு
அகராதியில் அர்த்தம் தேடி
உணர்வுகளின் ஆளுதலில்
முற்றாகத் தொலைந்தபடியே...!!

---கீர்த்தனா---

Sunday, 7 April 2013

பூந்தளிர்க் கண்ணா!!



கண்ணா உந்தன்
வெண்ணை திருடும்
கண்ணைச் சிமிட்டும்
குறும்புப் பார்வை
கரும்பாய் என்
நெஞ்சை அள்ள...!!

அரும்பாய் மலர்ந்தாய்
சுழிக்கும் சிறு,
மொட்டிதழ் விரித்துப்
புன்னகைப் பூவால்...
தேன்துளி தெளித்துக்
கொள்ளை கொண்டாய்
மாயக் கள்வா!!!!

கரும் நுரை மேகம்
வண்ணமாய் குழைந்து
மென்னுடல் கொண்ட
பூந்தளிர்க் கண்ணா!!
மாந்தளிர்ப் பாதம்
மார்பினில் உதைத்தாய்!!

என் மடிமீதும்
கனவினில் புரண்டாய்
அள்ளி அணைத்து
ஆராரோப் பாடினேன்!!
ஆண்டவன் என் மடி
தூங்கிய பேரின்பத்தில்
கண்மை கசிய
ஆனந்த நீர் பெருக!!!

---கீர்த்தனா---

அன்புப் பிசாசு நான் ...


நான் நீயாக...

நான் நானாக வாழ்ந்ததை விட
நான் நீயாக வாழ்ந்த கணங்களே
அதிகமாய்...... உந்தன்
உணர்வுகளில் ஆழ்துன்பம் உண்டு
உதட்டின் சிரிப்பினில்,
வலியின் விழுங்கல் உண்டு
நானறிவேன்.... ஏனெனில்
நீயறியாமலே உன் துன்பம்
சுமப்பவள் நான்...அறிவாயோ என் அன்புக் குழந்தை நீ
இறுதிவரை உனக்காய் சுமப்பேன்
தாலாட்டும் தாயாய் இருப்பேன்...
அன்பின் வடி
வினில் இறைவன்
உன்னிடமும் என்னிடமும்...

--- கீர்த்தனா---

"ஊர்க்காற்று"




அழிந்த எம் கிராமத்தை விட்டு புலம் பெயர்ந்து வாழும் என் கிராமத்து மக்கள் பெரும்பான்மையோர் ஸ்விட்சர்லாந்து நாட்டில் "ஊர்க்காற்று" எனும் ஒன்று கூடல் நிகழ்வில் இணைந்து மண்வாசனையை நுகர்ந்தோம்...அந்த நினைவுப் பதிவு இந்தக் கவிதை...அவ்வளவு மகிழ்வு 28, 30 வருடங்களின் பின் உறவுகளை சந்தித்த உணர்வின் வெளிப்பாடு சொல்ல வார்த்தைகள் இல்லை... :))))))))))) ♥

***************************************************

எழில் கொஞ்சும் நம் கிராமம்
குரும்பையூரின் நாமம் தனை
உச்சரிக்கும் போதினிலே
உணர்வுக் குழம்புகளாய்...நாம்...
புரண்டு தவழ்ந்த செம்மண்ணின்
புகழ் வாய்ந்த பெருமை தனை
நினைக்கும் தோறும் நினைக்கும் தோறும்
தாயவளைத் தொலைத்துத்
தவிக்கும் குழந்தையின் உணர்வுடனே...

திணைப்புலங்கள் ஐந்து எனக் கற்றோம்
ஆறாந்திணைப் புலமாய் நாமும் கண்டோம்
அன்பும், அன்புசார் நிலமுமாய்
குரும்பசிட்டிக் கிராமந்தனை!

எட்டுத்திக்கும் சென்று தான் நானும் பார்த்தேன்!
ஏழு கடல் தாண்டியும் தான் தேடித் பார்த்தேன்!
நம் வீட்டுக் கிணற்றுநீரின் சுவை...
இக்கணம் வரை...எங்கேயும் கிட்டவில்லை!

ஓங்கி உயர் பனங்காடுகளும்..
தென்னங் கீற்றுகளில்
தென்றல் உரசும் சலசலப்பும்..
வெண்மலர் தாங்கி நின்று
குடை விரித்த தேமாக்களும்...

அமைதி சூழ் ஆலயங்களும்
சிங்காரமாய் அசைந்து வரும் - நம்
கலைஞர் கைவண்ணச் சிறப்பில்
அம்மன் கோவிற் சித்திரத்தேரும்...
இனிய திருவிழாக் காலங்களும்...
பச்சையம் போர்த்திய விளைநிலங்களும்
இச்சை இன்னும் தீராமல்...
மனக் கண்ணுள் இரசித்தபடி...

இளைஞர் இளைப்பாறலுக்கு
நிழல் தந்த அரசமரமும், அரசடிச்சந்தியும்...
சிட்டுக் குருவிகளாய் நாம் சிறகடித்துத் திரிந்த
ஒற்றையடிப் பாதைகளும்...
மணிகடைச்சந்தி, குரும்பசிட்டிச்சந்தி..
மாயெழு, வவுணத்தம்பை வீதிகளுடன்
இன்னும் பிற வீதிகளும்...

முதலெழுத்தை முத்தாய் நாம் கற்ற
பொன் அவர் தந்த பரமானந்தா பாடசாலையும்...
விளையாட்டு, கலைப்பணி பெருமையுடன்
வளர்த்து வந்த சிறு தமிழ்ச் சங்கங்களும்...
கல்வியிற் சிறந்து மேன்மை பெற்ற
மேதைகளின் பெருமைகளும்...
சிம்மக் குரலோன் நேர் கொண்ட பார்வையுடன்,
நாம் கண்ட பாரதியாய் நடராஜா மாஸ்டரும்...
பெயர் குறிப்பிடா இன்னும் பல
சமூக ஆர்வலர்களும்...

இன்னும் இன்னும் சொன்னவை சில
சொல்லாதவை பலவாய்ப் பசுமையாய்ப் பதிந்த
குரும்பையூரின் அற்றைய நினைவுகளை...
சூல் கொண்ட தாயாய் இற்றைவரை
நெஞ்சினுள்ளே சுமந்தபடி,
புலம் பெயர்ந்த நாடுகளில் நாமெல்லாம்!!!
நெஞ்சம் உகுக்கும் செந்நீரின் ஈரத்துடன்
அழிக்கப்பட்ட கிராமத்தின்
பழைய கோலம் தேடியபடி
ஏக்கத்துடன் இன்றும்...

அன்று ஊர்க்குருவிகள் நாமெல்லாம்
ஊர்விட்டுப் பறந்து சென்றோம்
இன்று ஊர்க்காற்றுத் தென்றலது
ஒவ்வொருவர் காதினிலும்
பாசம் கொண்டு அழைப்பு தனை
மென்மையாய் வருடிச் சொல்ல..
ஓடி வந்தோம் நாமுமிங்கு
வாழ்வின் இறுதிக்குள்
ஒருமுறையேனும்
உறவுகளுடன் சங்கமிக்க...

ஒருங்கிணைத்த உறவுகட்கும்
ஒப்பில்லாச் சொந்தங்களுக்கும்
ஆயிரம் கோடி நன்றி...
நெகிழ்வுடனே நெகிழ்வுடனே
நெஞ்சாரக் கூறி நின்றோம்...

---கீர்த்தனா (கீதா ரவி)---