Monday, 17 December 2012

அன்பை யாசகமாய் !


நெஞ்சம் நிரப்பிய நேசப்பூக்கள் !
வஞ்சம் இல்லாக் கொஞ்சும் அன்பு !
துஞ்சாமற் காதல் கொண்டு !
வாஞ்சையுடன் வழங்கிய நாட்கள் !

பஞ்சமும் வந்ததோ - பாச
நெஞ்சுக்குள்ளே இன்று !
கெஞ்சும் விழி ஓடைக்குள்...
மிஞ்சாமல் பெருகும் நீருடன்!
தஞ்சம் கேட்கும் உன்னிடம்...
விஞ்சும் அன்பை யாசகமாய் !
எஞ்சிய காயங்களின் ரணங்கள்...
மிஞ்சின ஊமைக் கேவலுடன்...!

---கீர்த்தனா---

பக்குவம்...



புல் நுனியில் பக்குவமாய்
அமரும் பனித்துளி!
முள்ளின் மேல் பயமின்றி
அமரும் ரோஜா!
இயற்கையின் பக்குவம்...
நம்மிடத்தில் இல்லையோ?

---கீர்த்தனா---

Tuesday, 11 December 2012

மானிடக்காவலன்!

எட்டைய புரத்தில்...
கிட்டிய முத்தவன்!
கட்டியங் கூறியே

எட்டி உதைத்தான்...
புது ஜகம் படைக்க
சமூகத் தளைகளை!!!

பெண்ணுக்கும் ஒரு மனம்
உண்டெனக் கண்டு...
பொங்கி எழுந்த எம்
தோழன் அவன்!
கண்களில் ஈரமும்
நெஞ்சினில் வீரமும்
பெண்மைக்கு தந்திட்ட
வள்ளல் அவன்!

பாட்டினில் ஆடிய...
ரௌத்திரத் தாண்டவம்
நெஞ்சினில் இன்னும்
பெரு நெருப்பாய்...!

அக்கினிக் குஞ்சொன்று
கண்டான்...!
அக்கினிக் கவிஞனாய்
நின்றான்...!
அநீதிகள் எரித்தான்...
மானிடம் காக்க..
தீர்க்கம் நிறைந்த அனல்
தீப் பார்வையினாலே..!

நெஞ்சினுள் வாழ்ந்திடும்
அமர கவியாய்...என்றென்றும்
எம் ரௌத்திரக் காதலன்!
அருள் நிறை அன்புக் கவிஞன்!
மனம் நிறை மானிடக்காவலன்!

----கீர்த்தனா----

Friday, 7 December 2012

குளிரும் நானும்...

விடிந்தும் விடியவில்லை
குளிரின் தீண்டலிலே...!

போர்வைக்குள் சிறைவாசம்
மிகவும் பிடிக்கிறதே...!
பசி உணர்வும் மறந்து...
தலையணைக்குள் முகம் புதைத்து
தூங்கும் சுகம்...இதம் இதம்..!
இறைவன் தந்த இனிய வரம்!

வெள்ளைப் பூமழை பொழிய...
சாளரம் ஊடறத்துக் காட்சிகள் விரிய...
மெல்லிருளின் சிறு அணைப்பில்..
சுடுபானக் கோப்பை தனை...
இதழ்களிலே பொருத்திக் கொண்டேன்!

சில்லிட்ட மயிர்க்கால்கள்
குத்திட்டு எழுந்து நிற்க...
குளிரின் தழுவல் தனை
காதல் செய்தேன் இதமாக...
கதகதப்புப் போர்வைக்குள்
முழுதாகப் புதைந்து கொண்டே!

---கீர்த்தனா---

விழிநீரே....

வலி தீர்க்கும் சக்தி
இல்லையெனின்...
எதற்காக உடைப்பெடுத்து

ஓடுகிறாய் ?

சத்தம் இல்லாமல் தான்
இருக்கின்றேன்...
பாசத்தின் பிரிவு
மனதைப் பிழியத்தான்
செய்கிறது...
ரணமாக வலிக்கத் தான்
செய்கிறது...

உன்னிடம் உதவி கேட்டேனா ?
எதற்காக விழி தெறிக்க
இந்த நீரோட்டம்??

---கீர்த்தனா---

Monday, 3 December 2012

அழகியல் விதிகள்...















பூப்பூவாய் வெண்பனிப்பொழிவு!
பார்க்குமிடமெலாம் நீக்கமற நிறைந்து...
மென்துகள் குவியல் பூமகள் மடியில்!

புதைந்து, புரண்டு எழுந்திடும் ஆசை
கரைந்து மறையும் நொடிப்பொழுதினிலே...
கடும் குளிரின் மிரட்சியினாலே!

மேக மூட்டம் விலக்கி அங்கே...
துகள் மேற் சூரியக்கதிர் தழுவும் நேரம்...
இலட்சம் கோடி வைரப் பொடிகள்...
மின்னும் கண்களை நிறைத்த படியே!

கொட்டிய அழகினைக் கண்களால் விழுங்கி...
கோர்த்தேன் அழகிய ஆரம் தனையே!
ஆண்டவன் படைப்பின் அழகியல் விதிகள்...
மனதினை நிறைக்கும் இலவசச் சுகங்கள்!

---கீர்த்தனா---

Saturday, 1 December 2012

நேசத்தின் அளவீடு

கம்பீரமானவளே !
எங்கே தான் தொலைந்தாய்?
உன்னைக் காணாமல்
மூழ்கடிக்கும் காரணிகள் தான் என்ன?
நேசத்தின் ஆற்றுக்குள்
மூழ்கித் தான் தொலைந்தனையோ?
எழுகிறாய் வீழ்கிறாய்
அடிக்கடி ஏன் தடுமாற்றம்?

ஒருநாளில் மகிழுதல்...
பலநாளில் துவளுதல்...
நிலையில்லாமல்...
நிறம் மாறும் மனம்...
மாயத்தின் தளையோ..,
பாசத்தின் முடிச்சுக்கள்?

வலிகளின் கொள்ளளவும்
அன்பின் கொள்ளளவும்
அளவிடும் கருவி ஒன்று
இக்கணத்தில் இங்கு வேண்டும்
வேசமில்லா என் நெஞ்சுதனை
அளவிட்டுக் காட்டிவிட

மாயப் பிறப்பறுக்கும்...
அந்நாளில் தோன்றும்
நிம்மதியில் ஓர் உறக்கம்...
அந்நாள் வரை யாவருமே
இரையாகித் தான் ஆகவேண்டும்
போராட்டத்தின் பசியடக்க...!

---கீர்த்தனா---